December 27, 2010

2000 ஆயிரம் ரூபாய்க்கு 2 வருஷம்!

ஒரு சாமானியனின் அனுபவம்
25.12.2010 அன்று கோவையிலிருந்து திருப்பூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது எனது அருகில் அமர்ந்திருந்த வெங்கடாச்சலம் என்ற 70 வயது பெரியவர் சகஜமாக பேசியபடி வந்தார்.
"மதுரையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பிற்காக 6 குழந்தைகளோடு திருப்பூர் வந்தேன். பனியன் கம்பெனியில் கஷ்டப்பட்டு உழைச்சோம். சிக்கனமா வாழ்ந்ததால மிச்சமான காசுல 3 சென்ட் நிலம் வாங்கினேன். அதுல கடன வாங்கி வீடும் கட்டியாச்சு.
வரி விதிக்கனும்னு திருப்பூர் முனிசிபாலிட்டி ஆபிசுக்கு போகச் சொன்னா எனது மகன்கள் நீயே போய் வா என்று சொல்லிட்
டாங்க... நானும் முனிசிபாலிட்டி ஆபிசுக்கு போனேன். விண்ணப்பத்தை சரியா பூர்த்தி செஞ்சும் கொடுத்தாச்சு. அப்போ அங்க வேலையில இருந்த மாடசாமியோ.... மடசாமியோ.... நாளைக்கு வான்னு அனுப்பினார். அடுத்த நாள் போனேன். ஒரு வாரம் கழிச்சு வான்னு சொன்னார். இப்படியே ஒன்றரை வருஷம் நடையா நடந்தேன். ஆனா வேலை ஆகலை. ஒரு நாள் என்னோட சின்ன பையனை அழைச்சுட்டு போனேன். அப்ப அந்த ஆபிசரு, 10,000 ரூபாய் கொடுத்தா வேலை ஆகும்னு சொல்லிட்டதா பையன் சொன்னான். அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன். பையன் பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டான்.
நானோ மறுபடி மறுபடி முனிசிபாலிட்டி ஆபிசுக்கு போய் வந்துட்டிருந்தேன். அப்போ அங்க அந்த செக்சன்ல உயரதிகாரியா இருந்த லேடி ஆபிசருக்கிட்டே போய் முறையிட்டேன். அவங்க, மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டினாத் தான் வரி விதிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு 1000 ரூபாயாகும்.
நானும், பசங்களும் சேர்ந்து அந்த தொட்டியையும்
கட்டினோம். அப்புறமும் வரி விதிச்சபாடில்லை. ஒரு நாள் அங்கே இருந்த ஒருத்தரு பார்த்து, என்ன பெரியவரே இத்தனை நாளா இங்க வந்திட்டிருக்கீங்க... என்ன விசயம்னு கேட்டார். அவர் யாருன்னு தெரியலை. அவர்கிட்ட விவரத்தைச் சொன்னேன். அவரு அந்த மாடசாமிகிட்ட கூட்டிட்டு போய் காரியத்தை முடிச்சு கொடுங்கன்னு சொன்னார். அவரோ பணம் கொடுத்தாதான் ஆகும்னு சைகை காமிச்சார். எங்கூட வந்தவரு உங்களாலே எவ்வளவு பணம் தர முடியும்னு கேட்டார். 1000 தரம் முடியும்னுனேன். அதுக்கு மாடசாமி ஒத்துக்கல. பின்னால 2000 ம்னு முடிவாச்சு. அவருக்கு 2000, வரி 2500 னு 4500 ரூபா கொண்டாங்கனு அனுப்பி வச்சாங்க.... அடுத்த நாளே வீட்டுக்கு வந்து பணத்தை பொரட்டி கொண்டு போய் கொடுத்தேன். அப்புறமா வரி விதிச்சாங்க... இந்த 2000 ரூபாயை வாங்க என்னை 2 வருஷம் நடக்கவிட்டாங்க தம்பி.....ஆனா ஒன்னு கொஞ்ச நாள்ளே முனிசிபால்டியிலே வரி விதிக்க பணம் வாங்கனதா ஒருத்தர போலீஸ் புடிச்சுட்டு போச்சுனு பேப்பர்ல போட்டிருந்தான்....' என்று முடித்தார்.
"உங்க கிட்ட பணம் வாங்கின மாடசாமியையா?' என்று நான் கேட்க..."இல்ல தம்பி இது வேற யாரோ?' என்றார் அவர். எனக்கு "பொசுக்' என்றாகிவிட்டது. நம் நாட்டில் பெரும்பலான சாமானியர்கள் அனுதினமும் லஞ்சப் பேர்வழிகளால் இப்படி அல்லப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வெளியே சொல்பவர்கள் வெகு சிலர் தான். என்று தணியும் இந்த (லஞ்சப்பேய்களிடமிருந்து) சுதந்தர தாகம்?

1 comment:

Anonymous said...

Dear Sir,

Thank you

It is so nice to have talked to you over phone just now. Your blog is grately classic. I do appreciate you for your longing to create awareness among public on points of public interest .. Your meaningful efforts will certainly bring fruits.

With regards

P. Willington Jebaraj
Udumalpet