சக பத்திரிக்கை புகைப்படக்காரர் அனுப்பி வைத்த படங்கள் இவை.... கோவை மாநகர போலீஸ் கமிஷனராக ஐஜி சைலேந்திரபாபு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார். அவர் விடைபெற்றதும்
அவரது நினைவாக இந்த படங்களை நண்பர் அனுப்பியது, கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொள்ளத்தோன்றியது. கமிஷனர் சைலேந்திரபாபு தொடர்பான சில சம்பவங்களை கீழே தந்திருக்கிறேன். அவரது செயல்பாடுகள் குறித்து நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்....
* கால்டாக்சி டிரைவர்கள் இரண்டு பேர் சேர்ந்து பள்ளி மாணவர்களான அக்கா, தம்பியை கடத்தி சென்றனர். அதிரடி ஆபிசர் என்று பெயர் எடுத்த சைலேந்திரபாபு குழந்தைகளை பிணமாகத் தான் மீட்க முடிந்தது. இது தமிழகம் முழுவதும் போலீசார் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அதில் ஒருவனை ஒரு மாதம் கழித்து என்கவுண்டரில் "போட்டுத்' தள்ளினர். இது சரிந்த இமேஜை கொஞ்சம் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்தது.
* கல்லூரி மாணவி ஒருவரை கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஒருவன் ஜாமீனில் வருவதும் மீண்டும் பெண்களை கடத்தி கற்பழிப்பதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது. அவனை என்கவுண்டர் செய்யும் முயற்சி கடைசி வரை நிறைவேறவில்லை. மீண்டும் ஜாமீனில் வெளியே சென்ற அவன், ஏதாவது ஒரு பெண்ணை கற்பழிப்பான் என்று போலீசார் எதிர்பார்த்து(!) கொண்டிருந்த வேளையில், அவனது மனைவியை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் கைதாகி போலீசாருக்கு நிம்மதியை கொடுத்தான்.
* கமிஷனர் சைலேந்திரபாபுவுடன் லத்தி, துப்பாக்கியுடன் போலீசார் இருக்கிறார்களோ இல்லையோ, வீடியோ காமிரா, ஸ்டில் காமிராவுடன் இரண்டு போலீசார் உடனிருப்பார்கள். அவர்கள் கமிஷனரின் நடவடிக்கைகளை படம் பிடித்து தள்ளுவார்கள். ஒரு முறை கமிஷனர் பார்பர் ஷாப்பில் முடிவெட்டிக் கொண்டதைக் கூட படம் பிடித்துவிடும் அளவுக்கு கடமை உணர்ச்சி மிகுந்தவர்கள்.
* கல்லூரி மாணவி ஒருவரும், எதிரே பைக்கில் வந்த இரு இளைஞர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் மூன்று பேரும் காயங்களுடன் ரோட்டில் சரிய... அந்த வழியாக வந்த கமிஷனர் உடனடியாக களத்தில் இறங்கினார். படுகாயத்துடன் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த படம் போலீசாரிடமிருந்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அடிபட்டு கிடந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கேள்வி!
* குண்டாக இருக்கும் போலீசாரை ஒல்லியாக்க இருநாள் பயிற்சியை கமிஷனர் ஏற்பாடு செய்தார். வழக்கம் போல பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பயிற்சி துவக்கப்பட்டது. மிகவும் குண்டான போலீஸ்காரர் ஒருவரை குறிவைத்து போட்டோகிராபர்கள் படம் எடுத்து தள்ள.... அடுத்த ஒருவாரத்திற்கு அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இந்த கவலையிலேயே அவர் 5 கிலோ எடை குறைந்தாராம்.
*தினமும் இரு நிகழ்ச்சிகள், உள்ளூர் பத்திரிக்கைகளில் கட்டாயம் படம் வெளியாகவேண்டும். லோக்கல் சேனல்களில் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்க வேண்டும்....மொத்தத்தில் கமிஷனர் ஒரு விளம்பரபிரியர் என்றே பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேச்சு இருந்தது. ஆனாலும் அவரைப்பற்றி விமர்சனங்கள் ஏதும் பெரிய அளவில் வரவில்லையே... ஏன் என்ற கேள்வி எழும்......
அதற்கு காரணம்....
எந்த பிரச்சனை என்றாலும் களத்தில் ஐஜி சைலேந்திரபாபு நேரடியாக நின்றதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. உதாரணமாக கோட்டை ஈஸ்வரன் கோயில் தேரோட்டத்தின் போது ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் களத்தில் நேரடியாக இறங்கியதால் மதக்கலவரம் உருவாவது தடுக்கப்பட்டது. பிரச்சனையை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியல், அதிகார வேறுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுத்தார். தேர்தலுக்கு முன்பு அப்போதைய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிட்ட சேலஞ்சர் துரையின் வீட்டை தாக்குவதற்காக ஒரு கும்பல் நள்ளிரவில் முற்றுகையிட்ட போது களத்தில் இறங்கிய கமிஷனர் அவர்களை விரட்டியடித்தார். இதனால் அரசியல் ரீதியான பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தவிர மாணவர்களின் கல்வி, மேல்படிப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற உதவுவது போன்ற பலவற்றை செய்து பொதுமக்களிடம் நல்ல பெயர் பெற்றிருந்ததால் அவரது விளம்பர மோகத்தை பத்திரிக்கையாளர்கள் கண்டு கொள்ளவில்லை.
1 comment:
மிக அருமையான பதிவு சார் ,
எந்த வித பந்தாவும் இல்லாத துடிப்பான உண்மையான வீரமான அதிகாரி.பழக எளிமையானவர் ,
அன்புடன் ,
கோவை சக்தி
Post a Comment