September 18, 2010

பிளாஷ்டிக் தயாரிப்பது... பயன்படுத்துவது... எது குற்றம்?

கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, மேயர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்து 16.09.10 அன்று பேட்டியளித்தனர். ஜெர்மனி மக்களின் ஒத்துழைப்பால் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதையே மூவரும் திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறினர். நமது நாட்டில் மாநகராட்சி திட்டங்கள் பலன் தராமல் போவதற்கு மக்களே காரணம் என்பது போலிருந்தது அவர்களது கருத்து. பிளாஷ்டிக் பொருட்களை கோவையில் தடை செய்தீர்கள், ஆனால் அதை தீவிரமாக அமல்படுத்தவில்லை. இதற்கும் மக்கள் தான் காரணமா? என்று நான் கேட்டதற்கு கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, பிளாஷ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது, 20 மைக்ரான் அளவிலான பிளாஷ்டிக் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று மழுப்பலாக பதில்
கூறினார். அவரை இடைமறித்து கோவை கலெக்டர் உமாநாத் அளித்த பதில் தான் சூப்பர்...."பிளாஷ்டிக் பொருட்களின் உற்பத்தியை தடை செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நாம் தவறாக கருதுகிறோம். பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதை எப்படி டிஸ்போஸ் செய்கிறோம் என்பது தான் முக்கியமானது. பிளாஷ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. (தயாரிப்பதை தடுக்கவும் முடியாதோ?) இப்போதெல்லாம் மக்கள் துணிப்பையை எடுத்துக் கொண்டு மளிகைக்கடைக்கோ, தூக்குப்போசியை எடுத்துக் கொண்டு சிக்கன் வாங்குவதற்கோ வருவார்களா? நாம் தான் அப்படி செல்வோமா? ஆனால் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தும் மக்கள் அதை மக்காத குப்பை என்று தனியே பிரித்து போடவேண்டும்....' என்று பிளாஷ்டிக் பொருட்களின் மீதான தடை தேவையற்றது என்று பொருள்பட பேசினார். நிருபர்களுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது. நீலகிரி போன்ற ஒரு சில மாவட்டங்களில் பிளாஷ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களிடம் பிளாஷ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதைத் விட சில நூறு தயாரிப்பாளர்களை பிளாஷ்டிக்கிற்கு மாற்றுப்பொருள் தயாரிக்கச் செய்யலாம். துணிப்பைகள், காகிதப்பைகள் போன்றவற்றை மானிய விலையில் மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் விசைத்தறி தொழில் மேம்பாடு அடையும். வீணாகும் காகிதங்களும் பயன்படுத்தப்படும். இதுபோன்ற ஆலோசனைகளை சாதாரண மக்களே அரசுக்கு தெரிவிக்கும் போது ஐஏஎஸ் படித்த அதிகாரிகள் மட்டும் ஒரு சில பிளாஷ்டிக் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாகவே பேசிவருவது தான் ஆச்சரியமளிக்கிறது.

August 21, 2010

வீடியோ சுப்பிரமணியம் செய்தது சரியா, தவறா?

ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ எடுத்து லஞ்சம் வாங்கியதற்கான ரசீதைக் கேட்ட வீடியோ சுப்பிரமணியத்தை போலீஸ் படை ஒன்று வந்து அள்ளிச் சென்றது. பிறகென்ன.. வீடியோ சுப்பிரமணியம் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸ்
லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் துணைமேயர் மற்றும் சில பொது நல அமைப்புகளின் தலையீட்டால் வீடியோ சுப்பிரமணியம் என்கவுண்டரிலிருந்து தப்பினார் என்கிறார்கள் திருப்பூர்வாசிகள். வீடியோ சுப்பிரமணியத்தை கைது செய்ததும், மேற்கு மண்டல ஐஜி, திருப்பூர் எஸ்.பி. முதற்கொண்டு வீடியோ சுப்பிரமணியம் வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்பவர் அதனால் கைது செய்துள்ளோம் என்று பேட்டியளித்தனர். சில பத்திரிக்கைகளில் அதுவும் பெரிதாக வெளியிடப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக வீடியோ எடுத்து அவர்களிடம் ரசீது கேட்கும் வீடியோ சுப்பிரமணி, வணிகவரி அதிகாரிகள் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை பலரை பிடித்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளுக்கும் முறைப்படி புகாரும் அனுப்பி வைத்திருக்கிறார்.
வணிக வரி அதிகாரிகள் மீது வேறு வழியின்றி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் லஞ்சம் வாங்கி பிடிபட்ட போலீசார் மீது இதுவரை உயரதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக வணிகவரித்துறை அதிகாரிகளிடம் புகாரைப் பெற்று வீடியோ சுப்பிரமணியத்தை ஏற்கனவே ஒரு முறை கைது செய்து தாக்கியதோடு, சிறையிலும் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் வீடியோ சுப்பிரமணியம் தன் நடவடிக்கையை விடவில்லை.
இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரில் யார் தவறு செய்தாலும் அதை கேள்வி கேட்டு தண்டனை கொடுக்கும் அதிகாரம் உள்ள போலீஸ்துறைக்கு, தனது துறையைச் சேர்ந்தவர்கள் தவறை, யாராவது தட்டிக்கேட்டால் பொறுக்கமுடிவதில்லை என்பதற்கு வீடியோ சுப்பிரமணியத்தின் மீதான போலீஸ் நடவடிக்கையே சாட்சி என்பதே என் கருத்து. வீடியோ சுப்பிரமணியம் பிளாக் மெயில் செய்தாரா இல்லையா என்ற விவகாரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் நேர்மையான எந்த அரசு ஊழியரும், அதிகாரிகளும் அவரைப்பார்த்து பயந்ததில்லை என்பதே திருப்பூர் அறிந்த உண்மை.
திருப்பூரில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் புறையோடிக்கிடக்கிறது. திருப்பூரில் பணியாற்றும் வாய்ப்பிற்காக பலர் பல லகரங்களை செலவு செய்ய முண்டியடிக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கே பல முக்கியத்துறைகளிலிருந்து பட்டுவாடா நடக்கிறது என்பதும் ஊரறிந்த உண்மை. இந்த நிலையில் தங்களது முதலீட்டை பல மடங்காக திரும்ப பெற வேண்டும் என்ற வெறியில் வரும் அதிகாரிகளுக்கு வீடியோ சுப்பிரமணியம் முட்டுக்கட்டை போடுகிறார் என்பதும் திருப்பூர்வாசிகளுக்குத் தெரியும்.
வீடியோ சுப்பிரமணியத்தின் மீது பத்திரிக்கைதுறையில் இருக்கும் பல நண்பர்களுக்கும் கோபம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வீடியோசுப்பிரமணியம் ஒரு குறிப்பிட்ட சில பத்திரிக்கைகளுக்கு மட்டும் செய்தியை அளிக்கும் மனம் படைத்தவராக இருந்தார். தான் எடுக்கும் வீடியோ, அரசியல் ஆதாயங்களுக்காகவோ, அல்லது பணம் சம்பாதிக்கவோ பயன்படுத்தப்பட்டுவிடாக்கூடாது என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்திருக்கலாம்.
நான் கூட இரண்டொரு முறை தான் அவரை சந்தித்திருக்கிறேன். பல செய்திகளை எழுதியிருக்கிறேன். எனது அனுபவத்தில் வைத்து, வீடியோ சுப்பிரமணியத்தின் நடவடிக்கையால் பல ஊழல் அதிகாரிகள் கிலி பிடித்து திரிந்துவருகின்றனர் என்பதும், இதுவரை வீடியோ சுப்பிரமணியம் பிளாக் மெயில் செய்தார் என்று ஒரு புகார் கூட வரவில்லை என்பதும் உண்மை. பிளாக்மெயில் புகார் வந்திருந்தால் போலீசார் அதன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யாமல் இருந்திருப்பார்களா?
வீடியோ சுப்பிரமணியம் கைது குறித்து பேட்டியளித்த உயரதிகாரிகள், பிளாக் மெயில் புகார் ஒன்றை கூட ஆதாரமாக காட்டவில்லை... எது எப்படியோ லஞ்சம், ஊழலால் அனுதினமும் மக்கள் அல்லல்படுகின்றனர்.
சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தட்டிக்கேட்க, தடுக்க தனி மனிதனுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் முழு சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆனால் அதைப்பயன்படுத்தி ஊழலை தடுக்க தனிமனிதன் முயன்றால், அவனை குற்றவாளியாக்கி, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் கோரம் தான் நடக்கிறது. ஆனாலும் லஞ்சத்திற்கு எதிராக போராடவேண்டும் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் ஏற்பட்டிருப்பதை யூடியுப்பில் பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வீடியோவை வெளியிட்ட இரு வாரங்களுக்குள் அதை 5000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருப்பதிலிருந்தும், வீடியோ சுப்பிரமணியத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருப்பதிலிருந்தும் அறிய முடிகிறது.

August 18, 2010

வில்லங்கவரி

சக பத்திரிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சுவராஸ்யமான அனுபவங்களை கூறினார்கள். அவற்றில் இரண்டு மட்டும் இங்கே... *ஒரு ஆண்டு ஆகிறது அந்த சம்பவம் நடந்து. கோவை மாநகரில் நோ பார்க்கிங் பகுதியில் ஒரு பெண்மணி காரை நிறுத்தினார். கடமைவீரர்களாக சென்ற காவல்துறை காரின் சாவியை பறித்துக் கொண்டது. காரின் சாவியை திரும்ப பெற அந்த பெண்மணி போராடியும் பலனில்லை. இந்த தகவல் நிருபர்களை எட்ட, நிருபர் படை அங்கே விரைந்தது.
ஒரு மணிநேர போராட்டம், நிருபர்களின் வருகை இவற்றிற்கு பின்னர் காரின் சாவியை மீட்டுத்திரும்பினார் அந்த பெண்மணி. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் இது செய்தியாக வெளிவந்திருந்தது. அனைத்து நாளிதழ்களிலும் ஒரே மாதிரி செய்தி வந்திருக்க... ஒரு நாளிதழில் மட்டும் கார் பெண்மணியின் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு வரி சேர்க்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை படித்ததும் கார் பெண்மணி கொதித்து போனார். தனது தந்தையை அழைத்துக் கொண்டு, செய்தி வெளிவந்த அனைத்து பத்திரிக்கைகளுடன் குறிப்பிட்ட நாளிதழின் அலுவலகத்திற்கு சென்று செய்தி ஆசிரியரைச் சந்தித்து இப்படி எழுதிவிட்டீர்களே.... என்று கோபத்துடனும், அழுகையுடனும் அவர் சண்டைக்கு போனார். அவருடன் வந்த அவரது தந்தையின் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். என்ன நடந்தது என்று செய்தி ஆசிரியருக்கு புரியவில்லை.
சம்மந்தப்பட்ட நிருபரை வரவழைத்தார். விசாரணை நடந்தது. "சார் நான் ஸ்பாட்டிற்கு சென்று தான் எழுதினேன். இதில் தவறு ஏதும் இல்லை' என்றார் அந்த நிருபர். "ஐயா என் மகள் கணவனை பிரிந்து 3 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் இப்படி எழுதலாமா? என் மகள் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாதபடி செய்துவிட்டீர்களே...' என்று தந்தை புலம்ப... அப்போது தான் நிருபருக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்தது. "கார் சாவியை பெற ஒரு மணிநேரம் போராடிய அந்த பெண்மணி கர்ப்பிணி என்பது குறப்பிடத்தக்கது...' என்ற வரி தான் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிருபருக்கு புரிந்து போனது. எடிட்டரும் மறுப்பு செய்தி வெளியிடுவதாக சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நிருபரை பிடிபிடியென பிடித்துக் கொண்டார். "சார், அந்த பெண்ணிற்கு வயறு பெரிதாக இருந்தது அதனால் தான் கர்ப்பிணி என்று நினைத்து எழுதிவிட்டேன்...' என்று நிருபர் கூறிய விளக்கத்தை எடிட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை. " நீ, ஏன் வயிற்றை பார்த்து எழுதுகிறார். செய்தி எடுக்கச் சென்றால் முகத்தை மட்டும் பார்த்து செய்தி எழுது...' என்று நீண்ட அட்வைஸ் கொடுத்து நிருபரை வறுத்தெடுத்தார்.
* கோவை முன்னாள் மேயர் ஒருவர் இமாச்சலபிரதேசத்திற்கு அலுவல் ரீதியான சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பினார். அவரை நிருபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பயணம் எப்படி இருந்தது என்று கேட்க.... அந்த நிருபருடன் நன்கு பழக்கம் வைத்திருந்த மேயரும், இந்த பயணமே வேஸ்ட், லட்சக்கணக்கில் பணம் செலவானது தான் மிச்சம் என்று உண்மையை மறைக்காமல் கூறிவிட்டார். அப்புறம் என்ன நிருபரும், மேயரின் இமாச்சல பயணம் வேஸ்ட் என்று எழுதிவிட்டார். அவ்வளவு தான் மேயர் கிளம்பி நேராக நாளிதழ் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். எங்கோ அசைன்மென்டிற்கு சென்றிருந்த அந்த நிருபர் உடனடியாக வரவழைக்கப்பட்டார். எடிட்டர் முன்பு விசாரணை நடந்தது. "மேயர் தான் இதைக் கூறினார்... அதனால் எழுதினேன்...'இது நிருபர். "அவர் கூறினால், அதை அப்படியே எழுதிவிடுவதா?'இது எடிட்டர். "இவர் எழுத வேண்டாம் என்று கூறவில்லை'நிருபர். "நான் எழுதும்படி கூறவில்லை'மேயர். "என்னையா நீ செய்தி எழுதுகிறாய்... இரண்டு நாள் செய்தி எடுக்க செல்லவேண்டாம்...' இது எடிட்டர் அளித்த தண்டனை. "சில நேரங்களில் உண்மையை எழுதினாலும் தவறு தான்..' இது நீதி!

காங்கிரஸ்... நல்ல காங்கிரஸ்...!

மிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சற்று வித்யாசமான அனுபவம் தான். 16.8.10 அன்று கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
ராகுல்காந்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக கோவை ஜெயில் மைதானத்திற்கு வாடகையை இதுவரை செலுத்தாமல் இருப்பது
, அடுத்த தேர்தல் கூட்டணியிலாவது அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு முன்பே ஒப்பந்தம் போடுவது, கோஷ்டி பிரச்சனை என்று காட்டமான கேள்விகள் கையில் இருந்தாலும் சில கேள்விகளுக்கு பின்னர் கேட்கலாம் என்றிருந்தோம்.
ஆனால் துவக்கத்திலேயே நூற்றாண்டுவிழா கூட்டம் ஜெயில் மைதானத்தில் நடக்கும் என்று அவர் அறிவிக்க வேறு வழியில்லாமல் முதல்கேள்வியாக, "ஜெயில் நிர்வாகத்திற்கு பழைய பாக்கியை செட்டில் செய்யாமல் இருப்பது ஏன்?' என்று கேட்கவேண்டியதாயிற்று.... ஆனால் அவர் அளித்த பதிலைத்தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
"அரசு விழா நடத்தினால் அரசு வாடகை செலுத்தும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினால் அரசியல் கட்சிகள் தான் வாடகை செலுத்த வேண்டும்.... இது எங்களுக்கு தெரியும். இதில் தவறு நேர்ந்திருந்தால் சரி செய்யப்படும். முதலில் அவர்கள்(ஜெயில் நிர்வாகம்) தாக்கீது அனுப்புவார்கள்... அது கிடைத்தவுடன் நாங்கள் கட்டணத்தை செலுத்தவிடுவோம். எங்கள் கட்சி பாரம்பரியம் மிக்கது. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவர்கள் தாக்கீது அனுப்பியுள்ளார்களா என்பது குறித்து கூற முடியாது...' எவ்வளவு தெளிவான பதில். அமைச்சரவை இடம் குறித்து அடுத்த கேள்வியை கேட்டதற்கு பக்கத்தில் இருந்த எம்.எல்.ஏ. கந்தசாமி உட்பட பலர் சிரித்தாலும், "தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இது குறித்து சோனியாகாந்தி முடிவு செய்வார்...' என்றே பதில் அளித்தார் தங்கபாலு. இது போன்ற எத்தனை கேள்விகளை வீசினாலும் சிரித்தபடியே பதில் அளித்து சமாளித்தார் அவர். ஆனால் என்ன, நியூர் ஒன்னும் தேரலை என்று பல நிருபர்கள் புலம்பியபடி சென்றனர்.
கொசுறு: அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்கள் பலத்தை கோவையில் காட்டிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியிருப்பதால் பெருங்கூட்டத்தை கூட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அந்த நம்பிக்கை தங்கபாலுவுக்கே இல்லை போலும்.... எத்தனை பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று கேட்டதற்கு, மற்ற கட்சிகளைப் போல மாநில அளவில் ஆட்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தமாட்டோம். கோவை மாநகர காங்கிரஸ் சார்பில் உண்மையான காங்கிரஸ் கட்சியினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சற்று பாதுகாப்பாக பதில் அளித்தார். பின்னர் வாசன் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது உண்மை நிலை வெளிபட்டது....
"சி.எஸ். நூற்றாண்டுவிழா என்று கூறி அனைத்து தரப்பினரையும் சேர்த்து கூட்டம் நடத்த தங்கபாலுவும், ப.சிதம்பரமும் திட்டமிட்டுள்ளனர். பிரணாப் முகர்ஜி வருவதால் அவருக்கு நெருக்கமான வாசனும் வந்துவிடுவார். அதனால் எங்கள் ஆதரவில் கூட்டத்தை திரட்டி தங்களுக்கு செல்வாக்கு உள்ளது போல மேலிடத்தில் காண்பிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஏமாறமாட்டோம். வாசன் வந்தால், நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்வோம்...' என்றார் அவர். தலை சுற்றியது எனக்கு!

August 3, 2010

அதிமுகவா, திமுகாவா?

செம்மொழி மாநாடும் அதைத்தொடர்ந்து அதிமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம், அதில் கூடிய கூட்டம், அதற்கு போட்டியாக திமுக நடத்திய பொதுக்கூட்டம், அதன் எதிரொலிகள் போன்றவை சமீபகால கோவை பத்திரிக்கை உலகின் ஹாட் டாபிக்குகளாக இருந்தது. செம்மொழி மாநாட்டிற்கு கூடிய கூட்டம் தங்களுக்கு ஓட்டாக குவியும் என்று திமுக எதிர்பார்த்ததோ இல்லையோ அதிமுக வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தியது உண்மை. அதனால் தான் அவசர அவசரமாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 13 ம் தேதி கண்டன கூட்டம் நடந்தது. இதில் ஜெயலலிதாவே எதிர்பார்க்காத அளவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்தனர். இது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழவதும் அதிமுகவிற்கு எழுச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த ஜெயலலிதா களம் இறங்கிவிட்டார். கோவையில் கூடிய கூட்டத்தை அறிந்த ராகுல்காந்தி, அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் எண்ணத்திற்கு வந்துவிட்டதாக த
கவல்கள் பரவின. இதனால் அவசர அவசரமாக அதிமுகவிற்கு போட்டியாக திமுகவும் பொதுக்கூட்டம் ஒன்றை (நேற்று 2.8.2010 அன்று) அதே வ.உ.சி. பூங்காவில் நடத்தியது. ஆனால் பலன்தான் எதிர்மறையாக போய்விட்டது. அதிமுக கூட்டத்திற்கு குறைந்தது 2 லட்சம் பேர் வந்திருப்பார்கள். ஆனால் திமுக கூட்டத்திற்கோ 60 ஆயிரத்திற்கு மேல் இல்லை. ஜெயலலிதா பேசும் போது ஒட்டுமொத்த கூட்டமும் மைதானத்திற்குள் வர முண்டியடித்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கருணாநிதி பேசும் போது பாதி மைதானம் காலியாகிவிட்டிருந்தது. ஜெயலலி
தா கண்டன கூட்டத்தில் மைதானம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்து நின்றிருந்ததோடு, அவினாசிரோடு, ஸ்டேடியம் ரோடு என்று மைதானத்தை சுற்றி அனைத்து பகுதிகளிலும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. திமுக கூட்டத்தில் நடுரோட்டில் டிஜிட்டல் போர்டு வைத்து பொதுக்கூட்டத்தை ஒளிப்பரப்பி ரோடு எங்கும் மக்கள் வெள்ளம் இருப்பது போல காட்ட முயன்று தோற்றார்கள். திமுக கூட்டத்திற்கு கூட்டம் வராததற்கு திமுகவில் நடக்கும் உட்கட்சிபூசல், விலைவாசி உயர்வால் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புபோன்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால்
முதல்வர் கருணாநிதியோ பத்திரிக்கைகள் மீது வெறுப்பை உமிழ்ந்து பேசுகிறார்.

July 20, 2010

"படி...படி...''"குடி....குடி....''

அரசியல் தலைவர்களில் சிலர் நல்ல கருத்துக்களை அவ்வப்போது சொல்வார்கள். 18.07.10 அன்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியது அந்த ரகம்:
"தி.மு.க. அரசு காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறது....
ஊர் தோறும் பள்ளிகள் ஆரம்பித்து ""படி...படி...'' என்றார் காமராஜர். கருணாநிதியோ வீதிகள் தோறும் டாஸ்மாக் கடைகளை ஆரம்பித்து ""குடி....குடி....'' என்கிறார். இவருக்கு காமராஜர் பிறந்தநாள் கொண்டாட என்ன தகுதி இருக்கிறது.....'

June 29, 2010

செம்மொழி மாநாடு: ஒரு பத்திரிக்கையாளன் பார்வையில்!

முதல்வர் கருணாநிதியின் கனவு அவர் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் மாநாட்டிற்கு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். அதனால் தான் தமிழகம் முழுவதலிருந்தும் அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் அதே "பார்முலாவை' பயன்படுத்தி முதல் நாளில் ஆட்களை வரவழைத்தனர். ஆனால் தி.மு.. கட்சிக்கொடிகள் கண்ணில் தென்படாமல், ஊடகங்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மாநாட்டை பற்றி மக்களிடம் கொண்டு சென்ற விழிப்புணர்வு மக்கள் கூட்டத்தை வரவழைத்துவிட்டது. கோவையில் யார் கண்காட்சி நடத்தினாலும் மக்கள் கூட்டம் குவிந்து வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பார்ப்பது வழக்கம். அதிலும் ஊடகங்களில் தொடர்ந்து ஆறு மாதங்களாக வெளிவந்த செய்திகள், அலங்கார ஊர்திகள் குறித்து தினந்தோறும் வெளியிடப்பட்ட எதிர்பார்ப்புகள் மக்களை அலை அலையாக வரச்செய்தன. ஆனால் இவர்களது கவனம் முழுவதும் கண்காட்சி, உணவு அரங்கு, அலங்கார ஊர்தி ஆகியவற்றை சுற்றியே இருந்தது. மாநாட்டு பந்தலுக்குள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மட்டுமே தென்பட்டனர். 5 நாட்களில் குறைந்தது 10 லட்சம் பேர் கண்டு களித்திருப்பார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகளில் அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே முதல்வர் கருணாநிதியின் புகழ் பாடிய நிகழ்ச்சிகள் தான் ஏராளம். பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளார் முதல் திரைப்பட கவிஞர்கள் வரை அனைவருமே கருணாநிதியின் புகழ் பாடினார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சிறப்பு கருத்தரங்கில் குட்டி குட்டி கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்ததால் அவர்கள் அடித்த ஜால்ரா சத்தத்தை முதல்வராலேயே தாங்க முடியாத அளவிற்கு போனது. ஆனாலும் சத்தம் குறையவில்லை. மாநாடு முழுவதுமே இதை காணமுடிந்ததால் கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை காது கொடுத்து கேட்க முடியவில்லை. ஆய்வரங்கம் நிகழ்ச்சிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பங்கேற்பாளர்கள் வரவில்லை என்பது உண்மை. தமிழ் தெரியாத பலரையும் தமிழறிஞர்களாக புகழப்பட்டதும் நடந்தது. இணைய கருத்தரங்கில் பெரும்பாலும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஒன்றிரண்டு கருத்தரங்குகள் நல்ல கருத்துக்களை கொண்டிருந்தாலும் கேட்கத் தான் ஆளில்லை. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது நல்ல பலனை தந்தது. ஆனாலும் சில அதிகாரிகள் டுபாக்கூர் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என்று தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கியிருந்தது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 20 ரூபாய் பெருமானமுள்ள உணவை 60 ரூபாய்க்குவாங்கி அதை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தது, வளர்ச்சிப்பணிகள் தரமில்லாமல் அவசர கதியில் முடிக்கப்பட்டது, மாநாட்டு அரங்கங்களில் டன் கணக்கில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது, அலங்கார ஊர்திகள் முதல் அனைத்து ஏற்பாட்டிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் "அள்ளியது'... என்ற குறைகளையெல்லாம் விட்டுவிட்டு பார்த்தால் மாநாடு வெற்றி தான். உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு அரசியல் நோக்கோடு நடத்தப்பட்டதல்லை, அது தமிழ் மொழிக்கான அரசியல் சார்பற்ற மாநாடு என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்ததை மக்கள் அப்படியே தான் ஏற்றுக் கொண்டு மாநாட்டிற்கு வந்தனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். ஆனால் இது தங்கள் கட்சிக்காக, ஆட்சிக்காக கூடிய கூட்டம் என்று கருதப்படுமானால் அது ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதே உண்மை. சூட்கேஸ்க்குள் என்ன இருக்கு? மாநாட்டின் மிகப்பெரிய வெற்றிக்கு பத்திரிக்கையாளர்களும் ஒரு காரணம். அதனால் பத்திரிக்கையாளர்களை கவனிக்காமல் இருப்பார்களா? சென்னையிலிருந்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு ( அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தவிர) ஒரு சூட்கேஸ், துண்டு, 2 ஜிபி மெமரி கார்டு ஆகியவற்றை அன்பளிப்பாக இறுதிநாளன்றே செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் விநியோகித்தனர். சூட்கேஸ்க்குள் "கனமாக' இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "காற்று' தான் காத்திருந்ததாக கேள்வி. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று இரவு முதல் விநியோகம் நடக்கிறது. சூட்கேஸ், துண்டு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்திலிருந்து பகிரங்கமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாங்கிக் கொள்ளாத நிருபர்களின் பங்கை என்ன செய்வது என்ற குழப்பமும் செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது. இதற்கிடையே சென்னையிலிருந்து கோவை பத்திரிக்கையாளர்களுக்கு போன் வந்தவண்ணம் உள்ளது. அதில் பல குரல்களும் கேட்கும் ஒரே கேள்வி, "உங்களுக்கு சூட்கேஸ்க்குள் லேப்டாப் வைத்து கொடுத்தார்களாமே உண்மையா?' என்பது தான் அது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை சொல்லக்கூட எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் வேண்டும் போல இருக்கிறது.

June 23, 2010

இன்று துவங்குகிறது... என்று தீரும்?

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தானும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திவிட வேண்டும் என்று முயற்சித்து, அறிவித்து....ஈழத்தில் லட்சக்கணக்கானோர் பலியாகி, பலர் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் போது தமிழ் மாநாடா என்று எதிர்ப்புகள் கிளம்பியதால் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார் கருணாநிதி.இந்த மாநாட்டில் தமிழுக்கு பலன் இருக்காது, கருணாநிதியின் புகழ்பாடுதல் தான் நடக்கும் என்று மாநாட்டு எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனாலும் அவசர கதியில் கோவை கொஞ்சம் அழகூட்டப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தரத்தைப் பற்றி சிந்திக்காவிட்டால் அடுத்த மழை வரும் வரை கோவையின் முக்கிய சாலைகள் பளபளக்கும்.... "பிளாட்பாரங்களில் டைல்ஸ்' ஒட்டிக்கொண்டிருக்கும். மாநாடு முடியும் வரை வர்த்தக நிறுவனங்களின் ஆங்கில பெயர் பலகைகளின் மீது தற்காலிகமாக ஒட்டப்பட்டுள்ள தமிழ் நிற்கும்.ஆனால்....* தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற நிலை மாறும் நாள் எந்நாள்?* பனிரெண்டாவது படித்த மாணவனுக்கு தவறில்லாமல் தமிழ் எழுதப்படிக்கத் தெரியவில்லையே... இந்த இழிநிலை மாறும் நாள் எந்நாள்?*தமிழ் வாழ்க என்று கோஷம் போடும் தலைவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் கொலைக்கு எப்போது தடை வரும்?* தலைவர்களின் வாரிசுகள் எப்போது தமிழ் வழிக்கல்வி பயிலுவார்கள்?* தமிழர்களின் வரிப்பணத்தை விரயமாக்கி, தமிழ் மாநாட்டு பணிகளில் கூட ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் இன்னொரு முகத்தினை அப்பாவி தமிழன் என்றுணர்வான்?இன்னும் எத்தனையோ கேள்விகள் என் மனதில் எழுந்தவண்ணம் உள்ளது. இதற்கு யார் பதில் உரைப்பார்!

June 11, 2010

நிருபருக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதம்

கௌரவம் கட்டுரையை படித்துவிட்டு சக நிருபர் ஒருவர் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும், ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை உங்கள் பார்வைக்கு இங்கே வெளியிட்டுள்ளேன்.. பத்திரிக்கையாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் நடந்து கொண்டவிதம் குறித்த தங்கள் மடலைக் கண்டேன்.மிரட்டலின் மூலம் மட்டுமே மரியாதையைப் பெற்றுக் கொள்வது-அல்லது.பறித்துக் கொள்வது என்பது சில பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாக உள்ளது என்பது வேதனையளிக்கிறது. ஆனால்,இன்னும் சில பத்திரிக்கையாளர்கள் இதைவிட மோசம்..மரியாதையைப் பெறுவதற்காக மிரட்டுவது என்பது மட்டுமல்ல,மாமூலைப் பெறுவதற்காகக் கூட,மிரட்டுகிறார்கள் என்பதும் நடைமுறையில் உள்ளது. சாட்சிக்காக இத்துடன் ஒரு ஆடியோவை அனுப்பியுள்ளேன்.கேட்டுவிட்டு அதிர்ச்சியடையுங்கள் அல்லது வேதனைப்படுங்கள்..,அதோடு நிற்காமல் இது குறித்த உங்கள் கருத்துக்களை தங்கள் வலைப்பூவில் கடுமையாக பதிவு செய்யுங்கள். உரையாடலின் மேலோட்டமான விபரம்., பொள்ளாச்சியிலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும்,மாதமானால் ஒன் டீ-அதாவது ஒரு ஆயிரம் ரூபாய் தந்துவிடுகிறார்களாம்.ஆனால் பெரிய அளவில்,திருட்டுப்போன நகைகள் அல்லது பொருட்களைப் போலீசார் கண்டுபிடித்து,அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கும்போது,குறிப்பிட்ட சதவீதம் பொருளாகவோ,பணமாகவோ,போலீசார் எடுத்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளமாகவும்,அதிலிருந்து ............... நாளிதழ் நிருபருக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதம் மாமூல் தரவேண்டுமாம்.காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏ.டி.எம்.மிலிருந்து எடுத்துதரச் சொல்லவில்லையாம் அந்த நிருபர்.போலீசாரின் மீதுள்ள கருணையால்,அள்ளித்தரவேண்டாம் கிள்ளித்தாருங்கள் என்று கேட்கிறார்.அது வேண்டுகோளா..? அல்லது மிரட்டலா..,,? என்று இதற்குப்பின் நடைபெற்ற உரையாடலின் துணையோடுதான் கண்டுபிடிக்கமுடியும். வேண்டுகோள்..! போலீசார்தான் மாமூல் வாங்குவது வாடிக்கையான ஒன்று.ஆனால் போலீசாரிடமே மாமூல் வாங்குவது என்பது..அடேங்கப்பா..நினைத்துப்பார்த்தால்,திகைப்பாக இருக்கிறது. இதனைக்கேட்டு விட்டு,பிரபல பத்திரிக்கையின் பொள்ளாச்சி நிருபர் ..................இங்குள்ள சப்இன்ஸ்பெக்டர் .................என்பவரோடு நடத்திய உரையாடலை-பெயரைக்குறிப்பிடாமல்,பூடகமாக-செய்தியாக வெளியிட்டாலும் சரி. கிருமிகளை ஒழிப்பதை கூடுமானவரை நாமும் செய்யவேண்டும் என்பதே எனது ஆவல். அன்புடன்.....********** ........................

June 10, 2010

கௌரவம்!

கோவையில் இன்று(10.6.2010) நடந்த பத்திரிக்கையாளர்கள் தொடர்பான இரு வேறு சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன். சம்பவம் 1.:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செம்மொழி மாநாடு விருந்தோம்பல் குழுவின் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ..வேலு தலைமையில் நடந்தது. 5 நிமிடம் போட்டோ எடுக்க மட்டும் வந்தால் போதும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் பணியை முடித்து அரங்கை விட்டு வெளியேறும் போது கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு வழங்க டீஸ்னேக்ஸ் தயாராக இருந்தது. சில பத்திரிக்கையாளர்கள் ஆர்வத்துடன் டீ குடிக்க (அழைக்காமலேயே) சென்றனர். அங்கிருந்தவர்களோ உங்களுக்கு டீ கிடையாது என்று முகத்தில் அடித்தாற்போல கூறி விரட்ட டீ விரும்பிய பத்திரிக்கையாளர்கள் முகத்தில் ஆடவில்லை. இதைப்பார்த்த உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து அழைத்துச்சென்று நிலமையை சமாளித்தார். சம்பவம் 2.:கோவை புறநகர் மாவட்ட காவல் நிலையம் ஒன்றிற்கு பிரபல வாரப்பத்திரிக்கைகளைச் சேர்ந்த இரண்டு நிருபர்கள் சென்றனர். அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் இருவரையும் அழைத்து அன்புடன் அமரவைத்து பேசினார். ஏனோ அவசர அவசரமாக இரு நிருபர்களும் வெளியே கிளம்பி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற இரண்டாவது நிமிடத்தில் சப்இன்ஸ்பெக்டரின் செல்போன் அலறியது. அதில் பேசியவர் சற்று முன் வந்து சென்ற நிருபர்களில் ஒருவர். "யோவ்.... நீ என்ன பெரிய .ஜியா? முன்னணி பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர்கள் வந்திருக்கோம். உட்கார்ந்துகிட்டே கை குலுக்குற.... எங்களைப்பத்தி உனக்குத் தெரியுமா? ஐஜி கிட்ட பேசி உன்னை உண்டு இல்லைனு செஞ்சுடுவோம்....' நிருபர்களின் இந்த அதிரடி எஸ்ஐயை கலங்க வைத்துவிட்டது. தான் செய்தது தவறா சரியா என்றும் கூட தெரியாமல், .ஜி தன் மீது எடுக்கும் நடவடிக்கை குறித்தே அவரது கவலை இருக்கிறது. மேற்காணும் சம்பவங்களில் இருந்து இரண்டு கேள்விகள் எனக்கு எழுகிறது.... கவுரவம், மரியாதை என்பது நமது நடத்தையின் மூலம் கிடைப்பதா அல்லது மிரட்டி பெறுவதா?

June 4, 2010

மன்னிப்புக் கேள்

எழுத்தாளர் சாரு நிவேதிதா; 'நீயா நானா' கோபிநாத் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனியால் தான் எப்படி அவமானப்பட்டேன் என்பது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை............
மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயாநானாநிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும்புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன். இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள்தேவையாஇல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும்தெரியாது. இத்தலைப்பின் உள்குத்துஎன்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றிஒரு டாக் ஷோ செய்ய வேண்டும்என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டுமாங்காய் அடிக்கநினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரானஆண்டனி. இதைஅந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான்என்னால் உணரமுடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீதுஇருந்த பகையை இந்தநிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது. கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயாநானாநிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும்கொடுக்கவில்லை. இதுபற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழிவாங்கும்நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில்என்னிடம்கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத்பிரதர்ஸின்இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னைமடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால்என்னால்அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை. என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயேநண்பர்கள்என்னை ட்யூப் லைட் என்பார்கள். நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும்கோபிநாத்தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்றுகவனித்தால்தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கிசெருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும்ஆண்டனியின் கேள்விக்கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான்கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒருபொம்மைதான். அதைஇயக்குபவர் ஆண்டனி. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாககெரில்லாத்தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்துவிழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள்என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின்பின்னால்போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசைதிருப்பியதற்காகவருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான்ஆமாம்என்றேன். விடாமல் தொடர்ந்துஅதற்காக உங்கள் வாசகர்களிடம்மன்னிப்பு கேட்டுக்கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான்என்னதவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியேபுரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவாமன்னிப்புக்கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான்என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக்கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம்பிரம்மச்சரியத்தைபோதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்துகொண்டார் என்றகாரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின்பார்ட்னரா? எனக்கும்அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது? ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான்நித்யானந்தாவை நம்பிஏமாந்தகதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாகஎழுதிக்கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால்கோபிநாத்மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுஎன்னைமுட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒருகொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத்தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இதுசம்பந்தமாக என்வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கானமின்னஞ்சல்கள் வந்துள்ளன. பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்றவார்த்தையைப்பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின்மற்றொருவிருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னைஅடித்தார்கள். பவா ஒருகம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடுசேர்ந்து கொண்டு நான்வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார். ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அதுஉண்மையாகிவிடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம்செய்துகொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம்செய்துகொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்துவிடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிகவெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும்என்றுநினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்கவேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத்தோன்றும். அதனால்நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான்நம்புவேன். அதுவும்ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதுஎப்படிப் பொய்யாகஇருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித்திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன். இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியஅவசியம்எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்திஅல்லவாஎங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில்நக்சல்பாரிஇயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான்என்பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்குமுன்புஉலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில்கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம். பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யாவீழ்ந்தபிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள்வெளியேதெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறதுபுள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்டகம்யூனிசத்தால்ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின்சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில்இரண்டுலட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பியநாடுகளிலும்கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காகயாராவதுமன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச்சாமியார்கள்ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள்சுயநலத்துக்காக மக்களைஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம்என்று சக மனிதர்களைக்கொல்லவில்லையே? தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்கவேண்டியஅவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரைநாம்நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம்ஒருஅனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தஊடகங்கள்குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில்நித்தியின்தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியைகுமுதம்சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின்பிரசங்கம்விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியைபிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம்மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும்சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டுகிழிந்தால் இந்தநிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரியதொகைகிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள்வாய்திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான்தமதுகோரைப் பற்களைக் காட்டுவார்கள். மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும்பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றுசொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையேநம்பிக்கையில்தான்ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒருநபரையோ நாம்நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்ததோற்றம்பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான்குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக்கேட்பதற்கெல்லாம்ஒன்றுமே இல்லை. ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில்முகம்தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இதுஎன்றுஇந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன். (இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள்ஷங்கர்போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப்பரவலாகவாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின்பார்வையாளர்தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால்என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும்என்றுநினைக்கிறேன்). ”

May 31, 2010

சுட்டெரிக்கும் வெய்யிலில் 3 மணிநேரம்!

நீ.....ண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் பிரச்சனைக்காக மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டெரிக்கும் வெய்யிலில் 3 மணிநேரம் அமர்ந்து போராடிய காட்சியை காணமுடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் சேவைக்காக வந்துள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏ.சி. அறைகளுக்குள்ளும், கார்களுக்குள்ளும் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசிக் கொடுமையிலும், வியர்வை நாற்றமிகுந்த பஸ் நெரிசல்களிலும், வெய்யில், மழைகளிலும் அவதிப்படும் மக்களின் துயரங்கள் இவர்களை நெருங்குவதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வைத் தர எண்ணாமல் இலவசங்களை அரசியல்வாதிகள் அள்ளி எறிகிறார்கள். இவர்கள் நடத்தும் போராட்டங்களும் உடலை வறுத்தும் அளவிற்கு இல்லாமல், மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கும் வகையில் மட்டும் இருக்கும். சற்று வித்யாசமாக கோவை பேரூர் சட்டசபைத் தொகுதி உறுப்பினர் வேலுமணி, தனது தொகுதி குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் உமாநாத்திடம் மனு கொடுக்க வந்தார். வாரத்தில் முதல் வேலை நாளில் மக்களிடம் மனு பெற வேண்டும் என்பது விதிமுறை என்றாலும் செம்மொழி மாநாட்டின் வேலைப்பளுவில் மக்கள் குறை கேட்க மாவட்ட ஆட்சியருக்கு நேரமில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் தான் மனுக்களை பெறுகிறார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாலே வேலை நடப்பது சிரமமான காலத்தில் டி.ஆர்.ஓவிடம் மனு அளிக்க எம்.எல்.ஏ.வேலுமணி விரும்பவில்லை. செம்மொழி மாநாட்டை காரணம் காட்டி மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளைக் கூட அதிகாரிகள் கண்டு கொள்ளாதது நியாயமில்லை. கலெக்டர் வந்து மனுவை பெற்று தீர்வு காணும்வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று கலெக்டர் அலுவலக வளாக தார்ரோட்டில் காலை 11.30 மணியிலிருந்து சுட்டெரிக்கும் வெய்யில் அமர்ந்து விட்டார். அடிக்கும் வெய்யிலில் மனிதர் 10 நிமிடத்தில் எழுந்துவிடுவார் என்று பார்த்தால்... உடும்பு பிடியாக நகராமல் அமர்ந்துவிட்டார். 12.30....1.30.... என்று நேரம் மணிக்கணக்கில் நகர்ந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் டென்சனும் கூடியது. வேறு வழியில்லாமல் கலெக்டர் உமாநாத் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரிடம் மனுவைக் கொடுத்து, நடவடிக்கை எடுக்க உறுதி மொழி வாங்கிவிட்டு தான் நகர்ந்தார் எம்.எல்.ஏ... இதெல்லாம் அரசியல், ஸ்டெண்ட் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. அப்படியே இருந்தாலும் உடலை வறுத்திக்கொண்டு போராடியது இந்த காலத்தில் பார்ப்பது அபூர்வம் தான் என்பதே என் எண்ணம்!.

May 20, 2010

ஸ்டார் ஓட்டலில் காலாவதி சரக்கு

பொதுவாக மதுபான விற்பனை அது தொடர்பாக "குடிமகன்'களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் போன்ற எந்த செய்தியையும் எழுதுவதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனாலும் இந்த செய்தி வித்யாசமானது என்பதால் பகிர்ந்து கொள்கிறேன். கோவை அவினாசி ரோட்டில் உள்ள பிரபல 3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 18.05.2010 அன்று இரவு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சச்சின் (கிரிக்கெட் வீரர் இல்லை)உட்பட 4 பேர் தங்கினர். இரவு உணவிற்கு முன்பாக பீர் குடிக்க ஸ்டார் ஓட்டலில் உள்ள "பார்' சென்றனர். 4 பீர் பாட்டில்களை வாங்கினார்கள். அதற்கான பில் ஸ்டார் ஓட்டல் ஊழியர்களால் வழங்கப்பட்டது. பீரைக் குடித்துக் கொண்டிருந்த போது தான் அது காலாவதியானது என்பது பெங்களூர்வாசிகளின் கண்ணில் பட்டது. ஸ்டார் ஓட்டலில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்படுவது இதற்கு முன் அவர்கள் கேள்விப்படாதது. உடனே சில பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்த பெங்களூர்வாசிகள், இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பத்திரிக்கையாளர்கள் வந்துவிட்ட தகவல் தெரிந்ததால் மதுவிலக்குப்பிரிவு ஏசி ரங்காத்தாள் தலைமையிலான போலீசார் அங்குவந்து விசாரணை நடத்தினர். இதற்குள் ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் பறந்தது. வழக்குப்பதிவு செய்யாமலும், செய்தி வெளியாகாமலும் எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று பல தரப்பிலும் முயற்சிகள் நடந்தன. துணைமுதல்வர் ஸ்டாலின் கோவை வரும் போது இந்த ஓட்டலில் தான் தங்குவார் என்பதால் அதையே தங்களுக்கு சாதகமாக்கி கோவையில் உள்ள "அழித்தல்' கடவுள் பெயரைக் கொண்ட போலீஸ் அதிகாரியை நள்ளிரவு நேரத்தில் அணுகினர். அவரும் கருணைக் கண் திறந்தார். அவருக்கு சென்னை டி.வி. அலுவலகங்களில் நெருக்கமான தொடர்பு இருப்பதால் அதைப்பயன்படுத்தி செய்தி வெளியாகாமல் தடுத்து நிறுத்திவிட்டார். போலீசாரும் எப்ஐஆர் ஏதும் பதிவு செய்யவில்லை. ஆனாலும் இந்த வட்டத்திற்கு வெளியே இருந்த பத்திரிக்கையாளர்கள் சிலர் சமார்த்தியமாக இதை செய்தியாக்கிவிட்டனர். சாதாரண மளிகைக்கடைகளில் காலாவதியான பொருட்களை கைப்பற்றியதாக பெருமை அடித்துக் கொள்ளும் அதிகாரிகள், ஸ்டார் ஓட்டல் என்றால் பதுங்கியது ஏன்? ஸ்டார் ஓட்டல்களில் பல மடங்கு பில் வசூலிக்கப்படுகிறது. பீரைப்போலவே மற்ற உணவுப் பொருட்களும் காலாவதியானதாக இருக்க வாய்ப்பில்லை என்று கூற முடியுமா? இதே ஓட்டலில் தங்கும் துணை முதல்வருக்கு கூட இந்த ஓட்டல் நிர்வாகம் காலாவதியான உணவு பொருட்களை சப்ளை செய்துவிடும் வாய்ப்புள்ளதே... என்றெல்லாம் சாமானியர்களுக்கு எழும் கேள்விகள் அதிகாரிகளுக்கு எழாதா என்ன?
என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

May 15, 2010

உளவுத் "திணறல்'

கோவை போலீசார் மத்தியில் கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் இது. கல்லூரி மாணவர் ஒருவர் தன் வீட்டு விசேஷத்திற்கு வந்தவர்களுடன் "உற்சாக பானம்' ஏற்ற (நாட்டில் இருப்பவர்கள் அனைவருமே இனி "குடி' மகன்கள் தான் போலும்) பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே அங்கு மது மயக்கத்தில் இருந்த கும்பல் ஒன்றிற்கும் கல்லூரி மாணவர் கும்பலுக்கும் மோதல், இதில் கல்லூரி மாணவருக்கு விரட்டி விரட்டி "மாத்து' விழுந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசார் வழக்கம் போல இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்து 5 தையல்கள் வரை போடப்பட்ட கல்லூரிமாணவரும், அவரை துவைத்து எடுத்தவர்களும் "சமாதான' ஒப்பந்தத்தில் கையெழுத்திட, வழக்கு ஏதும் பதியாமல் தங்கள் கடமையை போலீசார் முடித்துக் கொண்டனர். ஆனால் அடுத்த நாள் பத்திரிக்கைகளை பார்த்த போலீசாருக்கு வியர்த்துவிட்டது. நடந்த சம்பவங்கள் அத்தனையும் நேரடி விளக்கமாக பத்திரிக்கையில் வெளிவந்ததுடன், கொலை வெறி தாக்குதல் நடந்துள்ள போதும் சமாதான உடன்படிக்கைக்கு போலீசார் ஏற்பாடு செய்தது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இதைப்பார்த்த கமிஷனர் சைலேந்திரபாபு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கடுமையாக கண்டித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்பின்னர் தான் உளவுத்துறையினர் களம் இறங்கினர். நடந்தது என்ன என்று விசாரிப்பதற்கு பதில், நடந்த சம்பவம் எப்படி பத்திரிக்கைகளில் செய்தியானது என்பதை கண்டுப்பிடிக்கவே அதிக ஆர்வம் காட்டினர். ஒரு வழியாக கண்டே பிடித்துவிட்டனர். லோகு என்பவர் அந்த நேரத்தில் பாரில் இருந்ததாகவும், அவர் தான் நடந்த சம்பவங்கள் முழுவதையும் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளதாகவும் உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர் பத்திரிக்கையாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பது கூடுதல் தகவல். உடனே போலீசார் பரபரப்பானார்கள். பத்திரிக்கையாளர்களின் போன் விபரங்கள் அடங்கிய "கோவை டைரியை' கையில் எடுத்த உளவு அதிகாரிகள், அதில் பிரபல வார இதழின் சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவரின் பெயர் லோகநாதன் என்றிருப்பதைக் "துப்பறிந்து' கண்டுப்பிடித்தனர். உடனே கமிஷனருக்கு அதுகுறித்து ரிப்போர்ட் போடப்பட்டது. ஏதேச்சையாக இந்த விபரம் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் சம்மந்தப்பட்ட நிருபரின் கவனத்திற்கு வந்தது. "பார்' செல்லும் பழக்கம் இல்லாத அந்த நிருபர் அதிர்ந்து போய் துணைக்கமிஷனர் ஒருவரிடம் நேரடியாகவே உளவுத்துறையின் "துப்பறிதல்' குறித்து அதிருப்தியை தெரிவித்தார். அதன்பின் துணைக்கமிஷனர் விசாரித்ததில் அன்று "பார்' வீடியோ நாயகன் நுகர்வோர் அமைப்பு ஒன்றை சேர்ந்தவர் என்பதும், லோகு என்ற பெயரை பார்த்ததும் கோவை டைரில் உளவுத்துறையினர் துப்பறிந்ததும் தெரியவந்தது. "ஒரு ஆள் பாருக்கு செல்வாரா இல்லையா என்பது கூட சரிபார்க்காமல் என்ன ரிப்போர்ட் கொடுக்கிறீர்கள்?' என்று உளவுத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள கோவை மாநகரில் உளவுத்துறையின் தகுதி இந்த அளவிற்கு தான் உள்ளது... நம்மை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளிப்படையான பேச்சு உள்ளது.

April 27, 2010

பொதுமக்கள் ஊழல் பேர்வழிகளானால்...

கோவையைச் சேர்ந்த முன்னணி மருத்துவர் அவர். கோயில் ஒன்றில் சக நண்பருடன் சென்ற போது சந்தித்தேன். ஜாலியாக பேசிக் கொண்டிருந்த டாக்டர், திடீரென வருத்தத்துடன் பேச ஆரம்பித்தார்... அவரது பேச்சு நாட்டின் மீது பற்றுக் கொண்ட திருவாளர். பொதுஜனத்தின் ஆழ் மனதை எதிரொலித்தது. "தமிழ்நாடு அரசின் கோபுரச் சின்னத்தை மாற்ற வேண்டும் என்று எம்எல்ஏ ஒருவர் சட்டசபையில் பேசியிருக்கிறார். அரசு அதை மாற்றினாலும் மாற்றிவிடும். நமது அரசியல்வாதிகளுக்கு எதை எதையெல்லாம் அரசியல் ஆக்குவது என்று விவஸ்தையே இல்லை. மாநிலத்தின் சின்னமாக கோயில் கோபுரம் இருப்பதை மற்ற மதத்தினர் யாரும் இதுவரை எதிர்க்கவில்லை. அண்மையில் எகிப்து நாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த நாட்டில் தற்போது முழுக்க முழுக்க முஸ்லீம்கள் தான் வசிக்கின்றனர். ஆனாலும் அங்கு கட்டப்பட்டுள்ள பிரமீடுகளை எங்களது மூதாதையர்கள் கட்டியது என்று பெருமை பொங்க குறிப்பிடுகின்றனர். அவர்களது மூதாதையர்கள் வேறு வழிபாட்டு முறையை பின்பற்றியவர்கள். இருந்தாலும் மூதாதையர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்கின்றனர். அதற்கு காரணம், அவர்களது நாட்டு பற்றுதான். ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதோ, தேசத்தின் மீதோ பற்று இருப்பதில்லை....' என்று வருத்தமாக குறிப்பிட்டவர் தொடர்ந்தார்...."நாட்டில் முதலில் அதிகாரிகள் ஊழல்வாதிகள் ஆனார்கள் பின்னர் அரசியல்வாதிகள் ஊழல் செய்தனர். நீதித்துறையே ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்... ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பொதுமக்களை ஊழல்வாதிகளாக்கிவிட்டனரே.... இதை என்னவென்பது?' என்றார். அதிகாரிகள் ஊழல் செய்யும் போது, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.... அரசியல்வாதி ஊழல் செய்யும் போதும் அவர்களை நம்பி ஓட்டளித்த மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். நீதித்துறையில் ஊழல் என்றால் வழக்குத் தொடுத்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைப்போல பொதுமக்கள் ஊழல் பேர்வழிகளானால்..., அதில் பாதிக்கப்படுவது ஓட்டுக்காக அவர்களை சார்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தான்... கவலைப்படாதீர்கள் டாக்டர்....விரைவில் பொதுமக்களால் அரசியல்வாதிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்...என்ற ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

March 29, 2010

முடிவெட்ட நிதி உதவி

பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் "பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படத்தை அறிமுகப்படுத்த கோவை ஜிஆர்டி கல்லூரியில் விஷிவல் கம்யூனிகேசன் துறை சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கதாநாயகன் விவேக் ஓபராய், தயாரிப்பாளர் "டிப்ஸ்' நிறுவனத்தின் குமார் தஹ்ரானி, இசையமைப்பாளர் சச்சின்குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட் மிகப்பெரியது என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் இரு மொழிகளிலும் வெளியிடுகிறோம். இது மிகப்பெரிய வெற்றியடையும் என்று தயாரிப்பாளர் குமார் தஹ்ரானி நம்பிக்கை தெரிவிக்க, தமிழில் சில வார்த்தைகள் பேசிவிட்டு(எழுதி வைத்து படிக்காமல் இயற்கையாகவே சிறிது தமிழ் அவருக்கு தெரிகிறது) ஆங்கிலத்தில் பேட்டியளித்தார் விவேக் ஓபராய். இந்திய சினிமா ஸ்டண்ட் காட்சிகளில் ஹாலிவுட், சீனா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த படங்களின் காப்பி இருக்கும் என்று ஓப்பனாகவே ஒத்துக் கொண்ட அவர், பிரின்ஸ் படத்தில் முழுக்க முழுக்க இந்திய சிந்தனையுடன் வெளிநாட்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படத்தில் எந்த ஒரு சீனிலும் டூப் எதுவும் போடவில்லை என்பதையும் அதற்காக 5 மாதம் தீவிர பயிற்சி எடுத்ததையும் அவர் கூறினார். பின்னர் அவர் செய்துவரும் சேவைகள் குறித்து அடக்கத்துடன் தெரிவித்த அவர் சேவைகள் குறித்து தனது வெப்சைட்டில் அறிந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த ஹீரோக்கள் எல்லாம் பந்தா காட்டும் நிலையில் நிருபர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுடனும் விவேக் ஓபராய் எளிமையாக பழகுவது ஆச்சரியத்தை அளித்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த சக பத்திரிக்கையாளர் 25 பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பியிருந்தார். ஆனால் வந்து குவிந்ததோ 50 பேர்களுக்கு மேல்... சினிமா பிரஸ் மீட் என்ற "எதிர்பார்ப்புடன்' குவிந்துவிட்டனர் என்று பிரஸ் மீட் ஏற்பாடு பத்திரிக்கையாளர் வருத்தப்பட்டுக் கொண்டார். பிரஸ் மீட் ஆரம்பமாகும் போதே பிரஸ் ரீலீஸ் அடங்கிய பைல் ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் வெள்ளை நிற கவர் ஒன்று இருந்தது. அதனுள் 300 ரூபாய்க்கான கிப்ட் வவுச்சர். "அன்பளிப்புகளை' மறுக்கும் நிருபர்கள் மட்டும் அவற்றை திருப்பித் தந்துவிட, எதிர்பார்ப்பு நிருபர்கள் ஆர்வத்துடன் வாங்கி வைத்துக் கொண்டனர். பிரஸ்மீட் முடிந்து விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து சென்றதும் ஆர்வத்துடன் கவரை பிரித்து பார்த்தவர்கள், பிரஸ் மீட் ஏற்பாட்டாளர்களிடம் சண்டைக்கு போய்விட்டனர். இருக்காதா பின்னே...? உள்ளே இருந்த கூப்பனில் 200 ரூபாய்க்கான கூப்பன், கோவையில் உள்ள நவீன சலூன் ஒன்றில் முடிவெட்டிக் கொள்வதற்கான கூப்பன்....! இது எப்படி இருக்கு!

March 17, 2010

ஆஹா என்ன அரசியல் சாமி இது

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சில்வர் ஜூப்ளி பட்டமளிப்பு அரங்கு உள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அரங்கம் என்று கூடுதல் பெயர் மாற்றம் செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீக்கப்படும். 2006 ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விமர்சித்து செய்திகள் வந்தன. கல்வியாளர்களும் ஆட்சி மாற்றத்திற்கு தக்கபடி வேஷம் போடுகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது தவறு என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சிலிருந்து தெரியவந்துள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பாராட்டுவிழா 17.03.2010 ல் நடத்தினார்கள். அதில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "திமுக ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் அதிமுக ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடக்கும். திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் அரங்கின் பெயரை அதிமுக ஆட்சியில் மாற்றினார்கள். மீண்டும் நான் வேளாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அப்போதிருந்த துணைவேந்தர்(ராமசாமி), என்னைச் சந்தித்து விழா ஒன்றில் கலந்து கொள்ள அழைத்தார். அதற்கு நான், எந்த கையால் தலைவர் கலைஞர் பெயரை மாற்ற உத்தரவு போட்டாயோ, அந்த கையாலேயே தலைவர் கலைஞர் பெயரை அரங்கிற்கு சூட்டிவிட்டு வா... அப்போது தான் நான் விழாவிற்கு வருவேன் என்று கூறிவிட்டேன். அதன்படி அரங்கிற்கு மீண்டும் கலைஞர் பெயர் சூட்டப்பட்டது. இதை கலைஞர் கண்டித்தார். ஆனாலும் நான் இந்த பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர். அதனால் பெயரை சூட்ட உத்தரவிட்டேன்....' என்று பேசினார். விழா அரங்கிலேயே முன்னாள் துணைவேந்தரை ஒருமையில் பேசிய அமைச்சர், நேரில் எப்படி கண்டித்திருப்பாரோ என்று விழாவிற்கு வந்திருந்த பேராசிரியர்கள் சிலர் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆஹா என்ன அரசியல் சாமி இது!

March 6, 2010

எது நிஜம்?

கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு விஷயத்தில் பலத்த சர்ச்சை இருந்து வருகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் பத்திரிக்கைகளிலேயே பணிபுரியாத பலரும் வலம் வருகிறார்கள். அவர்களை களை எடுக்க வேண்டும் என்றும் பல நிருபர்கள் குரல் எழுப்பி வந்தனர்.... தற்போதும் குரல் எழுப்புகின்றனர். ஆனால் "போலி பத்திரிக்கையாளர்' என்பதற்கு இலக்கணம் வகுப்பதில் தான் பலத்த சிக்கல். ஒரு பத்திரிக்கையின் விற்பனை பிரதிகளின் எண்ணிக்கையை வைத்தா, அல்லது "கவர்' மற்றும் அன்பளிப்புகள் வாங்குவதை வைத்து முடிவு செய்வதா என்பதில் தான் குழப்பம். பத்திரிக்கையின் சர்குலேசன் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் எப்போது வேண்டுமானாலும் குறையலாம் அதனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. அன்பளிப்புகளை பல ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சில பத்திரிக்கையாளர்களும் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதால் அதை வைத்து எப்படி முடிவு செய்வது என்ற திண்டாட்டமும் நிலவுகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வலம் வரும் பலர் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து சம்பளமே வாங்குவதில்லை என்றும், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அவர்கள் செய்யும் வசூலில் தான் வாழ்க்கை ஓடுகிறது என்றும் கூறுகிறார்கள். பல பத்தாயிரங்கள் சம்பளம் வாங்குபவர்களே வசூலில் ஈடுபடும் போது, சம்பளமே இல்லாதவர்கள் கொஞ்சம் வசூலித்தால் தான் என்ன என்றும் அவர்களுக்கு ஆதரவு குரல் எழாமல் இல்லை. ஆனால் இந்த இரண்டு தரப்பிற்கும் இடையே லஞ்சம் வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளர்கள் மாட்டிக் கொண்டு திண்டாடுவதும் அவ்வப்போது நடக்கும். எல்லா பத்திரிக்கையாளர்களும் லஞ்சம் வாங்குவார்கள் என்று கருதி லஞ்சம் வாங்காத பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி வெளியிட லஞ்சம் கொடுக்க சிலர் முயலுவதும், அது சர்ச்சைக்குள்ளாவதும் நடக்கிறது. இது இவ்வாறு இருக்க... சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியினரால் மக்கள் டிவி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஒரு ஆச்சரியம். யார் யாரையெல்லாம் போலி பத்திரிக்கையாளர்கள் என்று குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியவர்கள், அந்த பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த கதை நடந்தது. இதைப்பார்த்து என்னைப்போன்ற பலருக்கு தலை சுற்றியது.... "அன்று போலிக்கு எதிராக என்று நடத்திய போராட்டம் நிஜமா? அல்லது இன்று அளிக்கும் அங்கீகாரம் நிஜமா?'

