February 19, 2011

கொலைகளும் காரணங்களும்....

இப்போதெல்லாம் முணுக்கென்றால் மூன்று கொலை விழுவது சாதாரணமாகிவிட்டது. அதற்கு உதாரணம் சமீபத்தில் கருமத்தம்பட்டி அருகே நடந்த இரட்டை கொலை. விசைத்தறி தொழிலதிபர் தம்பதியனருக்கு சொத்து விற்றதில் 40 லட்ச ரூபாய் கிடைத்திருக்கிறது என்ற தகவலறிந்த அவர்களது விசைத்தறி கூடத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் இந்த கொடூர கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறி போலீசார் அவர்களை கைது செய்திருக்கின்றது. 3 வயதில் ஒரு குழந்தை, 7 மாதத்தில் ஒரு குழந்தை என்று இரு குழந்தைகளையும் அனாதைகளாக்கிவிட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கோபத்தில் கொதிக்க வைத்ததோடு, கொலையான தம்பதியினர் துன்புறுத்தப்பட்ட விதமும் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. பணம் எங்கே என்று கேட்டு இருவரது பிறப்புருப்பிலும் ஆயுதத்தால் கொதறிய கொலைகாரர்கள் இன்னும் பல விவரிக்க முடியாத கொடூரங்களை செய்திருக்கிறார்கள். 20, 22 வயதுடைய இருவரால் இப்படி இருவரை கொடூரமாக கொலை செய்திருக்க முடியுமா என்று சந்தேகங்கள் எழாமல் இல்லை. இந்த வழக்கில் மேலும் ஒரு சிலர் போலீசில் பின்னர் சிக்கக்கூடும்.... பணம் வேண்டும் என்றால் பணத்தை கொள்ளையடித்து செல்ல வேண்டியது தானே? ஏன் கொலை செய்கிறார்கள்? இவர்களுக்கு எப்படி இந்த தைரியம் வந்தது? என்று பல கேள்விகள் எழுகின்றன. எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும், எவ்வளவு கொடூர குற்றம் செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்பது இப்போது நிச்சயமில்லை. சட்டத்தின் ஓட்டை உடைசல்களை பயன்படுத்தி குற்றவாளிகள் பலரும் வெளியே வந்துவிடுகின்றனர். மீறி தண்டனை பெறுபவர்களுக்கும் அதிக பட்சம் ஆயுள் தண்டனை தான்... மிருகங்களுக்கு மனித உரிமை பேசும் கூட்டம் அதிகம் என்பதால் தூக்கு தண்டனை எல்லாம் கிடையவே கிடையாது. 22 வயதில் கொலை செய்து கொள்ளையடிக்கும் ஒருவன் ஆயுள் தண்டனை பெற்றாலும் 34 வயதில் விடுதலையாகிவிடுவான்.... இந்த தைரியம் தான் பச்சிளம் குழந்தைகளைக் கூட கொடூரமாக கொலை செய்யத்தூண்டுகிறது.
அதிகாரிகளின் அலட்சியம் கூட கொலைகளுக்கு காரணமாகிவிடும் என்பது சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த நிருபர் ஒருவர் பகிர்ந்து கொண்ட சம்பவத்திலிருந்து தெரியவந்தது. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு சைக்கோ கொலைகாரன் கைவரிசை... 9 பேர் பலி என்று அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்து மக்களை அலறச்செய்தன. முதல் கொலையிலேயே சிக்கியிருக்க வேண்டியகொலையாளி தொடர்ந்து கொலைகளைச் செய்ய காரணம் என்ன... நிருபர் விவரித்தார், "முதலில் கொலையான நபர் தலையின் பின்பக்கம் வாட்டர் டேங்க் இரும்பு மூடி வெட்டி இறந்து கிடந்தார். உடலைப்பார்த்தவுடனேயே அது கொலை என்பது சம்பவ இடத்திற்கு சென்ற எங்களுக்கே தெரிந்துவிட்டது. ஆனால் அப்பகுதி உதவிக்கமிஷனரோ, கொலை வழக்கு என்று பதிவு செய்தால், கொலையாளியை பிடிக்க அலைய வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, அதை தற்கொலை என்று சாதித்தார். அதற்கு பின்னர் அதே போன்ற கொலைகள் தொடர்ந்தன. அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த அதிகாரி மாற்றப்பட்டு வேறு அதிகாரி வந்தார். அவர் நடத்திய வாகன சோதனையில் கொலை கும்பல் பிடிபட்டது. அதுவரை போலீஸ் கணக்கில் 6 கொலைகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அந்த கும்பலோ சர்வசாதாரணமாக 9 கொலைகள் செய்ததாக வாக்குமூலம் அளித்தது. "முதல் கொலை செய்த போதே மாட்டிவிடுவோம் என்று நினைத்தோம். ஆனால் அது தற்கொலை என்று பேப்பரில் செய்தி வந்தது. இதனால் கத்தி போன்ற கொலைக்கான ஆயுதங்களை தவிர்த்து வேறு பொருட்களால் கொலை செய்தால் போலீசால் பிடிக்க முடியாது என்று தைரியம் வந்தது. அதனால் கொலைகளை செய்தோம்...' என்றது அந்த கும்பல். பணத்திற்காக கொலை செய்த அந்த கும்பல், கொலையுண்ட பலரிடமிருந்து பறித்த தொகை எவ்வளவு தெரியுமா வெறும் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தான்....' என்று முடித்தார். குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது.

No comments: