Showing posts with label நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label நிகழ்ச்சி. Show all posts

March 12, 2011

இது சரிதானா?

கோவை சட்டக்கல்லூரியில் கடந்த சில தினங்களாக 60 மாணவர்கள் பேராசிரியை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காரணம்... விடுதியில் தங்கியிருக்கும் மாணவி ஒருவர் முன்னறிவிப்பின்றி வெளியே சென்று விட்டு நள்ளிரவு திரும்பியதாகவும், அவரை அந்த பேராசிரியை கண்டித்ததாகவும் கூறுகின்றனர். எது நடந்ததோ! ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதலில் பேராசிரியையின் அறையில்
அரசியல் தலைவர்களின் படங்களை மாட்டினர். அதற்கு பின்னர் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் கொடும்பாவிகளை எரித்தனர். அதன்பின் அரசியல் சட்டப்புத்தகத்தை எரித்தனர்(சட்டமாணவர்கள்), கடைசியாக நேற்று 11.3.2011 அன்று உச்சகட்டமாக இந்திய தேசியக்கொடியை எரித்தனர். அடுத்த கட்டமாக பாகிஸ்தான் கொடியை சட்டக்கல்லூரியில் ஏற்றப்போவதாக அறிவித்துள்ளனர். ஒரு பேராசிரியையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தேசியக் கொடியை எரிப்பதற்கும் என்ன சம்மந்தம்? பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம் என்று கூறுவது எதற்காக? இவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் தானா அல்லது மாணவர்கள் என்ற போர்வையில் உள்ளநபர்களா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. மாணவர்களின் அத்தனை போராட்டங்களும்(!) போலீசாரின் கண்முன்னே நடந்தவை. அவற்றை தடுக்க சிறு துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப்போடவில்லை. இதைவிடக்கொடுமை அந்த கல்லூரியின் முதல்வர் இது குறித்து புகார் ஏதும் கொடுக்கவோ, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....
பின்குறிப்பு: இந்த சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருவதால் அந்த கல்லூரியை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

August 21, 2010

வீடியோ சுப்பிரமணியம் செய்தது சரியா, தவறா?

ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ எடுத்து லஞ்சம் வாங்கியதற்கான ரசீதைக் கேட்ட வீடியோ சுப்பிரமணியத்தை போலீஸ் படை ஒன்று வந்து அள்ளிச் சென்றது. பிறகென்ன.. வீடியோ சுப்பிரமணியம் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸ்
லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் துணைமேயர் மற்றும் சில பொது நல அமைப்புகளின் தலையீட்டால் வீடியோ சுப்பிரமணியம் என்கவுண்டரிலிருந்து தப்பினார் என்கிறார்கள் திருப்பூர்வாசிகள். வீடியோ சுப்பிரமணியத்தை கைது செய்ததும், மேற்கு மண்டல ஐஜி, திருப்பூர் எஸ்.பி. முதற்கொண்டு வீடியோ சுப்பிரமணியம் வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்பவர் அதனால் கைது செய்துள்ளோம் என்று பேட்டியளித்தனர். சில பத்திரிக்கைகளில் அதுவும் பெரிதாக வெளியிடப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக வீடியோ எடுத்து அவர்களிடம் ரசீது கேட்கும் வீடியோ சுப்பிரமணி, வணிகவரி அதிகாரிகள் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை பலரை பிடித்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளுக்கும் முறைப்படி புகாரும் அனுப்பி வைத்திருக்கிறார்.
வணிக வரி அதிகாரிகள் மீது வேறு வழியின்றி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் லஞ்சம் வாங்கி பிடிபட்ட போலீசார் மீது இதுவரை உயரதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக வணிகவரித்துறை அதிகாரிகளிடம் புகாரைப் பெற்று வீடியோ சுப்பிரமணியத்தை ஏற்கனவே ஒரு முறை கைது செய்து தாக்கியதோடு, சிறையிலும் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் வீடியோ சுப்பிரமணியம் தன் நடவடிக்கையை விடவில்லை.
இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரில் யார் தவறு செய்தாலும் அதை கேள்வி கேட்டு தண்டனை கொடுக்கும் அதிகாரம் உள்ள போலீஸ்துறைக்கு, தனது துறையைச் சேர்ந்தவர்கள் தவறை, யாராவது தட்டிக்கேட்டால் பொறுக்கமுடிவதில்லை என்பதற்கு வீடியோ சுப்பிரமணியத்தின் மீதான போலீஸ் நடவடிக்கையே சாட்சி என்பதே என் கருத்து. வீடியோ சுப்பிரமணியம் பிளாக் மெயில் செய்தாரா இல்லையா என்ற விவகாரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் நேர்மையான எந்த அரசு ஊழியரும், அதிகாரிகளும் அவரைப்பார்த்து பயந்ததில்லை என்பதே திருப்பூர் அறிந்த உண்மை.
திருப்பூரில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் புறையோடிக்கிடக்கிறது. திருப்பூரில் பணியாற்றும் வாய்ப்பிற்காக பலர் பல லகரங்களை செலவு செய்ய முண்டியடிக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கே பல முக்கியத்துறைகளிலிருந்து பட்டுவாடா நடக்கிறது என்பதும் ஊரறிந்த உண்மை. இந்த நிலையில் தங்களது முதலீட்டை பல மடங்காக திரும்ப பெற வேண்டும் என்ற வெறியில் வரும் அதிகாரிகளுக்கு வீடியோ சுப்பிரமணியம் முட்டுக்கட்டை போடுகிறார் என்பதும் திருப்பூர்வாசிகளுக்குத் தெரியும்.
வீடியோ சுப்பிரமணியத்தின் மீது பத்திரிக்கைதுறையில் இருக்கும் பல நண்பர்களுக்கும் கோபம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வீடியோசுப்பிரமணியம் ஒரு குறிப்பிட்ட சில பத்திரிக்கைகளுக்கு மட்டும் செய்தியை அளிக்கும் மனம் படைத்தவராக இருந்தார். தான் எடுக்கும் வீடியோ, அரசியல் ஆதாயங்களுக்காகவோ, அல்லது பணம் சம்பாதிக்கவோ பயன்படுத்தப்பட்டுவிடாக்கூடாது என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்திருக்கலாம்.
நான் கூட இரண்டொரு முறை தான் அவரை சந்தித்திருக்கிறேன். பல செய்திகளை எழுதியிருக்கிறேன். எனது அனுபவத்தில் வைத்து, வீடியோ சுப்பிரமணியத்தின் நடவடிக்கையால் பல ஊழல் அதிகாரிகள் கிலி பிடித்து திரிந்துவருகின்றனர் என்பதும், இதுவரை வீடியோ சுப்பிரமணியம் பிளாக் மெயில் செய்தார் என்று ஒரு புகார் கூட வரவில்லை என்பதும் உண்மை. பிளாக்மெயில் புகார் வந்திருந்தால் போலீசார் அதன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யாமல் இருந்திருப்பார்களா?
வீடியோ சுப்பிரமணியம் கைது குறித்து பேட்டியளித்த உயரதிகாரிகள், பிளாக் மெயில் புகார் ஒன்றை கூட ஆதாரமாக காட்டவில்லை... எது எப்படியோ லஞ்சம், ஊழலால் அனுதினமும் மக்கள் அல்லல்படுகின்றனர்.
சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தட்டிக்கேட்க, தடுக்க தனி மனிதனுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் முழு சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆனால் அதைப்பயன்படுத்தி ஊழலை தடுக்க தனிமனிதன் முயன்றால், அவனை குற்றவாளியாக்கி, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் கோரம் தான் நடக்கிறது. ஆனாலும் லஞ்சத்திற்கு எதிராக போராடவேண்டும் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் ஏற்பட்டிருப்பதை யூடியுப்பில் பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வீடியோவை வெளியிட்ட இரு வாரங்களுக்குள் அதை 5000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருப்பதிலிருந்தும், வீடியோ சுப்பிரமணியத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருப்பதிலிருந்தும் அறிய முடிகிறது.