March 1, 2010

தாய்மை

பத்திரிக்கை அலுவலகங்களுக்கு தினசரி பல பத்திரிக்கை செய்திகள் வருவதுண்டு... சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவின் அறிக்கை என்னை கவர்ந்தது....
'ஒரு முறை யோக வகுப்பு எடுத்தபோது, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அப்போது ஒரு பெண்மணி தன் பெயரை சொல்லிவிட்டு பிறகு தன்னை வெறும் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அதென்ன வெறும் குடும்பத்தலைவி, உங்களுக்கு அதன் அருமை தெரியவில்லை, வெளியில் சென்று பணம் சம்பாதிக்காததால் நீங்கள் இப்படி நினைத்துக் கொள்கிறீர்கள் என்று பதில் கூறினேன். தங்கள் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக நினைத்ததால்தான் பெண்கள் ஆண்கள் செய்யும் செயல்களை செய்ய முற்படுகிறார்கள். தற்போது உலகில் பல பெண்ணிய இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கங்கள் உண்மையாகவே பெண்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமானால், அவை பெண் தன்மையை மேலுயர்த்துவது எப்படியென சிந்தித்து செயல்பட வேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எங்கள் தாயார் காலை 6 மணிக்கு எழுந்து விடுவார். வீட்டை சுத்தம் செய்து, சிற்றுண்டி தயாரித்து எங்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பிறகு குளித்து பூஜை செய்து மீண்டும் உணவு தயாரித்து 12 மணி அளவில் நிமிரும்போது, என் தந்தை சரியாக வீட்டிற்கு வருவார். எப்போதும் என் தந்தை வருவதற்கு முன் அவர் நன்றாக உடை அணிந்து கொண்டு தலையில் பூ சூடியிருப்பார். இது எப்போதும் நடந்தது. இந்த வேலைகள் எப்போதும் அவருக்கு ஆனந்தத்தைத் தந்தது. எங்கள் நல்வாழ்விற்காக தன்னை ஒருவர் இந்த அளவு அர்ப்பணித்திருக்காவிட்டால் எங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவருடைய அர்ப்பணிப்பு எங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் உயர்த்தியது. அவர் வருமானம் ஈட்டாததால் அவரை யாருக்கும் தாழ்ந்தவராக நினைக்க முடியாது, கண்டிப்பாக முடியாது. அவருடைய தீவிர அர்ப்பணிப்பே மற்ற அனைவரையும் விட அவரை அதிகமாக உயர்த்திக் காட்டியது. வீட்டில் எது நடந்தாலும் அவரை கலந்தாலோசித்துத்தான் அது நடக்கும். ஏனெனில் மற்றவர் மீது அவர் கொண்டிருந்த அக்கறை அத்தகையது. இதுதான் ஒருவருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது. பெண் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என் தாயாரிடம் நீ ஒரு அடிமை போல் இருக்கிறாய், ஊதியம் இன்றி வேலை செய்கிறாய், நீ பயன் படுத்தப்படுகிறாய் என்றெல்லாம் சொன்னால், அவர் மிகவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் அவர் வீட்டில் செய்து வந்த பணிகள் அவருக்கு அன்பு மயமான அனுபவத்தை கொடுத்தது. இப்படி சிலர் தன் நலத்தையும் தாண்டி அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபடும்போதுதான் இந்த உலகம் அழகானதாக இருக்கிறது. அதற்காக எல்லா பெண்களும் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும், ஆண்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. நீங்கள் வாழும் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால் நீங்கள் அலுவலகத்திற்கு சென்றாலும் சரி, அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டாலும் சரி அது ஒரு பொருட்டல்ல. பெண்கள் ஆண் தன்மை கொண்டவர்களாக மாறி பெண் தன்மையே இல்லாமல் செய்துவிட்டால் அதுதான் உலகில் பெண்தன்மைக்கு கிடைக்கப்போகும் உண்மையான தோல்வியாக இருக்கும். பெண் தன்மை என்பது தேவையற்றதும் இல்லை. பலவீனமானதும் இல்லை. பெண்தன்மை வித்தியாசமானது. மென்மையானது. இவ்வுலகில் பெண்தன்மை இல்லாமல் செய்துவிட்டால் மென்மையில்லாத வாழ்க்கையிலும் மென்மையில்லாத உலகிலும் நாம் எப்படி வாழ்வது? பெண்மை எப்போதும் எளிதாக விட்டுக் கொடுக்கிறது. உலகில் பெண்மை மீது மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தத்தான் மக்கள் நினைக்கிறார்கள். ஆண்களையும் வேறு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், எல்லா மட்டத்திலும் ஆதிக்கம் என்பது இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் மீது, ஆண்கள் மீது, பெண்கள் மீது, மிருகங்கள் மீது, தாவரங்கள் மீது யாரோ ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒன்று ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதற்காக அதை இல்லாமலே செய்துவிடலாமா? பூக்களைப் பறித்து மாலை செய்கிறார்கள். யாரோ பூக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக, பூக்களே இல்லாமல் செய்து விடலாமா? அதே போல் பெண்மை மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக பெண்மையே இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லதுதானா? எனவே இவ்வளவு காலமாக நிலவிய ஆணாதிக்கத்திற்கு எதிர்செயலாக செயல்படாமல் இனிமேல் பெண்கள் நலமாய் வாழ என்ன செய்யவேண்டும் என்பதை கவனித்து செயல்பட்டால் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்... பெண்மையின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அது உலகில் இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு நாளில் மாற்ற முடியாது. ஆனால் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் தீமையை நீங்கள் நினைத்தால் ஒரு வினாடியில் நிறுத்திக் கொள்ளலாம். மக்கள் பல நேரங்களில் பெண்மை மிகுந்த வலிமை குன்றியது என கருத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பணியில் ஆகட்டும், வியாபாரத்தில் ஆகட்டும், நீங்கள் கடைபிடிக்கும் வழி பெண்மை நிறைந்ததா ஆண்மை நிறைந்ததா என யாரும் கவனிப்பதில்லை. நீங்கள் கடைபிடிக்கும் வழியில் பலன் கிடைக்கிறதா, இல்லையா என்பதைத்தான் உலகம் கவனிக்கிறது. பெண் விடுதலை என்று பாடுபடுபவர்கள் பெண்மை தழைத்தோங்க பெரிய சேவை செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. பெண்கள் அமைப்புகள் நடத்திய சில கூட்டங்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் பேச்சு பெண்மை நிறைந்ததாக இல்லை. ஆண்களை விட இவர்கள் அதிகம் ஆண்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். மிகவும் கடுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இது பெண்மைத் தன்மையல்ல. உண்மையில் ஒரு ஆண் கூட சிறிது விட்டுக்கொடுக்க நினைப்பார். ஆனால் இவர்கள் ஒரு ஷணம் கூட விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. ஆணோ பெண்ணோ 100 சதவீதம் ஆண்மை நிறைந்தவர்களோ அல்லது 100 சதவீதம் பெண்மை நிறைந்தவர்களோ கிடையாது. ஆண் என்பவனுக்கு ஆண்மை அதிக சதவீதத்தில் இருக்கிறது, பெண் என்பவளுக்கு பெண்மை அதிக சதவீதத்தில் இருக்கிறது. உலகில் பிழைக்கும் வழிதான் முக்கியமாக இருக்கும்போது ஆண்மைதான் மேலோங்கியிருக்கும். பெண் எப்போதும் பிழைப்புக்கான வழிக்காக துரத்தப்படுவதில்லை. அவள் தளர்வு நிலையில் இருக்கமுடியும். ஆணுக்கும் இது தேவைப்படுகிறது. அவனுக்கு இது பெண் மூலமாக தேவைப்படுகிறது. அவன் பிழைப்புக்கான வழியில் ஈடுபட்டு, எதாவது சம்பாதித்தால், அதை வீட்டிற்கு கொண்டுவந்து தளர்வடையவே முயற்சிக்கிறான். பெண்மை இல்லாமல் அவன் தளர்வடைவது முடியாது. இசை, கலை, அன்பு, அக்கறை ஆகியவை பொருளாதாரம் போன்று எப்போது மேலோங்கி இருக்கிறதோ அப்போது ஆணுக்கு நிகராக பெண்ணின் பங்கும் இருக்கும். எனவே பெண்களோ அல்லது பெண் இயக்கங்களோ பெண்மையை தழைத்தோங்கச் செய்வதையே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அர்ப்பணிப்பும் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. இவ்விரு தன்மைகளையும் தன்னுள் மேம்பட்ட நிலைக்கு கொணரும்போது பெண் என்பவள் பராசக்தியாக பரிணமிக்க முடியும். அந்தநிலை வரும்போது இந்த உலகம் வாழ்வதற்கு மிகவும் ஆனந்தமானதாக இருக்கும். '
***

February 19, 2010

பி.டி. மினிஸ்டர் ஜெய்ராம்ரமேஷ்

19.02.10


மரபணு மாற்றப்பட்ட கத்தரி ரகத்தை பயிரிட அனுமதிப்பது குறித்த பொறுப்பு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து மனிதர் தினசரி பத்திரிக்கைகளில் அடிபடும் பரபரப்பான மினிஷ்டர் ஆகிவிட்டார். பி.டி கத்தரிக்கு அவர் தற்காலிக தடைவிதித்தப் பின்னரும் எங்கு சென்றாலும் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பி.டி.கத்தரி குறித்து கேட்கத்தவறுவதில்லை. மனிதரும் அசராமல் ஒவ்வொரு இடத்திலேயேயும் தான் கூறியதையே திரும்ப திரும்ப கூறிவருகிறார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொள்வதில் தான் வித்யாசம் உள்ளது. "பி.டி.கத்தரியை அனுமதிப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது எந்த முதல்வரும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. விஞ்ஞானிகளும் சந்தேகங்களை கிளப்புகின்றனர். பொதுமக்களும் எதிர்கின்றனர். அதனால் பி.டி.கத்தரி குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. இந்த கத்தரியால் உடல் நலத்திற்கு ஆபத்து இல்லை என்ற உறுதியும், விதைகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உறுதியும் கிடைக்க வேண்டும். அதுவரை பி.டி.கத்தரி பயிரிட அனுமதிக்க முடியாது. அதேசமயம் மற்றப்பயிர்களில் பி.டி. ஆராய்ச்சிக்கு தடை விதிக்க முடியாது...' என்பதை தான் அவர் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் ஒரு நாள் பி.டி.கத்தரிக்கு தடையில்லை என்றும், தடை என்றும் மாறி மாறி செய்திகள் வந்து கொண்டுள்ளன. கோவை வனக்கல்லூரியில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜெய்ராம் ரமேஷ், டென்சன் ஏதுமில்லாமல் மிக ஜாலியாகவே இருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியா, தெலுங்கு போன்ற மொழிகளில் பேசினால் தனக்கு புரியும் என்று கூறி மற்றவர்களை தமிழ், மலையாளத்திலேயே பேச கூறியவர், அவர் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். பேசும் போதும் ஜோக்குகளை அள்ளிவீசத் தயங்கவில்லை. ஆஸ்திரேலியாவில் படிக்கச்செல்லும் இந்திய மாணவர்கள் அங்கு அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் ஆஸ்திரேலியாவிலிருந்து பெற்றோர்களை கொண்டு வந்து(சவுக்கு, தைல மர ஜீன்களை) இந்திய குழந்தைகளை உருவாக்கியுள்ளோம்(ரசிக்க முடியாத ஜோக் தான்) என்று கூறி பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். அதற்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் உற்சாகமாகவே கலந்து கொண்டார். "பி.டி.கத்தரிக்கு தடைவிதித்ததால் பத்திரிக்கை ஒன்று( ஆங்கில பத்திரிக்கை) விமர்சித்து எழுதுகிறது. அந்த பத்திரிக்கை நிருபர்கள் யாவாது வந்திருக்கிறீர்களா..?' என்று கேட்டுவிட்டு ஜாலி மூடில் பிரஸ் மீட்டை ஆரம்பித்தார். பி.டி. பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதும் சற்று முகத்தில் கோபத்தை காட்டியவர் பின்னர் நிதானித்து பதில் அளித்தார். பார்ப்பதற்கு சற்று ஜோக்கர் மாதிரி தோன்றினாலும் நிலமையை திறமையாக சமாளிக்கிறார் என்கிறார்கள் சக பத்திரிக்கையாளர்கள்.

