May 9, 2015

இவர்களும் மனிதர்கள் தான்!

அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். கேட்டை மட்டும் திறந்து வைத்துவிட்டது நிர்வாகம்.. 10 மணிக்கு ரிசல்ட் வந்ததும், மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். அதற்கு டோக்கன் உண்டு.. டோக்கன் ஓசியில்லை... அதற்கும் 10 ரூபாய் அழ வேண்டும். பரபரப்பான அவினாசி ரோடு டிராபிக் ஜாம் ஆகியது. அரசு சம்பளம் பெறும் போலீசார் வியர்க்க விறுவிறுக்க போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். கல்லா கட்டும் கல்லூரி நிர்வாகத்திற்கு அது குறித்தெல்லாம் அக்கறையில்லை.
அடித்துப்பிடித்து விண்ணப்பங்களை கொடுத்துவிட்டு ஓய்ந்த பெற்றோரிடம் கல்லூரி அலுவலர் ஒருவர் வந்து சொன்னார் கூலாக...‘மெரிட் சீட் என்பது ஒரு பாடப்பிரிவுக்கு 2 அல்லது 3 பேருக்குத் தான். அது யாருக்கு கிடைக்கும்னு இப்போ சொல்லமாட்டோம்... பணம் கட்டி சீட் வாங்க விரும்பறவங்க... பணத்தைக்கட்டி சீட் வாங்கிக்குங்க....’
அதிர்ந்து போன பெற்றோர், ‘அதிகாலை 4 மணியிலிருந்து காத்திருந்தது?’ என்று கேட்க... ‘நாங்களா வரச்சொன்னோம்?’ என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு, பணப்பெட்டியுடன் வருபவர்களை வரவேற்க ஓடினார் அந்த அலுவலர்.
புள்ளை நல்ல மார்க் எடுத்திருக்கான்.... சீட் கிடைச்சிடும் என்று நம்பி வந்த அப்பாவி பெற்றோர்... ‘அடப்பாவிகளா’ என்று கூறிவிட்டு நடையை கட்டுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை....

விண்ணப்பங்களை விற்றது மூலம் கோடிகள்... டோக்கன் கொடுத்ததில் கூட லட்சங்கள் குவித்த அந்த கல்லூரி நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் டெவலப்மன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் அணுகி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை உங்கள் கல்லூரிக்கு செய்துவிட்டால், நெரிசல் குறையுமே என்று கேட்டார்... அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் சொன்ன பதில்... விடியக்காலை 2 மணியிலிருந்து குவியும் கூட்டம்... விமானநிலையத்திலிருந்து ஹோப்காலேஜ் வரை ஏற்படும் டிராபிக் ஜாம்... இது தான் எங்கள் கல்லூரியில் சீட் கிடைப்பது குதிரைக் கொம்பு என்ற தோற்றத்தை தருகிறது... நாங்கள் ஏன் இதை இழக்க வேண்டும்...?

இவர்களும் மனிதர்கள் தான்! 

February 17, 2014

நம்ம ஊர் பரவாயில்லை!


         த்திரிக்கையாளர் என்றாலே ஒரு கவுரவம் இருந்த காலம் போயே போச்சு... பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கொடுக்கும் அன்பளிப்புகளை பெறுவதற்கு போலி பத்திரிக்கையாளர்களுடன் பத்திரிக்கைகளில் உண்மையாகவே வேலை செய்யும் சிலரும் போட்டிபோடுவது மனதில் வலி உண்டாக்கும். இந்த அவலம் என்றாவது சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருந்ததுண்டு... ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கிறது நண்பர் விஜயின் டெல்லி அனுபவம். டில்லியில் நடந்த வாகன கண்காட்சி தொடர்பான செய்திக்காக நண்பர் விஜய் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அவர் எடுத்திருந்த ஆயிரக்கணக்கான படங்களில் டில்லி பத்திரிக்கையாளர்கள் அன்பளிப்புகளை வாங்க முண்டியடிப்பதும் சில இருந்தன. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே ஒரு நிறுவனம் அளித்த அன்பளிப்பு பையை பெறுவதற்கு பத்திரிக்கையாளர்கள் முண்டியடிப்பதை பார்த்தால் நம்ம ஊர் பரவாயில்லை என்று தெரிகிறது...

June 27, 2013

அவினாசிலிங்கம்!

என்னைவிட ஒரு வயது சிறியவர். ஆனால் நான் அவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளனாக அடியெடுத்து வைத்ததிலிருந்தே அண்ணா என்று அழைத்து வந்தேன். அவரது கொள்கை, கோட்பாடுகளில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு... ஆனால் அது என்றுமே எங்களது நட்புக்கு இடையூறாக இருந்ததில்லை. பத்திரிக்கை உலகில் 21 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தான் பணிபுரிந்த நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றிய போதும் சரி.... பதவி உயர்வு பெற்று நல்ல சம்பளம் பெற்ற போதும் சரி... என்றுமே நேர்மை தவறாத உன்னத பத்திரிக்கையாளர். பெயரை குறிப்பிடாமல் அவரைப்பற்றியே ஒரு நாள் நான் செய்தி எழுதவேண்டி வந்தது. ‘வேலு... என்னை பற்றி எழுதிய செய்தியில் நீ பயன்படுத்திய வார்த்தை சரியில்லை....’ என்று கூறி அதற்கு பொறுத்தமான வார்த்தையையும் கூறினார். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிட்டதை அவர் விரும்பவில்லை... ஆனால் எனக்கே ஓட்டு போட்ட அவர், பின்னர் ஒரு ஆண்டுகால வெற்றிகரமான என் பணிக்கு பின்னணியில் அவரும் இருந்தார். அவருடன் நெருக்கமாக இருந்த சக நண்பர்களுக்கு எங்கள் நெருக்கமான பழக்கம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சகோதர உறவை தாண்டி பழகினோம். அதனால் தானோ என்னவோ என்னால் அவரது பிரிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. பத்திரிக்கையாளர்கள்.... சமூகம்... பத்திரிக்கையாளர் சங்கம் என்று அவர் பல துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார்... ஆனால் ஏனோ அவற்றையெல்லாம் பாதியிலேயே விட்டுவிட்டார்.. வாழ்க்கையையும் பாதியிலேயே முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை....

38 வயதில் அவரது மரணம் ஒரு விபத்து... கண்முன்னே நடந்த விபத்தை தடுக்க முடியாத பாவிகளில் நானும் ஒருவன் என்று நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

March 25, 2013

‘த்தூ.... பிழைக்குமா இந்த பிழைப்பு?’

சமீபத்தில் கோவையில் புதிய கட்சி துவக்கவிழா ஒன்று நடந்தது. போதை பழக்கத்திற்கு எதிராக யாகம் நடத்துவோம், டாஸ்மாக் கடைகளில் சிறைபட்டுள்ள இப்பகுதி இளைஞர்களை மீட்போம் என்று தலைவர் மேடையில் முழங்கிக் கொண்டிருக்க... தொண்டர்களோ நடுரோட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து  புகைப்படக்கலைஞர் ஜாக்சன் அதை படம் எடுத்தார். உடனே ஆவேசமடைந்த 12 பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக தாக்கியது. பீர்பாட்டிலால் தலையில் அடிக்க ஜாக்சன் மயங்கினார். அவரிடமிருந்த விலைமதிப்புள்ள கேமரா, செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பறித்துக் கொண்டு ஓடிவிட்டது அந்த கும்பல். ஜாக்சன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர், பத்திரிக்கையாளர் ஆர்ப்பாட்டம் இதெல்லாம் நடப்பது தான். ஆனால் அதிர்ச்சியான ஒரு தகவலை மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.... ஜாக்சன் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை பத்திரிக்கையாளர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் பலர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சக பத்திரிக்கையாளரை தாக்கிய கட்சியினரிடமிருந்து கவரை பெற்றுக் கொண்டு வந்துள்ளனர் என்பது தான் அது. தன்னுடன் பணி புரியும் சக பத்திரிக்கையாளரை தாக்கியவர்கள் என்ற அருவறுப்பு கூட இல்லாமல் நடந்து கொண்ட இவர்களை கண்டால் பாரதியார் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்......‘த்தூ.... பிழைக்குமா இந்த பிழைப்பு?’

September 18, 2012

மௌனம் மகிழ்ச்சியை தரும்!


   16.09.2012 அன்று நடந்த கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பின் பொதுக்குழு காரசாரமாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு  நடந்த அமைதியான கூட்டம். மாற்று கருத்து கொண்ட நண்பர்களும் கடந்த ஒரு ஆண்டு செயல்பாட்டை பாராட்டினார்கள்.  முகம் மட்டுமே தெரிந்த நண்பர்கள் பலர் என்னிடம் தனியே வந்து, மறுபடியும் ஒரு ஆண்டு பணியை தொடர்ந்திருக்கலாமே  என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். என்னிடம் பாராட்ட மறந்த ஒரு சிலர் கூட நண்பர்களிடம் பாராட்டியதாக  தகவல்கள் கிடைத்தது. 
       பல்வேறு சிந்தனைகள், பல்வேறு குணங்கள், பல எண்ண ஓட்டங்கள் உள்ள நிர்வாக குழுவை ஒரு ங்கிணைத்து செல்லும் பணியை மட்டுமே நான் செய்தேன். மாலைகளும் வேண்டாம், கற்களும் வேண்டாம் என்ற எண்ணமே என்  ஒரு ஆண்டு பணி காலத்தில் இருந்தது. இதற்கு முன்பு இருந்த நிர்வாகிகள் என்னை முழுமையாக செயல்பட அனுமதித்தனர்.  
    ஆனாலும் இந்த ஒரு ஆண்டு பணிக்காலம் மகிழ்ச்சியை மட்டுமல்ல வலியையும் அளித்திருந்தது. எனது பிளாக் கூட ஒரு  ஆண்டு மௌனம் காத்தது.  என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பதிவிட துவங்கியுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு சுவாரஸ்யமான விஷயங்களை தரும் என்று நம்புகிறேன். படியுங்கள்.... கருத்துக்களை பதியுங்கள்.

       கோயம்புத்தூர் பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளராக 18.09.2011 அன்று 93 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றேன்.  பாரம்பரியமிக்க கோயம்புத்தூர் பிரஸ்கிளப் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்களால் அலங்கரிக்கப்பட்ட பொறுப்பு இது. ஆனா லும் அவர்கள் பொறுப்பில் இருந்த போது இருந்த எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கைகள், அதிக ஊடக பிரதிநிதிகள்  உறுப்பினர்களாக இருக்கும் போது பொறுப்பேற்றேன். கடந்த கால நிர்வாகிகள் செய்த சாதனைகள், சந்தித்த பிரச்சனைகள்....  இது தான் நான் செல்ல வேண்டிய பாதைக்கு விளக்கு வெளிச்சமாக இருந்தது. பொறுப்பேற்ற உடனேயே உள்ளாட்சி தேர்தல்  வந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள சக நிர்வாகிகள் வாய்ப்பளித்தனர். 
     இந்திய தொழில்வர்த்தக சபை(கோவை)  யுடன் சேர்ந்து ‘செழுமையான கோவை, செம்மையான மேயர்’என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அதற்காக அப்போதைய  இந்திய தொழில்வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. கிருஷ்ணனை நிர்வாகிகளோடு  சந்தித்தேன். தெளிவான மனிதர். எடுத்தவுடன் பாஸிட்டிவாக பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.  அனைத்து வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றுவது உங்கள் பொறுப்பு என்று கூறி ஊக்கமளித்தார். 
     ஒரே மேடையில் பதிவு  செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் ஏற்ற வேண்டும். வடமாநிலங்களில் பல கட்சித் தலைவர்களும் ஒரே  மேடையில் ஏறுவது என்பது சகஜம். ஆனால் தமிழகத்தில் அந்நிலை இல்லை. ஆனாலும் திமுக, பாஜ, காங்கிரஸ், மதிமுக  உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உடனே சம்மதித்துவிட்டனர். அதிமுக வேட்பாளர் செ.ம.வேலுச்சாமியை அணுகிய போது,  ‘நான் எந்த மேடையிலும் ஏறி எனது வாதத்தை வலுவாக எடுத்து வைக்கத்தயார். ஆனால் அதிமுகவில் கட்சித் தலைமையின்  அனுமதியில்லாமல் முடிவெடுக்க முடியாது...’ என்றார். 
            வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளர்களில் அவர் முக்கியமானவர். அவர்  கலந்து கொள்ளாவிட்டால் நிகழ்ச்சி வெற்றியடையாது. எப்படியாவது அவரை கட்சித் தலைமையின் அனுமதிபெற்று கலந்து  கொள்ள செய்ய வேண்டும் என்று என்னோடு இருந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு துடிப்பு இருந்தது. முயற்சிகளும் நடந் தது.  நிகழ்ச்சி நடந்த 7.10.2011 அன்று காலை வரை அவர் கலந்து கொள்வது உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும்  அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, முதல்வரின் அலுவலக செயலர்கள் என்று பலரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில்  செ.ம.வேலுச்சாமி கலந்து கொள்ள அனுமதியை பெற்ற போது மணி மதியம் 2.00. 
          அரசியல்கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே  கலந்து கொள்ள அனுமதி என்ற போது, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட விஜய் ஆனந்த் தான் லோக்சக்தா என்ற கட்சியை  சேர்ந்த வேட்பாளர் என்றும், தன்னை மட்டும் அனுமதிக்காதது ஜனநாயகமாகாது என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் இருந்த  என்னிடம் தொடர்ந்து போனில் போராடினார். தினமணி புகைப்படக்கலைஞரும், செயற்குழு உறுப்பினருமான ஆனந்த், அவர்  அரசியல்கட்சி வேட்பாளராக இருந்தாரேயானால், நாம் அனுமதி மறுப்பது நிகழ்ச்சிக்கு கரும்புள்ளி ஆகிவிடும் என்று என்னிடம்  கருத்து தெரிவித்தார். என்ன செய்வது..... அந்த கணத்தில் சட்டென எனக்கு ஒரு யோசனை தோன்றியது, அனைத்து கட்சி  வேட்பாளர்களிடமே இதற்கான முடிவை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தேன்... அவர்கள் மறுக்க முடியாது என்று நம்பியதால்.  விஜய்ஆனந்த் என்பவர் தான் அரசியல்கட்சி வேட்பாளர் என்றும் தனக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோருகிறார்...  அனுமதிக்கலாமா என்று கேட்டேன்.... அனைத்து வேட்பாளர்களும் பெருந்தன்மையோடு அனுமதிக்க விஜய்ஆனந்த் 5 நிமிடம்  பேசினார்... நிகழ்ச்சி முடிந்தவுடன் வேட்பாளர் பட்டியலை வாங்கி பார்த்தபோது அவர் லோக்சத்தா கட்சியை சேர்ந்தவர் என்றாலும்  சுயேச்சை வேட்பாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது தனிக்கதை. 
          ஆனாலும் செழுமையான கோவை, செம்மையான மேயர்  நிகழ்ச்சி கோவையில் பதிப்பாகும் அனைத்து நாளிதழ்களிலும் பெரிய அளவில் பிரசுரமாகியிருந்தது. எனக்கு தெரிந்து முதல்  முறையாக கோயம்புத்தூர் பிரஸ்கிளப்பின் நிகழ்ச்சியின் விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதும், அனைத்து   பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானதும் இதுவே முதல்முறை என்று கருதுகிறேன்....வெற்றிகரமாக பார்க்கப்பட்ட இந்த  நிகழ்ச்சியிலும் ‘வலி’ இருந்தது.  பொதுவாகவே தன்னை முன்னிருத்திக் கொள்ளாமல் நிகழ்ச்சியை முன்னிருத்த வேண்டியது  பத்திரிக்கையாளர் கடமை. எனது இயல்பும் அதுவே. 
           ஆனால் ஒரு சிலருக்கு இருக்கும் விளம்பர ஆசையால் ஏற்பட்ட ‘வலி’  அது... ஒரு படகை நகர்த்த துடுப்பு போடும் போது தோள்கள் வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் படகு வெற்றிகரமாக ஆற்றில்  நகர்ந்து வேகமெடுக்கும் போது வலிகள் மறைந்து மகிழ்ச்சி நிறையும். இதைவிட வலி ஏற்படும் போது மௌனமாக இருப்பது   நம்முடன் பயணிப்பவர்களின் மகிழ்ச்சியை காக்கும். இதையே நானும் செய்தேன்.... படகு வேகமெடுத்தது.... 
அனுபவங்களை அடுத்த பதிவில் தொடருவேன்....

June 8, 2012

மீண்டும் பிளாக்கில்.....


அன்பு நண்பர்களே!

வணக்கம்.

எனது பிளாக்கிற்கு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. நண்பர்கள் பலரும் நான் தற்போது பிளாக்கில் புதிய கட்டுரை ஏதும் எழுதாதது குறித்து கவலையுடன் கேள்வி எழுப்புகின்றனர். பத்திரிக்கையாளனாக நான் சந்தித்து வரும் சுவராஸ்யங்களையே எழுதி வந்தேன். பாரம்பரியம் மிக்க கோவை பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளராக 18.09.2011  பொறுப்பேற்ற பின்னர் தற்காலிகமாக பிளாக்கில் எழுதுவதை நிறுத்தியுள்ளேன். ஏன்எனில் நான் எழுதும் கருத்துக்கள் பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளர் என்ற முறையில் பார்க்கப்படும் என்பதால்....எனது தனிப்பட்ட கருத்துகூட பிரஸ்கிளப்பின் கருத்தாக கருதப்படும் என்பதால்.... எனது பதவி காலம் வரும் செப்டம்பரில் முடிகிறது. அதற்கு பின்னர் சுதந்திரப்பறவையாக மீண்டும் பிளாக்கில் எனது அனுபவங்களை எழுத துவங்குவேன்.

தோழமையுடன்....ரா.வேலுச்சாமி

June 28, 2011

யாருக்கும் வெட்கமில்லை!

15.08.1947
இந்தியர்கள் பெருமையுடன் நினைத்து பார்க்கும் நாள்! வானுயர்ந்த கட்டிடங்கள், புழுதியை கிளப்பியபடி பறக்கும் கார்கள்.... விண்ணை முட்டி நிற்கும் நட்சத்திர ஓட்டல்கள்...சகலத்திற்கும் பயன்படும் காந்தி படம் போட்ட கரன்சிகள்!
சுதந்திரம் யாருக்கு சொந்தம்.... நாட்டு மக்கள் அ
னைவருக்கும் சொந்தமில்லையா.....?
ஆங்கிலேயன் அடித்த கொள்ளைக்கு கூட அர்த்தம் உண்டு... அவன் அந்நியன். ஆனால் நம்மவர்கள் நம்மையே அடிக்கும் கொள்ளையும்....அதனால் அப்பாவிகள் அனுபவிக்கும் கொடுமைகளும்.... என்ன செய்தால் தகும் என்று பீறிட வைக்கிறது.
கோவை அருகேயுள்ள நல்லாம்பாளையம் என்ற இடத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 10 க்கு 8 என்ற அளவிலான ஒரே அறை கொண்ட சிறியஓட்டு வீடு அது.(64) ஆண்டு சுதந்திர இந்திய சாதனை) சிமெண்ட் பூசப்படாத அந்த வீட்டை அந்த கூலித்தொழிலாளி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டி குடியிருந்து வருகிறார். மனைவி, 4 வயது, 21/2 வயது, 8 மாத கைக்குழந்தை, இவர்களைத் தவிர மாமனார், மாமியார் என்று 7 பேர் அந்த சின்னஞ்சிறு அறையில் குடித்தனம் நடத்தி வருகின்றனர். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும், வரி செலுத்த வேண்டும் என்றால் பட்டா பெற வேண்டும்... பட்டா பெற அதிகாரிகளிடம் பல முறை விண்ணப்பித்திருந்தார் அந்த கூலித் தொழிலாளி! ஆனால் மல்டி மில்லியனர்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கும், குறைந்த கட்டணத்தில் பட்டாவும் அளிக்கும் அதிகாரிகள் கூலித்தொழிலாளியின் ஒரு பக்க விண்ணப்பத்தை குப்பை கூடையில் போட்டார்கள். விளைவு? மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் காலத்தை ஓட்டியது அந்த ஏழை குடும்பம். இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வந்த அசதியில் கூலித்தொழிலாளி, அவரது மனைவி உள்ளிட்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, பெற்றோரை அணைத்தபடி குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தோ பரிதாபம்... மண்ணெண்ணை விளக்கின் சூட்டில் பக்கத்தில் இருந்த மண்ணெண்ணை கேன் உருகி பெரும் தீவிபத்து ஏற்பட்டது. குபீரென பற்றிய தீயில் பிஞ்சுகள் உட்பட அனைவரும் கருகினர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து காப்பாற்ற முயல 2 1/2 வயது பெண் குழந்தை அங்கேயே உடல் கருகி இறந்து போனது. 8 மாத குழந்தை உடல்முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது. 4 வயது ஆண் குழந்தையின் நிலைமையும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. கூலித்தொழிலாளி, அவரது மனைவி, மனைவியின் பெற்றோர் ஆகியோரும் தீக்காயங்களுடன் போராடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் என் நெஞ்சை உடைக்கும் கேள்விகள் இது தான்....
பல ஆயிரம் சதுர அடிகளில் வீடுகளை கட்டி பெற்ற பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, பெற்றோரையும் தனியே அனுப்பிவிட்டு, கணவனும், மனைவியும் மட்டும் வாழும் ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் தான் தற்போது அதிகம். 1947 அளித்த சுதந்திர பரிசை பயன்படுத்தி நேர்மையாக சிலரும், சொந்த சகோதரர்களான நாட்டு மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்த பலரும் இதில் அடக்கம். ஆனால் அதே சுதந்திர உரிமையுள்ள கூலித்தொழிலாளி சின்னஞ்சிறு அறையில் 7 பேருடன்வாழ்ந்து வருவதையும், அவர்களுக்கு ஒரு பட்டா கொடுக்க கூட நமக்கு யோக்கியதை இல்லை என்பதை பார்த்து யார் வெட்கப்படுகிறோம்.....?
என் குழந்தைக்கு சிறிய வயிற்று வலி என்றால் கூட துடித்து போகிறேன்... இதோ அந்த பிஞ்சுகள் தீக்காயங்களால் கருகிக் கொண்டிருக்கிறதே... அதன் வலி...இந்த நிலைக்கு யார் காரணம்? சில ஆயிரங்கள் கிடைத்திருந்தால் "இளித்தபடி' பட்டா அளித்திருக்கும் அந்த அதிகாரி வர்கமா... இந்த அட்டூழியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் "அமைதியாக' இருக்கும் பொறுப்பான குடிமக்களான நாமா?
காயங்களால் அவதிப்படும் அந்த குழந்தைகளை பார்க்க வெட்கமின்றி போட்டோகிராபர்களுடன் செல்லும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்... அங்கு சென்று கூட சார் கொஞ்சம் முன்னால் வந்து நில்லுங்கள் என்று கடமையாற்றும் என் துறை சார்ந்த நண்பர்கள்...இழப்புகளையும், வலிகளையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த கூலித்தொழிலாளியின் நிலையை செய்தியாக மட்டும் பார்க்கும் "நான்' உட்பட யாருக்கும் வெட்கமில்லை....!
நாம் மனிதர்களாம்!

June 13, 2011

ரெடி... ஆக்ஷன்...

சக பத்திரிக்கை புகைப்படக்காரர் அனுப்பி வைத்த படங்கள் இவை.... கோவை மாநகர போலீஸ் கமிஷனராக ஐஜி சைலேந்திரபாபு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார். அவர் விடைபெற்றதும்
அவரது நினைவாக இந்த படங்களை நண்பர் அனுப்பியது, கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொள்ளத்தோன்றியது. கமிஷனர் சைலேந்திரபாபு தொடர்பான சில சம்பவங்களை கீழே தந்திருக்கிறேன். அவரது செயல்பாடுகள் குறித்து நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்....
* கால்டாக்சி டிரைவர்கள் இரண்டு பேர் சேர்ந்து பள்ளி மாணவர்களான அக்கா, தம்பியை கடத்தி சென்றனர். அதிரடி ஆபிசர் என்று பெயர் எடுத்த சைலேந்திரபாபு குழந்தைகளை பிணமாகத் தான் மீட்க முடிந்தது. இது தமிழகம் முழுவதும் போலீசார் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அதில் ஒருவனை ஒரு மாதம் கழித்து என்கவுண்டரில் "போட்டுத்' தள்ளினர். இது சரிந்த இமேஜை கொஞ்சம் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்தது.
* கல்லூரி மாணவி ஒருவரை கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஒருவன் ஜாமீனில் வருவதும் மீண்டும் பெண்களை கடத்தி கற்பழிப்பதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது. அவனை என்கவுண்டர் செய்யும் முயற்சி கடைசி வரை நிறைவேறவில்லை. மீண்டும் ஜாமீனில் வெளியே சென்ற அவன், ஏதாவது ஒரு பெண்ணை கற்பழிப்பான் என்று போலீசார் எதிர்பார்த்து(!) கொண்டிருந்த வேளையில், அவனது மனைவியை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் கைதாகி போலீசாருக்கு நிம்மதியை கொடுத்தான்.
* கமிஷனர் சைலேந்திரபாபுவுடன் லத்தி, துப்பாக்கியுடன் போலீசார் இருக்கிறார்களோ இல்லையோ, வீடியோ காமிரா, ஸ்டில் காமிராவுடன் இரண்டு போலீசார் உடனிருப்பார்கள். அவர்கள் கமிஷனரின் நடவடிக்கைகளை படம் பிடித்து தள்ளுவார்கள். ஒரு முறை கமிஷனர் பார்பர் ஷாப்பில் முடிவெட்டிக் கொண்டதைக் கூட படம் பிடித்துவிடும் அளவுக்கு கடமை உணர்ச்சி மிகுந்தவர்கள்.
* கல்லூரி மாணவி ஒருவரும், எதிரே பைக்கில் வந்த இரு இளைஞர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் மூன்று பேரும் காயங்களுடன் ரோட்டில் சரிய... அந்த வழியாக வந்த கமிஷனர் உடனடியாக களத்தில் இறங்கினார். படுகாயத்துடன் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த படம் போலீசாரிடமிருந்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அடிபட்டு கிடந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கேள்வி!
* குண்டாக இருக்கும் போலீசாரை ஒல்லியாக்க இருநாள் பயிற்சியை கமிஷனர் ஏற்பாடு செய்தார். வழக்கம் போல பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பயிற்சி துவக்கப்பட்டது. மிகவும் குண்டான போலீஸ்காரர் ஒருவரை குறிவைத்து போட்டோகிராபர்கள் படம் எடுத்து தள்ள.... அடுத்த ஒருவாரத்திற்கு அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இந்த கவலையிலேயே அவர் 5 கிலோ எடை குறைந்தாராம்.
*தினமும் இரு நிகழ்ச்சிகள், உள்ளூர் பத்திரிக்கைகளில் கட்டாயம் படம் வெளியாகவேண்டும். லோக்கல் சேனல்களில் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்க வேண்டும்....மொத்தத்தில் கமிஷனர் ஒரு விளம்பரபிரியர் என்றே பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேச்சு இருந்தது. ஆனாலும் அவரைப்பற்றி விமர்சனங்கள் ஏதும் பெரிய அளவில் வரவில்லையே... ஏன் என்ற கேள்வி எழும்......
அதற்கு காரணம்....
எந்த பிரச்சனை என்றாலும் களத்தில் ஐஜி சைலேந்திரபாபு நேரடியாக நின்றதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. உதாரணமாக கோட்டை ஈஸ்வரன் கோயில் தேரோட்டத்தின் போது ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் களத்தில் நேரடியாக இறங்கியதால் மதக்கலவரம் உருவாவது தடுக்கப்பட்டது. பிரச்சனையை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியல், அதிகார வேறுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுத்தார். தேர்தலுக்கு முன்பு அப்போதைய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிட்ட சேலஞ்சர் துரையின் வீட்டை தாக்குவதற்காக ஒரு கும்பல் நள்ளிரவில் முற்றுகையிட்ட போது களத்தில் இறங்கிய கமிஷனர் அவர்களை விரட்டியடித்தார். இதனால் அரசியல் ரீதியான பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தவிர மாணவர்களின் கல்வி, மேல்படிப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற உதவுவது போன்ற பலவற்றை செய்து பொதுமக்களிடம் நல்ல பெயர் பெற்றிருந்ததால் அவரது விளம்பர மோகத்தை பத்திரிக்கையாளர்கள் கண்டு கொள்ளவில்லை.

March 12, 2011

இது சரிதானா?

கோவை சட்டக்கல்லூரியில் கடந்த சில தினங்களாக 60 மாணவர்கள் பேராசிரியை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காரணம்... விடுதியில் தங்கியிருக்கும் மாணவி ஒருவர் முன்னறிவிப்பின்றி வெளியே சென்று விட்டு நள்ளிரவு திரும்பியதாகவும், அவரை அந்த பேராசிரியை கண்டித்ததாகவும் கூறுகின்றனர். எது நடந்ததோ! ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதலில் பேராசிரியையின் அறையில்
அரசியல் தலைவர்களின் படங்களை மாட்டினர். அதற்கு பின்னர் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் கொடும்பாவிகளை எரித்தனர். அதன்பின் அரசியல் சட்டப்புத்தகத்தை எரித்தனர்(சட்டமாணவர்கள்), கடைசியாக நேற்று 11.3.2011 அன்று உச்சகட்டமாக இந்திய தேசியக்கொடியை எரித்தனர். அடுத்த கட்டமாக பாகிஸ்தான் கொடியை சட்டக்கல்லூரியில் ஏற்றப்போவதாக அறிவித்துள்ளனர். ஒரு பேராசிரியையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தேசியக் கொடியை எரிப்பதற்கும் என்ன சம்மந்தம்? பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம் என்று கூறுவது எதற்காக? இவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் தானா அல்லது மாணவர்கள் என்ற போர்வையில் உள்ளநபர்களா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. மாணவர்களின் அத்தனை போராட்டங்களும்(!) போலீசாரின் கண்முன்னே நடந்தவை. அவற்றை தடுக்க சிறு துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப்போடவில்லை. இதைவிடக்கொடுமை அந்த கல்லூரியின் முதல்வர் இது குறித்து புகார் ஏதும் கொடுக்கவோ, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....
பின்குறிப்பு: இந்த சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருவதால் அந்த கல்லூரியை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

March 5, 2011

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்

ஸ்பெக்ட்ரம் குறித்து துபாயில் பணிபுரியும் இன்ஜினியர் ஒருவரின் மெயில் ஒன்று எனக்கு வந்தது. சிந்திக்கக்கூடிய இந்த தகவலை பத்திரிக்கைகளில் பணிபுரியும் அனைவரும் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று கோரிக்கையுடன் வந்ததை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.... சிந்திப்போம்.....

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள்

பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G

அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In Coming and Out Going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று

இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை

அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான்.

122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய

நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத

நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக

கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது"INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?

மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle cl-ass" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை

மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1:உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2:பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3:தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL" போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4:MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5:தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6:நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில்

ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7:இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8:நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை

பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள்

பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்

என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10:ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.

இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ

தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.....

Thanks Er.Sivakumar

February 19, 2011

கொலைகளும் காரணங்களும்....

இப்போதெல்லாம் முணுக்கென்றால் மூன்று கொலை விழுவது சாதாரணமாகிவிட்டது. அதற்கு உதாரணம் சமீபத்தில் கருமத்தம்பட்டி அருகே நடந்த இரட்டை கொலை. விசைத்தறி தொழிலதிபர் தம்பதியனருக்கு சொத்து விற்றதில் 40 லட்ச ரூபாய் கிடைத்திருக்கிறது என்ற தகவலறிந்த அவர்களது விசைத்தறி கூடத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் இந்த கொடூர கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறி போலீசார் அவர்களை கைது செய்திருக்கின்றது. 3 வயதில் ஒரு குழந்தை, 7 மாதத்தில் ஒரு குழந்தை என்று இரு குழந்தைகளையும் அனாதைகளாக்கிவிட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கோபத்தில் கொதிக்க வைத்ததோடு, கொலையான தம்பதியினர் துன்புறுத்தப்பட்ட விதமும் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. பணம் எங்கே என்று கேட்டு இருவரது பிறப்புருப்பிலும் ஆயுதத்தால் கொதறிய கொலைகாரர்கள் இன்னும் பல விவரிக்க முடியாத கொடூரங்களை செய்திருக்கிறார்கள். 20, 22 வயதுடைய இருவரால் இப்படி இருவரை கொடூரமாக கொலை செய்திருக்க முடியுமா என்று சந்தேகங்கள் எழாமல் இல்லை. இந்த வழக்கில் மேலும் ஒரு சிலர் போலீசில் பின்னர் சிக்கக்கூடும்.... பணம் வேண்டும் என்றால் பணத்தை கொள்ளையடித்து செல்ல வேண்டியது தானே? ஏன் கொலை செய்கிறார்கள்? இவர்களுக்கு எப்படி இந்த தைரியம் வந்தது? என்று பல கேள்விகள் எழுகின்றன. எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும், எவ்வளவு கொடூர குற்றம் செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்பது இப்போது நிச்சயமில்லை. சட்டத்தின் ஓட்டை உடைசல்களை பயன்படுத்தி குற்றவாளிகள் பலரும் வெளியே வந்துவிடுகின்றனர். மீறி தண்டனை பெறுபவர்களுக்கும் அதிக பட்சம் ஆயுள் தண்டனை தான்... மிருகங்களுக்கு மனித உரிமை பேசும் கூட்டம் அதிகம் என்பதால் தூக்கு தண்டனை எல்லாம் கிடையவே கிடையாது. 22 வயதில் கொலை செய்து கொள்ளையடிக்கும் ஒருவன் ஆயுள் தண்டனை பெற்றாலும் 34 வயதில் விடுதலையாகிவிடுவான்.... இந்த தைரியம் தான் பச்சிளம் குழந்தைகளைக் கூட கொடூரமாக கொலை செய்யத்தூண்டுகிறது.
அதிகாரிகளின் அலட்சியம் கூட கொலைகளுக்கு காரணமாகிவிடும் என்பது சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த நிருபர் ஒருவர் பகிர்ந்து கொண்ட சம்பவத்திலிருந்து தெரியவந்தது. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு சைக்கோ கொலைகாரன் கைவரிசை... 9 பேர் பலி என்று அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்து மக்களை அலறச்செய்தன. முதல் கொலையிலேயே சிக்கியிருக்க வேண்டியகொலையாளி தொடர்ந்து கொலைகளைச் செய்ய காரணம் என்ன... நிருபர் விவரித்தார், "முதலில் கொலையான நபர் தலையின் பின்பக்கம் வாட்டர் டேங்க் இரும்பு மூடி வெட்டி இறந்து கிடந்தார். உடலைப்பார்த்தவுடனேயே அது கொலை என்பது சம்பவ இடத்திற்கு சென்ற எங்களுக்கே தெரிந்துவிட்டது. ஆனால் அப்பகுதி உதவிக்கமிஷனரோ, கொலை வழக்கு என்று பதிவு செய்தால், கொலையாளியை பிடிக்க அலைய வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, அதை தற்கொலை என்று சாதித்தார். அதற்கு பின்னர் அதே போன்ற கொலைகள் தொடர்ந்தன. அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த அதிகாரி மாற்றப்பட்டு வேறு அதிகாரி வந்தார். அவர் நடத்திய வாகன சோதனையில் கொலை கும்பல் பிடிபட்டது. அதுவரை போலீஸ் கணக்கில் 6 கொலைகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அந்த கும்பலோ சர்வசாதாரணமாக 9 கொலைகள் செய்ததாக வாக்குமூலம் அளித்தது. "முதல் கொலை செய்த போதே மாட்டிவிடுவோம் என்று நினைத்தோம். ஆனால் அது தற்கொலை என்று பேப்பரில் செய்தி வந்தது. இதனால் கத்தி போன்ற கொலைக்கான ஆயுதங்களை தவிர்த்து வேறு பொருட்களால் கொலை செய்தால் போலீசால் பிடிக்க முடியாது என்று தைரியம் வந்தது. அதனால் கொலைகளை செய்தோம்...' என்றது அந்த கும்பல். பணத்திற்காக கொலை செய்த அந்த கும்பல், கொலையுண்ட பலரிடமிருந்து பறித்த தொகை எவ்வளவு தெரியுமா வெறும் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தான்....' என்று முடித்தார். குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது.

January 18, 2011

டிரங்க் அன்ட் டிரைவ்

(சிரிக்க மட்டும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்)
கோவையில் உள்ள சீனியர் பத்திரிக்கையாளர் அவர். நண்பர்கள் பலர் அவரது பணத்தில் "டாஸ்மாக்' வரி கட்டுவது வழக்கம். ஆனால் அன்றோ அவர் பாக்கெட் வறுமையில் வாடியது. பாக்கெட் வறுமை என்றால், முகத்திலும் வாட்டம் இருக்கத் தானே செய்யும்.
வாட்டத்தைக் கண்டார் சக நிருபர் ஒருவர். காரணத்தை விசாரித்துவிட்டு, "என்ன அண்ணா இதுக்குப் போய் வருத்தப்படறீங்க.... எடுங்க வண்டியை...' என்று உரிமையுடன் பில்லியனில் தொத்திக் கொண்டார்.
பின்னவர் வழி காட்ட முன்னவர் வண்டி ஓட்டினார். சிறிது தூரம் சென்றதும், "நிறுத்து.. நிறுத்து...' என்று பின்னவர் கத்த... முன்னவர் திடீரென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். எதிரே பார்த்தால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். "போலீசை பார்த்ததும் இவன் ஏன் பயக்கறான்....!' வியப்புடன் சீனியர் இருக்கையில், மளமளவென வண்டியிலிருந்து இறங்கி இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தார் பின்னவர். ஏதோ பேச்சு வார்த்தை நடந்தது. இன்ஸ்பெக்டர் சில நூறு ரூபாய் தாள்களை பின்னவரிடம் திணித்தார். திரும்பி வந்த பின்னவர், "விடு "வரி' கட்ட....!' வண்டி கிளம்பியது.
"அந்த ஆளுகிட்ட கடன் வாங்கினாயா...?' என்று சீனியர் கேட்டு வைத்தார். "இல்லண்ணா... நான் எப்போதும் இப்படித் தான் அவரிடம் உரிமையா வாங்கறது உண்டு....' என்று கூறி சீனியரையே அதிர வைத்தார் பின்னவர். "வரி' செலுத்தும் வைபவம் முடிந்த பின்னர், பின்னவர் விடைபெற்றுக் கொள்ள சீனியர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
திடீரென வழியில் ஒரு போலீஸ் கரம் பைக்கை வழிமறித்தது. "குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறீர்களா.... பைன் கட்டுங்க....' போலீசின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்த சீனியர், "என்ன சார்... "வரி' கட்ட நீங்க தான் பணம் கொடுத்தீங்க... இப்ப நீங்களே பிடிக்கறீங்களே....' சற்று திகைந்த இன்ஸ்பெக்டர்... "ஓ... நீங்க நம்ம "பின்னவர்' பிரண்டா.... சரி சரி பார்த்து போங்க...!' என்று கூறி அனுப்பி வைத்தார்.
சம்பவத்தை சக பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டு சிரித்தார் சீனியர் நிருபர்..."கல்லுல நாரு உரிக்கறவங்கய்யா நம்ம ஆளுங்க...' சக நிருபர் ஒருவரின் கமெண்ட் இது.

December 27, 2010

2000 ஆயிரம் ரூபாய்க்கு 2 வருஷம்!

ஒரு சாமானியனின் அனுபவம்
25.12.2010 அன்று கோவையிலிருந்து திருப்பூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது எனது அருகில் அமர்ந்திருந்த வெங்கடாச்சலம் என்ற 70 வயது பெரியவர் சகஜமாக பேசியபடி வந்தார்.
"மதுரையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பிற்காக 6 குழந்தைகளோடு திருப்பூர் வந்தேன். பனியன் கம்பெனியில் கஷ்டப்பட்டு உழைச்சோம். சிக்கனமா வாழ்ந்ததால மிச்சமான காசுல 3 சென்ட் நிலம் வாங்கினேன். அதுல கடன வாங்கி வீடும் கட்டியாச்சு.
வரி விதிக்கனும்னு திருப்பூர் முனிசிபாலிட்டி ஆபிசுக்கு போகச் சொன்னா எனது மகன்கள் நீயே போய் வா என்று சொல்லிட்
டாங்க... நானும் முனிசிபாலிட்டி ஆபிசுக்கு போனேன். விண்ணப்பத்தை சரியா பூர்த்தி செஞ்சும் கொடுத்தாச்சு. அப்போ அங்க வேலையில இருந்த மாடசாமியோ.... மடசாமியோ.... நாளைக்கு வான்னு அனுப்பினார். அடுத்த நாள் போனேன். ஒரு வாரம் கழிச்சு வான்னு சொன்னார். இப்படியே ஒன்றரை வருஷம் நடையா நடந்தேன். ஆனா வேலை ஆகலை. ஒரு நாள் என்னோட சின்ன பையனை அழைச்சுட்டு போனேன். அப்ப அந்த ஆபிசரு, 10,000 ரூபாய் கொடுத்தா வேலை ஆகும்னு சொல்லிட்டதா பையன் சொன்னான். அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன். பையன் பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டான்.
நானோ மறுபடி மறுபடி முனிசிபாலிட்டி ஆபிசுக்கு போய் வந்துட்டிருந்தேன். அப்போ அங்க அந்த செக்சன்ல உயரதிகாரியா இருந்த லேடி ஆபிசருக்கிட்டே போய் முறையிட்டேன். அவங்க, மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டினாத் தான் வரி விதிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு 1000 ரூபாயாகும்.
நானும், பசங்களும் சேர்ந்து அந்த தொட்டியையும்
கட்டினோம். அப்புறமும் வரி விதிச்சபாடில்லை. ஒரு நாள் அங்கே இருந்த ஒருத்தரு பார்த்து, என்ன பெரியவரே இத்தனை நாளா இங்க வந்திட்டிருக்கீங்க... என்ன விசயம்னு கேட்டார். அவர் யாருன்னு தெரியலை. அவர்கிட்ட விவரத்தைச் சொன்னேன். அவரு அந்த மாடசாமிகிட்ட கூட்டிட்டு போய் காரியத்தை முடிச்சு கொடுங்கன்னு சொன்னார். அவரோ பணம் கொடுத்தாதான் ஆகும்னு சைகை காமிச்சார். எங்கூட வந்தவரு உங்களாலே எவ்வளவு பணம் தர முடியும்னு கேட்டார். 1000 தரம் முடியும்னுனேன். அதுக்கு மாடசாமி ஒத்துக்கல. பின்னால 2000 ம்னு முடிவாச்சு. அவருக்கு 2000, வரி 2500 னு 4500 ரூபா கொண்டாங்கனு அனுப்பி வச்சாங்க.... அடுத்த நாளே வீட்டுக்கு வந்து பணத்தை பொரட்டி கொண்டு போய் கொடுத்தேன். அப்புறமா வரி விதிச்சாங்க... இந்த 2000 ரூபாயை வாங்க என்னை 2 வருஷம் நடக்கவிட்டாங்க தம்பி.....ஆனா ஒன்னு கொஞ்ச நாள்ளே முனிசிபால்டியிலே வரி விதிக்க பணம் வாங்கனதா ஒருத்தர போலீஸ் புடிச்சுட்டு போச்சுனு பேப்பர்ல போட்டிருந்தான்....' என்று முடித்தார்.
"உங்க கிட்ட பணம் வாங்கின மாடசாமியையா?' என்று நான் கேட்க..."இல்ல தம்பி இது வேற யாரோ?' என்றார் அவர். எனக்கு "பொசுக்' என்றாகிவிட்டது. நம் நாட்டில் பெரும்பலான சாமானியர்கள் அனுதினமும் லஞ்சப் பேர்வழிகளால் இப்படி அல்லப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வெளியே சொல்பவர்கள் வெகு சிலர் தான். என்று தணியும் இந்த (லஞ்சப்பேய்களிடமிருந்து) சுதந்தர தாகம்?

December 17, 2010

வீட்டுமனை "விதி'ப்படிதானா?

