January 18, 2011

டிரங்க் அன்ட் டிரைவ்

(சிரிக்க மட்டும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்)
கோவையில் உள்ள சீனியர் பத்திரிக்கையாளர் அவர். நண்பர்கள் பலர் அவரது பணத்தில் "டாஸ்மாக்' வரி கட்டுவது வழக்கம். ஆனால் அன்றோ அவர் பாக்கெட் வறுமையில் வாடியது. பாக்கெட் வறுமை என்றால், முகத்திலும் வாட்டம் இருக்கத் தானே செய்யும்.
வாட்டத்தைக் கண்டார் சக நிருபர் ஒருவர். காரணத்தை விசாரித்துவிட்டு, "என்ன அண்ணா இதுக்குப் போய் வருத்தப்படறீங்க.... எடுங்க வண்டியை...' என்று உரிமையுடன் பில்லியனில் தொத்திக் கொண்டார்.
பின்னவர் வழி காட்ட முன்னவர் வண்டி ஓட்டினார். சிறிது தூரம் சென்றதும், "நிறுத்து.. நிறுத்து...' என்று பின்னவர் கத்த... முன்னவர் திடீரென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். எதிரே பார்த்தால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். "போலீசை பார்த்ததும் இவன் ஏன் பயக்கறான்....!' வியப்புடன் சீனியர் இருக்கையில், மளமளவென வண்டியிலிருந்து இறங்கி இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தார் பின்னவர். ஏதோ பேச்சு வார்த்தை நடந்தது. இன்ஸ்பெக்டர் சில நூறு ரூபாய் தாள்களை பின்னவரிடம் திணித்தார். திரும்பி வந்த பின்னவர், "விடு "வரி' கட்ட....!' வண்டி கிளம்பியது.
"அந்த ஆளுகிட்ட கடன் வாங்கினாயா...?' என்று சீனியர் கேட்டு வைத்தார். "இல்லண்ணா... நான் எப்போதும் இப்படித் தான் அவரிடம் உரிமையா வாங்கறது உண்டு....' என்று கூறி சீனியரையே அதிர வைத்தார் பின்னவர். "வரி' செலுத்தும் வைபவம் முடிந்த பின்னர், பின்னவர் விடைபெற்றுக் கொள்ள சீனியர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
திடீரென வழியில் ஒரு போலீஸ் கரம் பைக்கை வழிமறித்தது. "குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறீர்களா.... பைன் கட்டுங்க....' போலீசின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்த சீனியர், "என்ன சார்... "வரி' கட்ட நீங்க தான் பணம் கொடுத்தீங்க... இப்ப நீங்களே பிடிக்கறீங்களே....' சற்று திகைந்த இன்ஸ்பெக்டர்... "ஓ... நீங்க நம்ம "பின்னவர்' பிரண்டா.... சரி சரி பார்த்து போங்க...!' என்று கூறி அனுப்பி வைத்தார்.
சம்பவத்தை சக பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டு சிரித்தார் சீனியர் நிருபர்..."கல்லுல நாரு உரிக்கறவங்கய்யா நம்ம ஆளுங்க...' சக நிருபர் ஒருவரின் கமெண்ட் இது.

No comments: