June 28, 2011

யாருக்கும் வெட்கமில்லை!

15.08.1947
இந்தியர்கள் பெருமையுடன் நினைத்து பார்க்கும் நாள்! வானுயர்ந்த கட்டிடங்கள், புழுதியை கிளப்பியபடி பறக்கும் கார்கள்.... விண்ணை முட்டி நிற்கும் நட்சத்திர ஓட்டல்கள்...சகலத்திற்கும் பயன்படும் காந்தி படம் போட்ட கரன்சிகள்!
சுதந்திரம் யாருக்கு சொந்தம்.... நாட்டு மக்கள் அ
னைவருக்கும் சொந்தமில்லையா.....?
ஆங்கிலேயன் அடித்த கொள்ளைக்கு கூட அர்த்தம் உண்டு... அவன் அந்நியன். ஆனால் நம்மவர்கள் நம்மையே அடிக்கும் கொள்ளையும்....அதனால் அப்பாவிகள் அனுபவிக்கும் கொடுமைகளும்.... என்ன செய்தால் தகும் என்று பீறிட வைக்கிறது.
கோவை அருகேயுள்ள நல்லாம்பாளையம் என்ற இடத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 10 க்கு 8 என்ற அளவிலான ஒரே அறை கொண்ட சிறியஓட்டு வீடு அது.(64) ஆண்டு சுதந்திர இந்திய சாதனை) சிமெண்ட் பூசப்படாத அந்த வீட்டை அந்த கூலித்தொழிலாளி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டி குடியிருந்து வருகிறார். மனைவி, 4 வயது, 21/2 வயது, 8 மாத கைக்குழந்தை, இவர்களைத் தவிர மாமனார், மாமியார் என்று 7 பேர் அந்த சின்னஞ்சிறு அறையில் குடித்தனம் நடத்தி வருகின்றனர். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும், வரி செலுத்த வேண்டும் என்றால் பட்டா பெற வேண்டும்... பட்டா பெற அதிகாரிகளிடம் பல முறை விண்ணப்பித்திருந்தார் அந்த கூலித் தொழிலாளி! ஆனால் மல்டி மில்லியனர்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கும், குறைந்த கட்டணத்தில் பட்டாவும் அளிக்கும் அதிகாரிகள் கூலித்தொழிலாளியின் ஒரு பக்க விண்ணப்பத்தை குப்பை கூடையில் போட்டார்கள். விளைவு? மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் காலத்தை ஓட்டியது அந்த ஏழை குடும்பம். இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வந்த அசதியில் கூலித்தொழிலாளி, அவரது மனைவி உள்ளிட்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, பெற்றோரை அணைத்தபடி குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தோ பரிதாபம்... மண்ணெண்ணை விளக்கின் சூட்டில் பக்கத்தில் இருந்த மண்ணெண்ணை கேன் உருகி பெரும் தீவிபத்து ஏற்பட்டது. குபீரென பற்றிய தீயில் பிஞ்சுகள் உட்பட அனைவரும் கருகினர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து காப்பாற்ற முயல 2 1/2 வயது பெண் குழந்தை அங்கேயே உடல் கருகி இறந்து போனது. 8 மாத குழந்தை உடல்முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது. 4 வயது ஆண் குழந்தையின் நிலைமையும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. கூலித்தொழிலாளி, அவரது மனைவி, மனைவியின் பெற்றோர் ஆகியோரும் தீக்காயங்களுடன் போராடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் என் நெஞ்சை உடைக்கும் கேள்விகள் இது தான்....
பல ஆயிரம் சதுர அடிகளில் வீடுகளை கட்டி பெற்ற பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, பெற்றோரையும் தனியே அனுப்பிவிட்டு, கணவனும், மனைவியும் மட்டும் வாழும் ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் தான் தற்போது அதிகம். 1947 அளித்த சுதந்திர பரிசை பயன்படுத்தி நேர்மையாக சிலரும், சொந்த சகோதரர்களான நாட்டு மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்த பலரும் இதில் அடக்கம். ஆனால் அதே சுதந்திர உரிமையுள்ள கூலித்தொழிலாளி சின்னஞ்சிறு அறையில் 7 பேருடன்வாழ்ந்து வருவதையும், அவர்களுக்கு ஒரு பட்டா கொடுக்க கூட நமக்கு யோக்கியதை இல்லை என்பதை பார்த்து யார் வெட்கப்படுகிறோம்.....?
என் குழந்தைக்கு சிறிய வயிற்று வலி என்றால் கூட துடித்து போகிறேன்... இதோ அந்த பிஞ்சுகள் தீக்காயங்களால் கருகிக் கொண்டிருக்கிறதே... அதன் வலி...இந்த நிலைக்கு யார் காரணம்? சில ஆயிரங்கள் கிடைத்திருந்தால் "இளித்தபடி' பட்டா அளித்திருக்கும் அந்த அதிகாரி வர்கமா... இந்த அட்டூழியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் "அமைதியாக' இருக்கும் பொறுப்பான குடிமக்களான நாமா?
காயங்களால் அவதிப்படும் அந்த குழந்தைகளை பார்க்க வெட்கமின்றி போட்டோகிராபர்களுடன் செல்லும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்... அங்கு சென்று கூட சார் கொஞ்சம் முன்னால் வந்து நில்லுங்கள் என்று கடமையாற்றும் என் துறை சார்ந்த நண்பர்கள்...இழப்புகளையும், வலிகளையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த கூலித்தொழிலாளியின் நிலையை செய்தியாக மட்டும் பார்க்கும் "நான்' உட்பட யாருக்கும் வெட்கமில்லை....!
நாம் மனிதர்களாம்!

2 comments:

வாணியர் இளைஞர் நலச் சங்கம் said...

உண்மை! உண்மை! உண்மை! நானும் சிறிய நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.நான் நாற்பது ஆண்டுகளாக தொழில் நடத்திவரும் 600 சதுர அடி இடத்தில் சென்ற ஆண்டு மழை காரணமாக மேற்கூரை பழுதானதால் ஓட்டினால் ஆன கூரையை அகற்றிவிட்டு தளம் அமைத்து எம் எஸ் சி படித்த என் மகனுக்கு ஒரு அலுவலகமும் நாங்கள் வசித்திட ஒருதளமும் என் மீதுள்ள நம்பிக்கையால் பலரிடமும் கடன் பெற்று வீட்டை கட்டி முடித்துவிட்டேன்.வீடும் குடிவந்தாயிற்று.மாநகராட்சியின் அனைத்து வரிகளும் முறையாக கட்டிவிட்டேன் .ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி Lock and SEAL நோட்டீஸ் அனுப்பி நிம்மதியில்லாமல் செய்கிறார்கள்.வீட்டை கட்ட ஆரம்பிக்கும் பொழுதே சொல்லியிருந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருப்பேன்.இப்பொழுது வேறு வழியில்லாமல் கோர்ட்வரை சென்றிருக்கிறேன்.

உலக சினிமா ரசிகன் said...

கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
இணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
இவண்
உலகசினிமா ரசிகன்,
கோவை