February 16, 2010

ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்!

16.02.10

ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்!

தமிழக காவல்துறையில் நேர்மையாக இருப்பதோடு, ஊழலுக்கு எதிராக ஒரு "யுத்தமே'நடத்தி வருபவர். கோவையில் அவர் மூன்று மாதங்கள் ரூரல் எஸ்பியாக பணி புரிந்த போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நான் பல போலீஸ் அதிகாரிகளிடம் பழகியிருக்கிறேன். ஆனால் அவர்களின் பேச்சிற்கும் செயலிற்கும் பெரும் வித்யாசம் இருப்பது சிறிது காலத்திலேயே தெரிந்துவிடும். ஆனால் பொன்மாணிக்கவேல் இவர்களில் மிகவும் வித்யாசமானவர். இவர் பணியில் உள்ள ஒவ்வொரு விநாடியும் பொதுமக்களுக்கு நன்மை விளைந்து கொண்டே இருக்கும். போலீஸ் அதிகாரியால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்பதை கண்முன்னால் காண்பித்தவர். போலீஸ் துறையில் லஞ்சம் வாங்காமல் இருப்பது சாத்தியம். ஆனால் லஞ்சத்திற்கு எதிராக போராடுவது என்பது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது போல. பொன்மாணிக்கவேல் நேர்மையாக இருப்பதற்கு கொடுத்து வரும் விலை சற்று அதிகம் தான். எந்த ஒரு பதவியிலும் நிரந்தரமாக 3 மாதங்களுக்களுக்கு மேல் இருக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விடுவதில்லை. அதனால் இவரது மனைவி, குழந்தையை விட்டு தொலைதூரத்தில் வசிக்க வேண்டியிருக்கிறது. ரவுடிகளை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் சக அதிகாரி ஒருவரின் விளையாட்டால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதைவிட இவரது பதவி உயர்வு கூட தேவையில்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பொதுவாக எஸ்பிக்கு பிறகு டிஐஜி பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் இவருக்கு எஸ்எஸ்பி என்ற ஸ்பெஷல் எஸ்பி பதவியுயர்வு வழங்கப்பட்டது. பின்னர் ஒரு வழியாக 15.02.10 அன்று டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பழனி பட்டாலியனிலிருந்து சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் எந்த பதவியில் இருந்தாலும் அங்கு ஊழலை முற்றிலும் ஒழித்துவிடுவார். நேரடியாக மக்களைச் சந்திக்கும் சட்டம்ஒழுங்கு பதவிகளில் இல்லாதது இவருக்கு இழப்பல்ல... மக்களுக்குத் தான் இழப்பு!

February 9, 2010

விடுதலை புலிகள் தலைவர் இருக்கிறாரா?

சுழல் விளக்கு...முன்னும் பின்னும் கைத்தடிகள்... பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெட்டி பந்தா.... கொள்கைகள் ஏட்டளவில் மட்டும், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது இது தான் தமிழகத்தின் அரசியல் நிலை. சினிமாக்களில் அரசியல்வாதிகள் குறித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜம் தான், கற்பனை இல்லவே இல்லை என்று தமிழக அரசியலை நன்கறிந்தவர்கள் தங்கள் தலைமீது சத்தியம் செய்து கூறுவார்கள். ஆனால் மலேசியாவிலிருந்து வந்திருந்த தமிழர்களான அரசியல் தலைவர்களையும், இயக்கங்களின் தலைவர்களையும் பார்த்து பேசிய போது வியப்பு ஏற்பட்டது. கோவையில் நடந்த உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்திருந்த இன்ட்ராப் தலைவர்கள் வசந்தகுமார், கணபதிராவ் ஆகியோரிடம் பேட்டி எடுத்தேன். அப்போது அவர்களுக்குள் இருந்த கொள்கை வேட்கை, லட்சியப்பிடிப்பு என்னை கவர்ந்தது. குறிப்பாக வசந்தகுமார், "இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தேன், 7 மாதங்கள் வீட்டுச்சிறைவாசம், இனியும் சிறை செல்ல வேண்டியிருந்தாலும் போராட்டத்தை தொடருவோம்' என்றது வெறும் வாய்வார்த்தை மட்டுமல்ல என்று உணர முடிந்தது. இன்ட்ராப்பில் தங்களுடன் இணைந்து செயல்பட்டு பிரிந்து சென்ற வேதமூர்த்தி, உதயக்குமார் ஆகியோர் குறித்து அவர் விமர்சிக்காதது நம்ம ஊர் அரசியல் தலைவர்களின் குழாயடிச் சண்டையை ஓப்பிட்டு பார்க்கத் தோன்றியது.

அடுத்து நான் சந்தித்து பேசியது பினாங்கு துணை முதல்வர் ராமசாமி அவர்களிடம், "நாங்கள் பதவியேற்றதும் ஒரு முடிவெடுத்தோம்... தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பதவிக்காலத்தில் ஒரு சிறிய சொத்து கூட வாங்குவதில்லை என்றும், ஊழலை 0 சதவீதமாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளோம். அதன்படி செயல்பட்டு வருகிறோம்...' எங்கள் ஊரில் அது போன்று முடிவெடுத்தால் "ரியல் எஸ்டேட் பிசினஸ் படுத்துவிடுமே ஐயா என்று கூறத்தோன்றியது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த கேள்விகளுக்கும் அவர் தெளிவாகவே பதில் அளித்தார். நார்வே அமைதிக்குழு ஆலோசகர், பிரபாகரனை பல முறை சந்தித்தவர், விடுதலைப்புலிகளின் பகிரங்க ஆதரவாளர் என்று பல தகுதிகளுடைய அவர் பிரபாகரன் குறித்து தெரிவித்ததை அப்படியே கீழே குறிப்பிட்டுள்ளேன். பிரபாரனின் நிலை என்ன என்பது குறித்து அவரது வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ள முயற்சிப்போம்...."விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்கு தனியாத பாசம் உண்டு. அவர் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர் உலகில் வேறு யாரும் கிடையாது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் பேசி அரசியல் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. பிரபாகரன் இறந்து விட்டார் என்று தற்போது கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்தார் என்பதை மக்கள் நம்பவில்லை. பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரியவந்தால், ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாமா? ஈழத்தமிழர்களின் நலன் தான் முக்கியம். அவர்களுக்கு உடனடியாக தனிநாடு கிடைக்காவிட்டாலும் அடிப்படை உரிமைகள் கிடைக்க தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்......' என்று முடித்த அவரது குரலில் உண்மையான ஆதங்கம் இருந்தது.



பாலோஅப்



இன்ட்ராப்-மக்கள் சக்தி!





மலேசியாவில் இந்தியர்கள் இழந்த உரிமையை மீட்பதற்காக துவங்கிய இன்ட்ராப் அமைப்பின் தலைவர்களில் வசந்தகுமார், கணபதிராவ் ஆகியோர் கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்த போது சந்தித்த அனுபவங்களை குறிப்பிட்டிருந்தேன். அதன்பின்னர் இன்ட்ராப்பின் செயல்பாடுகள் குறித்து வலையில் தேடியபோது இன்ட்ராப்மக்கள் சக்தியின் வலைத்தளத்தை காண முடிந்தது. இந்தியர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக போராட ஒன்று திரளும்போது கூட ஏதாவது ஒரு காரணத்திற்காக பிளவுபட்டு போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இன்ட்ராப் விஷயத்திலும் இது தான் நடந்துள்ளது. இந்திய சமுதாயத்தில் பிளவு ஏற்படும் போது போராட்டங்களின் வீரியம் குறைந்து தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயமாகும். இதுவே வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது வரலாறு காட்டும் உண்மை. ஆனால் வரலாற்றை தொடர்ந்து மறந்து வருவது தான் நமது பலவீனம்!

February 5, 2010

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளவு

05.02.10
கோவையில் நடக்கும் "உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த பினாங்கு மாநில(மலேசியா) துணை முதல்வர் பி.ராமசாமியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சபரிஸ் நெஸ்ட் (நீல்கிரிஸ்) ஓட்டலில் நடந்தது. உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு தமிழக அரசு சார்பில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு போட்டியாக நடத்தப்படுகிறது என்றே அரசு தரப்பில் கருதப்படுகிறது. அதனால் முதலில் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஐகோர்ட் சென்று அனுமதி பெற்றுவந்தார். இதனாலேயோ என்னவோ பிரஸ்மீட் நடந்த ஓட்டலை மத்திய, மாநில உளவுத்துறையினர் குவிந்திருந்தனர். பிரஸ் மீட் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் மத்திய உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பாக உள்ளே வந்தார். நேராக சேட்லைட் சேனல் நிருபர் ஒருவரைச் சந்தித்து டிஜிட்டல் ரெகார்டர் ஒன்றை கொடுத்து முழு பிரஸ்மீட்டையும் பதிவு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அந்த நிருபரும் ரெகார்டரை வாங்கி வைத்துக் கொண்டார்.(ரெகார்ட் செய்து கொடுத்தாரா இல்லையா என்று தெரியவில்லை) அடுத்து இன்னொரு சேட்லைட் நிருபரிடம் வந்த அந்த "உளவு' டிஜிட்டல் கேமராவை நீட்டி, போட்டோ எடுத்து தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு அந்த நிருபர், "அது எங்கள் வேலை இல்லை. இது எங்களை நம்பி வந்து செய்தி தருபவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்வதைப் போல ஆகிவிடும்.' என்று கூறி மறுக்கவே அந்த உளவு வெளியேறினார்.
பத்திரிக்கையாளர்களை போலீஸ் தேடும் குற்றவாளிகள் கூட சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை கூற முடியும் என்ற நிலையில் பத்திரிக்கையாளர்கள் இருப்பது தான் பத்திரிக்கை தர்மம். ஆனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குள்ளே நடப்பதை பதிவு செய்ய உளவுத்துறை முயற்சிப்பதும், அதற்கு சில பத்திரிக்கையாளர்கள் துணைபோவதும் பத்திரிக்கை தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என்றே தோன்றுகிறது.