பத்திரிக்கைத்துறை அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஊடகத்துறையால் ஏற்படுகிறது. இதன்காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இந்த வீட்டுமனை சலுகையை பெற கடந்த பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் போராடிவருகின்றனர். சாதாரண பத்திரிக்கையாளரால் கோவை போன்ற நகரங்களில்
மார்க்கெட் விலையில் வீட்டுமனை வாங்குவது என்பது குதிரை கொம்பு என்பதோடு, பத்திரிக்கையாளர் நகரில் வசிப்பது அவசியத் தேவை என்பதால் இந்த கோரிக்கை நியாயமானது என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
கோவை பத்திரிக்கையாளரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எங்கு நிலம் அமையும், யார் யாருக்கெல்லாம் நிலம் கிடைக்கும் என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசும் டாபிக் ஆனது. குறைந்தது 5 ஆண்டு அனுபவம் உள்ள பத்திரிக்கையாளர்கள் தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்றனர்.
முதற்கட்டமாக 130 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் பேச்சு இருந்தது.( எந்த விபரமும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.) முதல்வர் கருணாநிதி 12.12.2010 அன்று கோவை வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் 10.12.2010 அன்று அவசர அவசரமாக குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியலை மக்கள் தொடர்பு அதி காரி காண்பித்தார். அதில் மிகப்பெரிய ஆச்சரியம் தகுதியற்ற பலரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பத்திரிக்கை ஆசிரியர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று 161 பேர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களிலிருந்து 130 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக 11.12.2010 அன்று குலுக்கல்(!) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்ய தகுதியின் அடிப்படையில் பல வாய்ப்புகள் இருக்க, குலுக்கல் முறையில் தேர்வு செய்வது எப்படி சரியாக இருக்கும், அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திட்டமிட்டப்படி குலுக்கல் நடந்து 130 ÷ பர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தகுதியான பலருக்கு அதிர்ஷ்டமில்லை. குலுக்கல் முறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், "20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இடம் கிடைக்கும் நிலை வந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்தால் இடம் கொடுப்பதையே நிறுத்திவிடுவார்கள்' என்று சிலர் கருத்து தெரிவித்ததால் தீவிரம் காட்ட முடியவில்லை.
ஆனாலும் தவறு செய்பவர்களையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் விதிமுறை மீறல்களை அனுமதிக்கலாமா என்ற மனஉளைச்சலும் ஏற்படாமல் இல்லை. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கும் விவகாரத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை....
* பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கும் அரசு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கு என விதிமுறைகள் ஏதும் இல்லையா?
* பயனாளிகள் தேர்வுக்கென அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவை அமைக்காதது ஏன்?
*20 ஆண்டுகளாக கோவையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் குலுக்கல் என்ற முறையால் வெளியில் நிற்க, நேற்று வந்த பத்திரிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வது நியாயமா?
*வீட்டுமனை என்பது பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவா அல்லது சொத்து சேர்க்கவா?
*கோவையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை தகுதியை புறந்தள்ளியது ஏன்?
*ஒரே குடும்பத்தில் பலருக்கு மனை ஒதுக்கீடு நியாயமா? அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கப்போகிறார்களா?
*உண்மையாகவே மக்களிடம் செல்லும் பத்திரிக்கைகள், பெயரளவிற்கு நடக்கும் பத்திரிக்கைகள் என்ற வித்யாசம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாதா?
* பத்திரிக்கை என்று பதிவு செய்திருந்தாலே அவர்களுக்கு வீட்டுமனை என்றால், நூற்றுக்கணக்கான பதிவு பெற்ற பத்திரிக்கைகள் உள்ளனவே... அவற்றிற்கெல்லாம் வீட்டுமனை வழங்க கோவையில் இடம் உள்ளதா?
*அனுபவம் அடிப்படையில் 130 பேரை தேர்வு செய்துவிட்டு அனுபவம் குறைந்தவர்களுக்கு அடுத்த கட்டத்தில் கொடுப்பது தானே நியாயம்?
* உழைக்கும் பத்திரிக்கையாளர் சட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் தானே பத்திரிக்கையாளர்கள்?
*கோவை செய்தியை கவனிக்கிறார்கள் என்பதற்காக பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க முன்வரும் மாவட்ட நிர்வாகம், சென்னையில் செயல்படும் பல நிறுவனங்களுக்கு கோவையில் நிருபர்கள் இல்லாமல் போன் மூலம் தகவல் பெற்று வெளியிடுகிறார்களே அவர்களுக்கெல்லாம் மனை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?
இன்னும் ஏராளமான கேள்விகள் பலரது மனதில் எழுந்துள்ளது. வருத்தங்களும் தான்....சிலர் நீதிமன்ற படியேறவும் தயாராகிவிட்டனர். பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை என்பது விதிமுறைப்படி ஒதுக்க வேண்டுமே தவிர, தலை"விதி'ப்படி ஒதுக்க கூடாது என்பதே என் நிலை.

December 3, 2010

பத்திரிகையாளர்களா? பவர் புரோக்கர்களா

ஆங்கிலம் பேசும் பர்கா தத் போன்ற டில்லி பத்திரிக்கையாளர்களின் "பணவேட்டை' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விவகாரங்களில் சந்தி சிரிக்கின்றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளியிடாமல் இருக்க பல நேஷனல் மீடியாக்கள் "லாபம்' பார்த்த விவகாரமும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. மீடியாக்களில் நடக்கும் கேவலங்களை மீடியாக்கள் தான் வெளியிட வேண்டும் என்பதை உணர்ந்த சில பத்திரிக்கைகள் தற்போது இவற்றை வெளிச்சமிட்டு வருகின்றன. இதையொட்டி தமிழக அரசியல் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அனைவரும் படித்தேயாக வேண்டும்..... இதே உங்கள் பார்வைக்கு...!
பத்திரிகையாளர்களா? பவர் புரோக்கர்களா?
என்.டி.டி.வி என்ற பிரபலமான சேனலின் தலைமைப் பொறுப்பில் உள்ள பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையின் எடிடோரியல் இயக்குனர் வீர் சங்வி உள்ளிட்ட பலர் மீதும் எழுந்துள்ள குற்றச்சாட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாறிப் போய்கிடக்கிறது. தேசிய அரசியலைக் கலங்கடிக்கும் தற்போதைய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் உள்ளுக்குள் போகப்போக நிறைய இடங்களில் மர்ம முடிச்சுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சில மர்ம முடிச்சுக்கள் மீடியா உலகத்தின் ஜாம்பவான்களாக பொதுமக்களிடம் தினந்தோறும் பேச்சாலும் எழுத்தாலும், தங்களை அறிவுஜீவிகளாகவும், யோக்கிய சிகாமணிகளாகவும் காட்டிக் கொண்டே உலவி வரும் ஒருசில கருப்பு ஆடுகளை, இப்போது வெளியுலகத்துக்கு தெரிய வைக்கும் புண்ணியத்தை ஸ்பெக்ட்ரம் செய்துள்ளது. பெயர் நீரா ராடியாவாம். இவர்தான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆல் இந்தியா ரேடியோ. வயது 50 ப்ளஸ். பிரிட்டனை சேர்ந்த என்.ஆர்.ஐ. தொழில் கார்ப்பரேட் லாபிஸ்ட். புரியும்படி சொன்னால், பெரும் பணக்கார தொழில் நிறுவனங்களுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாமே அரசு மற்றும் அதிகார வர்க்கத்திற்குள் ஊடுருவி காரியம் சாதிப்பதற்காக சம்பளம் கொடுத்து ராடியா போன்ற ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வதுண்டு. தாங்கள் விரும்பியதை செய்து முடிக்க எந்த வழிகளையும் மேற்கொள்ளத் தயங்காத தைரியசாலிகள் இவர்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அதிகார வட்டாரங்களில் இவர்களுக்கு இருக்கும் சகட்டுமேனி தொடர்புகளை வைத்து, அரசின் கொள்கைகள், விதிமுறைகளையே கூட மாற்றி காரியம் சாதிப்பார்கள். அரசியல், அரசாங்கம் ஆகியவற்றோடு எப்போதும் ஒட்டிக்கொண்டே நிற்பவர்கள் பத்திரிகையாளர்கள். அதிகார மையங்களுக்குள் எளிதில் நுழைந்து திரும்பும் ஆற்றல் மீடியாக்காரர்களுக்கு உண்டு. எனவே, மீடியாக்காரர்களையும் தங்களது காரியங்களுக்கு இதுபோன்று தரகர்களாக பயன்படுத்திக் கொள்வதுண்டு. இதனாலேயே, டெல்லி பத்திரிகையாளர்களில் பலரும் புரோக்கர் தொழிலையும் சீக்ரெட்டாக செய்து வருகின்றனர் என்பதும் பலரும் அறியாத செய்தி. இதுகூட, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். இத்தனை நாட்கள் இருட்டுக்குள் இருந்தது. இப்போது ராடியா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2009&ம் ஆண்டு மே, ஜூலை மாதங்களில் மட்டும் 104 முறை வருமானவரி இலாகாவால் ராடியாவின் போன் டேப் செய்யப்பட்டுள்ளது. அதில், யார் யாருடன் பேசினார் என்னென்ன பேசினார் என்ற விவரங்களை, ‘ஓப்பன் மேகசின்’ என்ற இணையதள பத்திரிகையும் ‘அவுட்லுக்’ இதழும் வெளியிட்டுள்ளன. ஒரு சிலரைத் தவிர வெகுஜன பத்திரிகைகள் எதுவுமே இதை செய்தியாக்கவில்லை. ராடியாவின் புரோக்கர் வேலைக்கு ஒத்து ஊதியதும் உதவி செய்ததும் முக்கிய பத்திரிகையாளர்கள் என்பதால், தனது சாதியைக் காட்டிக் கொடுக்க விரும்பாததே இதற்கு காரணம். ஆனாலும், இந்த டேப்பை ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆங்கில ஏட்டிலேயே இந்த தகவல் வந்துள்ளது என்று சில அரசியல்வாதிகள் மேற்கோள் காட்டுவதுண்டு. ‘ஆங்கில மீடியா என்றாலே அறிவாளிகளும் உண்மை விளம்பிகளும் மட்டுமே ஜீவிக்கக் கூடிய இடம்’ என்ற குருட்டு நம்பிக்கைகாரர்கள் இந்நாட்டில் நிறைய உண்டு. ஆனால், சரளமான ஆங்கிலத்தில் நாட்டு நடப்புகளை எல்லாம் தொண்டை வலிக்க தினமும் பேசும் பர்கா தத்தும், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மட்டுமே பேனாவை வளைத்து வளைத்து எழுதும் கட்டுரையாளர் வீர் சங்வியும் இந்த புரோக்கர் நீரா ராடியாவிடம் பேசும் பேச்சுக்களை வைத்துப் பார்த்தால் இவர்கள் பத்திரிகையாளர்களா இல்லை பவர் புரோக்கர்களா என்ற கேள்வியே எழுகிறது. உரையாடலை வைத்து பார்க்கையில், சர்வ சாதாரணமாக அதிகார வளையத்திற்குள் ஊடுருவும் வல்லமையைப் பெற்றுள்ளார் இந்த ராடியா. தான் விரும்பும் தகவலை உரிய நபருக்குக் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை பர்கா தத் மூலம் செய்கிறார். அதைவிட மிகப்பெரிய கட்டுரையாளராக கருதப்படும் வீர் சங்விக்கு, அவர் எழுதப்போகும் கட்டுரையில் என்னென்ன பாயின்ட்ஸ் வர வேண்டுமென்று டிக்டேட் செய்கிறார் ராடியா. இன்னும் பல முக்கிய மீடியா உலக ஜாம்பவான்கள் ராடியாவுடன் தொடர்பில் இருந்துள்ளது உரையாடலில் தெரிகிறது. ஏராளமானோர் ராடியாவின் ‘பே ரோலில்’ இருப்பதாகக்கூட ஒரு தகவல் உண்டு. ராடியாவும் பல முக்கிய பத்திரிகையாளர்களும் பேசும் அந்த உரையாடல், யூ டியூப்பில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்துவிட்டது. அந்தளவுக்கு இந்த கும்பலுக்கு செல்வாக்கு. டெலிகாம் இலாகா-விற்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதை, இந்த கார்ப்பரேட் மீடியா கூட்டணி முடிவு செய்கிறது அந்த டெலிபோன் உரை-யாடலில். ராடியாவுக்கு பக்கபலமாக இந்த பத்திரிகையாளர் செய்யும் ‘பவர்’ புரோக்கிங் நிச்சயமாக முகம் சுளிக்க வைக்கும் ரகமே. அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக வர வேண்டுமென்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்று அரசியல் சட்ட தார்மீக நெறி கூறுகிறது. ஆனால், அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக ஆக வேண்டுமென்பது குறித்தும் அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் தரப்பட வேண்டுமென்றும் இந்நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனி தரகர்களும், மீடியா உலகத்தின் முக்கிய பத்திரிகையாளர்களும் சேர்ந்து முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பதே ‘நீரா ராடியா எபிஸோட்’ உணர்த்தும் பாடம். ‘கழகத்தின் சார்பில் யார் யார் அமைச்சரா-வார்கள் என்பதை கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்...’ என்றெல்லாம் இனி வார்த்தைகளைக் கேட்கும் போது ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போலத்தான் இருக்கும் நமக்கு. வழக்கம் போல அதையும் தாங்கிக் கொள்ளவேண்டியதுதான்!
Thanks to Tamilagaarasial

November 22, 2010

எழுத்தும் தெய்வம்..

பத்திரிக்கையாளர்களின் இன்றைய நிலை குறித்து தெளிவான தலையங்கம் ஒன்றை தினமணி இன்று எழுதியுள்ளது. அனைத்து பத்திரிக்கையாளர்களும், வாசகர்களும் படிக்க வேண்டிய தலையங்கம் இது.... அதனால் உங்கள் பார்வைக்கு..
மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.

தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.

எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல், மக்கள் மத்தியில் பயமோ, வெறுப்போ இல்லாமல் பழகக்கூடிய வாய்ப்பும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான், குடியரசுத் தலைவராலும், மாநில ஆளுநர்களாலும் பத்திரிகையாளர்களில் ஓரிருவர் அடையாளம் காணப்பட்டு மாநிலங்களவைக்கும், மேலவைக்கும் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். மக்களோடு மக்களாகப் பழகும் இந்தப் பத்திரிகைப் பிரதிநிதிகள் மக்களின் நிஜமான பிரச்னைகளை எடுத்துரைக்கவும், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டவும் முடியும் என்பதால்தான் இத்தகைய ஒதுக்கீடு நமது அரசியல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில், நிருபர்களுக்குத் தரப்படும் மதிப்பையும், மரியாதையையும் பயன்படுத்தி, தவறான வழிமுறைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதை நாம் எப்படி மறுப்பது? "எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம்' என்று பத்திரிகைப் பணியை ஒரு தவமாக, சமுதாயப் பணியாகக் கருதிப் பணியாற்றுபவர்கள் மத்தியில், எழுத்தைப் பிழைப்பாக்கி, பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் செயல்படும் இடைத்தரகர்களும் பலர் மலிந்துவிட்டனர் என்கிற உண்மையை மறைத்துவிடவா முடியும்?

அரசியல்வாதிகள் மத்தியில் சேவையுணர்வு குறைந்து, பணம், பதவி, அதிகாரம் போன்றவைகளின் மீது மோகம் ஏற்பட்டு விட்டிருப்பதைப் போன்று, அதிகார வர்க்கத்தினர் மத்தியில், தாங்கள் மக்கள் சேவைக்காக மாதச் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் என்கிற எண்ணம் மறைந்து ஊழலுக்கு உதவிக்கரம் நீட்டும் போக்கு அதிகரித்திருப்பது போன்று, குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது போன்று, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் எழுத்துப் பணிக்குத் தொடர்பே இல்லாதவர்கள் பலர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உலவுகிறார்கள் என்பதும், இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதும் நிஜம்தானே!

சமுதாயப் பங்களிப்பாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளோடும், இலக்கியப் பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்துடனும் பத்திரிகை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களும், தினசரிகளும்கூட இந்தப் பட்டியலில் அடக்கம். அதேநேரத்தில், அதிகார வர்க்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அந்தத் தொடர்பின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கும் ஒரு கூட்டம் தயாராகிறதே, அதை எப்படித் தடுத்துவிட முடியும்?

சமீபகாலமாக, காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் காணப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக்காகப் போராடும் பத்திரிகைகள் குறைந்து, நிருபர்கள் என்கிற போர்வையில் வியாபாரிகளின் சார்பிலும், சமூக விரோதிகளின் சார்பிலும், தவறுகளுக்குத் துணைபோகத் தயாராக இருக்கும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் போன்றோருடன் கூட்டணி ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை வேதனையுடன் வேடிக்கை பார்க்க முடிகிறதே தவிர, இவர்களை வடிகட்டவோ, விலக்கி நிறுத்தவோ முடியாதே, என் செய்ய?

மாவட்ட அளவில் இப்படி ஒரு நிலைமை இருந்ததுபோய், மாநில அளவிலும் தேசிய அளவிலும்கூட இந்தப் போக்கு, கடந்த இருபது ஆண்டுகளாக, மலிந்துவிட்டிருக்கிறது. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவும், "கார்பரேட்' கலாசாரத்தின் தாக்கமும், பத்திரிகையாளர்களை அரசியல் இடைத்தரகர்களாக மட்டுமல்லாமல், சமூக விரோதிகள், வர்த்தக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டணியில் இன்றியமையாத அங்கமாக மாற்ற முற்பட்டுவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இப்போது வெளியாகி இருக்கும் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்.

பொதுநல வழக்கு மையம் என்கிற சமூக ஆர்வலர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு வருமானவரி இலாகாவினரால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒட்டுக்கேட்ட தொலைபேசி உரையாடல்களுக்கு நீதிமன்றத்தில் மரியாதை தரப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பத்திரிகையாளர்கள் என்பதுதான் நமக்கு வேதனை அளிக்கும் விஷயம்.

பிரதமர் மீது படிந்திருக்கும் களங்கத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் ஊழல்களையும் திசைதிருப்ப, "அவுட் லுக்', "ஓபன்' போன்ற பத்திரிகைகளையேகூட விலைபேசி ஊழலில் தொடர்புடையவர்கள் இதுபோன்ற பரபரப்புச் செய்திகளை வெளியிட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுபோல, பத்திரிகையாளர்களும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாக வேண்டும்.

சிதைந்துவரும் மக்கள் மன்றத்தின் நம்பிக்கைக்கு நடுவில் இருக்கும் வெள்ளி ரேகை பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களின் நேர்மையும்தான். அதுவும் சிதைந்துவிட்டால் இந்தியாவைக் குழப்பமும் பேராபத்தும் சூழ்ந்துவிடும். பத்திரிகையாளர்கள் இடைத்தரகர்களாகிவிடக் கூடாது!------------22-11-2010
தினமணி
-

November 10, 2010

என்கவுன்டர்....

எல்லாவற்றையும் எப்போதும் எழுதிவிடமுடியாது. சில நேரங்களில்
முழுமையான செய்தியைவிட சமுதாயத்தின்
நன்மையும், அமைதியையும் பத்திரிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதையே கோவை பத்திரிக்கையாளர்கள் செய்திருக்கிறார்கள். அவ்வளவே....!

November 4, 2010

கொடூரங்கள்....

ஒரு பத்திரிக்கையாளன் உணர்ச்சிவசப்படக்கூடாது. நிகழ்வுகளை பதிவு செய்வதே அவனது கடமை என்றாலும், சில நேரங்களில் உணர்ச்சிவயப்படுவதை தவிர்க்க முடிவதில்லை. உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பதற்கு இயந்திரங்களால் மட்டுமே முடியும். ரத்தம், காயம், மரணம், சோகம், மகிழ்ச்சி என்று பலவற்றை பத்திரிக்கை தொழிலில் தினம் தினம் சந்திக் கமுடியும். அவற்றில் சில சம்பவங்கள் நெஞ்சை பிழியச் செய்துவிடும். கடந்த வாரம் கோவையில் குழந்தைகளுக்கு கொடூர வாரமாக அமைந்துவிட்டது. முதல் சம்பவம், பள்ளிக்குழந்தைகளான முஸ்கின், ரித்திக் ஆகியோர் கா
ர் டிரைவர்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்தது. முதலில் தகவல் வந்த போது, குழந்தைகள் வழக்கம் போல எங்காவது ஓடியிருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் கால்டாக்சி டிரைவர்களால் கடத்தப்பட்டதும், பின்னர் 10 வயதே நிரம்பிய பிஞ்சு பெண் குழந்தையை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அக்காள், தம்பி இருவரையும் வாய்க்காலில் வீசி கொலை செய்தனர் என்ற தகவல்கள் கிடைத்த போது மனம் வலித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. குழந்தைகள் பணத்திற்காக முதலில் கடத்தினர், பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்று போலீசார் கூறினாலும் இது ஒரு நாளில் நடந்த ஒரு சம்பவம் என்று விடமுடியவில்லை. இது ஒரு சமூக அவலத்தின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். இந்த பாதகர்களை தூக்கில் போடுவதோடு பிரச்சனை முற்றுப்பெற்றுவிட்டதாக கருதமுடியுமா? குற்றவாளிகள் இருவரும் 24 வயதை தாண்டாதவர்கள். திருமணமானவர்கள். அவர்களில் ஒருவனுக்கு குழந்தையும் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் எப்படி மிருகமாக மாறினார்கள்? அவர்களை மிருகமாக மாறச்செய்தது எது? அரசும், அதிகாரிகளும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
* பெருகி வரும் சுயநலம் தான் இதற்கெல்லாம் மூலக்காரணம் என்பது எனது கருத்து. தாங்கள் வசதியாக வாழ வேண்டும், தனக்கு பணம் வேண்டும் என்பதற்காக பிஞ்சு குழந்தை என்பதையும் பார்க்காமல் கடத்தி, தங்களது கேவலமான ஆசைக்காக குழந்தை என்றும் பாராமல் பலாத்காரம் செய்தது கார் டிரைவர்களது சுயநலம். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வசதி இருந்தும் தனி வாகனம் வைத்து அனுப்பாமல் கால்டாக்சியில் அனுப்பிய பெற்றோர்கள், தங்களுக்கு வருமானம் வந்தால் போதும், தங்கள் பள்ளி வாகனம் செல்லாத இடங்களில் இருந்தும் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளும் பள்ளி நிர்வாகம், மாநகர போலீசின் தலைவலியில் நாம் எதற்கு அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ரூரல் போலீசின் எஸ்கேப்பிசம் எல்லாமே ஒருவகையில் சுயநலம் தான். ( குற்றவாளியின் போட்டோவை அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு முன்பாகவே வெளியிட்டு தண்டனையிலிருந்து அவன் தப்பிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் சுயநலத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும்).
*தேவையற்ற நவீன வசதிகளும் சமூக சீரழிவிற்கு காரணமாக உள்ளது. சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்தால் நவீன செல்போன்களை சிறுவர்களும் வாங்கிவிட முடியும். அதில் 10 ரூபாய் செல்வில் இன்டர்நெட் வசதி பெற்று வக்கிரமான ஆபாச இணைய தளங்களையும் பார்த்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவமாணவியருக்கு கேமரா செல்போன்களை பெற்றோர்கள் எதற்கு வாங்கிக் கொடுக்கிறார்கள்? ஆபாச புத்தகங்களை படித்தால் மிகப்பெரிய குற்றம்.... ஆனால் அந்த ஆபாச புத்தகங்களையே செல்போன் வடிவில் வாங்கிக் கொடுத்து ஆபாச வீடியோக்களை பார்க்கும் வசதியை பெற்றோர்களே ஏற்படுத்திக் கொடுக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. கேமரா செல்போன்கள் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது சமூக சீர்கேட்டை தடுக்க உதவும். பிஞ்சுக்குழந்தைகளை கொலைசெய்த பாதகர்கள் இருவரும் ஆபாச படங்களை பார்த்து அதைப்போலவே நடந்து கொண்ட வக்கிரத்தை நினைத்து பார்த்தலே உள்ளம் பதறுகிறது.
* குற்றவாளிகளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும், உடனடியாக என்கவுண்டரில் தீர்த்துக்கட்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று ஆளாளுக்கு உணர்ச்சி வேகத்தில் பேசினாலும், இதை "மயான வைராக்கியமாகத் தான்' கருதுகிறேன். இன்னும் சில நாட்களில் இந்த சம்பவத்தை மக்கள் மறந்து அன்றாட வாழ்க்கையில் ஆழ்ந்து போய்விடுவார்கள். அப்போது மிருகங்களான இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக "மனித உரிமை' ஆர்வலர்கள் களத்தில் இறங்கிவிடுவார்கள். பின்னர், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்கும், விடுதலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து கற்பழிப்பு, கொலை போன்ற படுபாதகங்களை செய்யும் கொடூரர்கள் சட்டத்தின் பிடியில் தப்பித்துக் கொண்டிருக்கும் போது என்கவுண்டர்கள் நிகழுகின்றன. இதை அரசியலாக்கி சம்மந்தப்பட்ட போலீசாரை சிறையில் அடைக்கும் நிலை நாட்டில் தோன்றிவிட்டது. அதனால் இனி என்கவுண்டர் செய்ய எந்த போலீஸ் அதிகாரியும் துணிய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதன் விளைவை பொதுமக்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
*நம் நாட்டில் தன் உயிரை காப்பாற்றிக் கொல்ல இயலாத சிறுவர்களை கொடூரமாக கொலை செய்தாலும் சரி, சமபலத்தில் உள்ள இருவர் ஒருவரை ஒருவர் தாக்கி கொலைசெய்தாலும் சரி, குண்டு வைத்து சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று கொத்துக்கொலைகளை செய்தாலும் சரி... ஒரே இபிகோ 302 தான். அதிகபட்சம் தூக்கு தண்டனை. அதுவும் உடனே நிறைவேற்றப்படாது. கருணை மனு என்று குற்றவாளிக்கு சாதகமானவை நம் நாட்டில் ஏராளம். சட்டங்கள் கடுமையாகி, குற்றங்கள் மக்கள் மனதிலிருந்து மறைவதற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் மீண்டும் அதே குற்றங்கள் நடக்காது.... இது உங்கள் சிந்தனைக்கு!
இதுதவிர சக மாணவர்களின் காதல் கிண்டலால் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது, பொள்ளாச்சியில் மின்வேலியில் சிக்கி 6 ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் போன்றவையும் என் மனதில் ரணத்தை ஏற்படுத்தியது.

October 14, 2010

பத்திரிக்கையாளர்கள் யார்?

வுட்லுக் பத்திரிக்கையின் 15 வது ஆண்டு விழாவில் அதன் முதுநிலை ஆசிரியர் வினோத் மேத்தா பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசியது அவசியம் அனைத்து பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.... அவரது கருத்து:
"டில்லி முழுவதும் பத்திரிக்கை ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் தான் நாட்டையே நடத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு போட்டி நடக்கும் போது இருக்கையில் அமர்ந்து பார்க்கும் பார்வையாளனாகத்தான் பத்திரிக்கையாளர்கள் இருக்க வேண்டும். நாமே விளையாட்டு வீரர்களாக முடியாது. ஆனால் நம்மில் பலரும் நாம் தான் விளையாட்டு வீரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.'

October 13, 2010

செய்திக்காக பயிற்சியா.... பயிற்சிக்காக செய்தியா?

காவல்துறையினர் உடலை ஸ்லீம்மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. காவல்துறையில் சேரும் வரை உடலை ஸ்லீம்மாக வைத்துக் கொள்பவர்கள் ஆயுதப்படையில் இருக்கும் போது கூட அதை அப்படியே தொடருகிறார்கள்.
ஆனால் ஸ்டேசன் டியூட்டி எனப்படும் காவல்நிலையப்பணிக்கு வந்த பின்னர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதது, உணவு சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் தொந்தியும், தொப்பையுமாகிவிடுகின்றனர். அதனால் தொப்பை என்றாலே போலீஸ் என்று டிரேட் மார்க் ஆகிவிட்டது.
கோவை மாநகரத்தில் உடல் பருமன் உள்ள போலீசாரின் தொப்பையை குறைக்க கமிஷனர் சைலேந்திரபாபு இரண்டு நாள் உடல் பயிற்சி வகுப்பை ஆரம்பித்திருக்கிறார். சனி, ஞாயிறுகளில் 60 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
6 மாதத்திற்குள் நகரில் உள்ள அனைத்து உடல் பருமன் போலீசாருக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார். உடற்பயிற்சி, இயற்கை உணவு, மருத்துவ பரிசோதனை, யோகா என்று போலீசாரின் நலனுக்காக நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பை நிச்சயம் வரவேற்கலாம். ஆனால் போலீசாரின் வேலைப்பளுவை குறைத்து நேரத்திற்கு சாப்பிட, உறங்க ஏற்பாடு செய்ய முடியாதா என்று கேட்ட போது அதற்கு கமிஷனர் சைலேந்திரபாபு, அது முடியாது என்று கூறி சிரித்தார்.
பின்னர் எப்படி இந்த பயிற்சியால் பலன் கிடைக்கும் என்பது தான் மதிப்பு வாய்ந்த கேள்வி.... எல்லாம் சரி... போலீசாரின் நலனில் அக்கறையுள்ள கமிஷனர், உடல் பருமன் உள்ள போலீசாருக்கு மீடியா முன்பு பயிற்சி அளித்து அவர்களின் தொப்பைகளை பிளாஷ் மழையில் நனைய வைத்ததை தவிர்த்திருக்கலாம் என்பது போலீசாரை நெளிய வைத்தது. இவரது விளம்பர ஆசைக்கு நம்மை பயன்படுத்திக் கொள்கிறாரே என்ற முணுமுணுப்பு சற்று அதிகமாகவே கேட்டது.