February 19, 2010

பி.டி. மினிஸ்டர் ஜெய்ராம்ரமேஷ்

19.02.10


மரபணு மாற்றப்பட்ட கத்தரி ரகத்தை பயிரிட அனுமதிப்பது குறித்த பொறுப்பு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து மனிதர் தினசரி பத்திரிக்கைகளில் அடிபடும் பரபரப்பான மினிஷ்டர் ஆகிவிட்டார். பி.டி கத்தரிக்கு அவர் தற்காலிக தடைவிதித்தப் பின்னரும் எங்கு சென்றாலும் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பி.டி.கத்தரி குறித்து கேட்கத்தவறுவதில்லை. மனிதரும் அசராமல் ஒவ்வொரு இடத்திலேயேயும் தான் கூறியதையே திரும்ப திரும்ப கூறிவருகிறார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொள்வதில் தான் வித்யாசம் உள்ளது. "பி.டி.கத்தரியை அனுமதிப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது எந்த முதல்வரும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. விஞ்ஞானிகளும் சந்தேகங்களை கிளப்புகின்றனர். பொதுமக்களும் எதிர்கின்றனர். அதனால் பி.டி.கத்தரி குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. இந்த கத்தரியால் உடல் நலத்திற்கு ஆபத்து இல்லை என்ற உறுதியும், விதைகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உறுதியும் கிடைக்க வேண்டும். அதுவரை பி.டி.கத்தரி பயிரிட அனுமதிக்க முடியாது. அதேசமயம் மற்றப்பயிர்களில் பி.டி. ஆராய்ச்சிக்கு தடை விதிக்க முடியாது...' என்பதை தான் அவர் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் ஒரு நாள் பி.டி.கத்தரிக்கு தடையில்லை என்றும், தடை என்றும் மாறி மாறி செய்திகள் வந்து கொண்டுள்ளன. கோவை வனக்கல்லூரியில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜெய்ராம் ரமேஷ், டென்சன் ஏதுமில்லாமல் மிக ஜாலியாகவே இருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியா, தெலுங்கு போன்ற மொழிகளில் பேசினால் தனக்கு புரியும் என்று கூறி மற்றவர்களை தமிழ், மலையாளத்திலேயே பேச கூறியவர், அவர் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். பேசும் போதும் ஜோக்குகளை அள்ளிவீசத் தயங்கவில்லை. ஆஸ்திரேலியாவில் படிக்கச்செல்லும் இந்திய மாணவர்கள் அங்கு அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் ஆஸ்திரேலியாவிலிருந்து பெற்றோர்களை கொண்டு வந்து(சவுக்கு, தைல மர ஜீன்களை) இந்திய குழந்தைகளை உருவாக்கியுள்ளோம்(ரசிக்க முடியாத ஜோக் தான்) என்று கூறி பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். அதற்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் உற்சாகமாகவே கலந்து கொண்டார். "பி.டி.கத்தரிக்கு தடைவிதித்ததால் பத்திரிக்கை ஒன்று( ஆங்கில பத்திரிக்கை) விமர்சித்து எழுதுகிறது. அந்த பத்திரிக்கை நிருபர்கள் யாவாது வந்திருக்கிறீர்களா..?' என்று கேட்டுவிட்டு ஜாலி மூடில் பிரஸ் மீட்டை ஆரம்பித்தார். பி.டி. பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதும் சற்று முகத்தில் கோபத்தை காட்டியவர் பின்னர் நிதானித்து பதில் அளித்தார். பார்ப்பதற்கு சற்று ஜோக்கர் மாதிரி தோன்றினாலும் நிலமையை திறமையாக சமாளிக்கிறார் என்கிறார்கள் சக பத்திரிக்கையாளர்கள்.

February 16, 2010

ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்!

16.02.10

ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்!

தமிழக காவல்துறையில் நேர்மையாக இருப்பதோடு, ஊழலுக்கு எதிராக ஒரு "யுத்தமே'நடத்தி வருபவர். கோவையில் அவர் மூன்று மாதங்கள் ரூரல் எஸ்பியாக பணி புரிந்த போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நான் பல போலீஸ் அதிகாரிகளிடம் பழகியிருக்கிறேன். ஆனால் அவர்களின் பேச்சிற்கும் செயலிற்கும் பெரும் வித்யாசம் இருப்பது சிறிது காலத்திலேயே தெரிந்துவிடும். ஆனால் பொன்மாணிக்கவேல் இவர்களில் மிகவும் வித்யாசமானவர். இவர் பணியில் உள்ள ஒவ்வொரு விநாடியும் பொதுமக்களுக்கு நன்மை விளைந்து கொண்டே இருக்கும். போலீஸ் அதிகாரியால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்பதை கண்முன்னால் காண்பித்தவர். போலீஸ் துறையில் லஞ்சம் வாங்காமல் இருப்பது சாத்தியம். ஆனால் லஞ்சத்திற்கு எதிராக போராடுவது என்பது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது போல. பொன்மாணிக்கவேல் நேர்மையாக இருப்பதற்கு கொடுத்து வரும் விலை சற்று அதிகம் தான். எந்த ஒரு பதவியிலும் நிரந்தரமாக 3 மாதங்களுக்களுக்கு மேல் இருக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விடுவதில்லை. அதனால் இவரது மனைவி, குழந்தையை விட்டு தொலைதூரத்தில் வசிக்க வேண்டியிருக்கிறது. ரவுடிகளை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் சக அதிகாரி ஒருவரின் விளையாட்டால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதைவிட இவரது பதவி உயர்வு கூட தேவையில்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பொதுவாக எஸ்பிக்கு பிறகு டிஐஜி பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் இவருக்கு எஸ்எஸ்பி என்ற ஸ்பெஷல் எஸ்பி பதவியுயர்வு வழங்கப்பட்டது. பின்னர் ஒரு வழியாக 15.02.10 அன்று டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பழனி பட்டாலியனிலிருந்து சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் எந்த பதவியில் இருந்தாலும் அங்கு ஊழலை முற்றிலும் ஒழித்துவிடுவார். நேரடியாக மக்களைச் சந்திக்கும் சட்டம்ஒழுங்கு பதவிகளில் இல்லாதது இவருக்கு இழப்பல்ல... மக்களுக்குத் தான் இழப்பு!

January 25, 2010

லட்சியத்திற்காக வாழ்பவர்கள்

கோவையில் எழுத்தாளர் ஜெயமோகன் வாசகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில்(23.01.2010) கலந்து கொண்டேன். "தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக நீங்கள் கருதுவது எது?' என்று வாசகர் ஒருவர் கேட்க, எழுத்தாளர் ஜெயமோகன், "தற்போது லட்சியத்திற்காக வாழுபவர்கள் குறைவாக உள்ளனர். லட்சியத்திற்காக ஆயிரம் ரூபாய் நன்கொடை தருவார்கள். ஆனால் அதே லட்சியத்திற்காக நூறு ரூபாய் இழக்க தயாராக இருக்கமாட்டார்கள்...இந்த நிலை தான் மிகப்பெரிய பிரச்சனையாக நினைக்கிறேன்.' என்றார்... எவ்வளவு வித்யாசமான ஆழமான பதில்.