November 4, 2010

கொடூரங்கள்....

ஒரு பத்திரிக்கையாளன் உணர்ச்சிவசப்படக்கூடாது. நிகழ்வுகளை பதிவு செய்வதே அவனது கடமை என்றாலும், சில நேரங்களில் உணர்ச்சிவயப்படுவதை தவிர்க்க முடிவதில்லை. உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பதற்கு இயந்திரங்களால் மட்டுமே முடியும். ரத்தம், காயம், மரணம், சோகம், மகிழ்ச்சி என்று பலவற்றை பத்திரிக்கை தொழிலில் தினம் தினம் சந்திக் கமுடியும். அவற்றில் சில சம்பவங்கள் நெஞ்சை பிழியச் செய்துவிடும். கடந்த வாரம் கோவையில் குழந்தைகளுக்கு கொடூர வாரமாக அமைந்துவிட்டது. முதல் சம்பவம், பள்ளிக்குழந்தைகளான முஸ்கின், ரித்திக் ஆகியோர் கா
ர் டிரைவர்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்தது. முதலில் தகவல் வந்த போது, குழந்தைகள் வழக்கம் போல எங்காவது ஓடியிருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் கால்டாக்சி டிரைவர்களால் கடத்தப்பட்டதும், பின்னர் 10 வயதே நிரம்பிய பிஞ்சு பெண் குழந்தையை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அக்காள், தம்பி இருவரையும் வாய்க்காலில் வீசி கொலை செய்தனர் என்ற தகவல்கள் கிடைத்த போது மனம் வலித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. குழந்தைகள் பணத்திற்காக முதலில் கடத்தினர், பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்று போலீசார் கூறினாலும் இது ஒரு நாளில் நடந்த ஒரு சம்பவம் என்று விடமுடியவில்லை. இது ஒரு சமூக அவலத்தின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். இந்த பாதகர்களை தூக்கில் போடுவதோடு பிரச்சனை முற்றுப்பெற்றுவிட்டதாக கருதமுடியுமா? குற்றவாளிகள் இருவரும் 24 வயதை தாண்டாதவர்கள். திருமணமானவர்கள். அவர்களில் ஒருவனுக்கு குழந்தையும் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் எப்படி மிருகமாக மாறினார்கள்? அவர்களை மிருகமாக மாறச்செய்தது எது? அரசும், அதிகாரிகளும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
* பெருகி வரும் சுயநலம் தான் இதற்கெல்லாம் மூலக்காரணம் என்பது எனது கருத்து. தாங்கள் வசதியாக வாழ வேண்டும், தனக்கு பணம் வேண்டும் என்பதற்காக பிஞ்சு குழந்தை என்பதையும் பார்க்காமல் கடத்தி, தங்களது கேவலமான ஆசைக்காக குழந்தை என்றும் பாராமல் பலாத்காரம் செய்தது கார் டிரைவர்களது சுயநலம். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வசதி இருந்தும் தனி வாகனம் வைத்து அனுப்பாமல் கால்டாக்சியில் அனுப்பிய பெற்றோர்கள், தங்களுக்கு வருமானம் வந்தால் போதும், தங்கள் பள்ளி வாகனம் செல்லாத இடங்களில் இருந்தும் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளும் பள்ளி நிர்வாகம், மாநகர போலீசின் தலைவலியில் நாம் எதற்கு அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ரூரல் போலீசின் எஸ்கேப்பிசம் எல்லாமே ஒருவகையில் சுயநலம் தான். ( குற்றவாளியின் போட்டோவை அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு முன்பாகவே வெளியிட்டு தண்டனையிலிருந்து அவன் தப்பிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் சுயநலத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும்).
*தேவையற்ற நவீன வசதிகளும் சமூக சீரழிவிற்கு காரணமாக உள்ளது. சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்தால் நவீன செல்போன்களை சிறுவர்களும் வாங்கிவிட முடியும். அதில் 10 ரூபாய் செல்வில் இன்டர்நெட் வசதி பெற்று வக்கிரமான ஆபாச இணைய தளங்களையும் பார்த்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவமாணவியருக்கு கேமரா செல்போன்களை பெற்றோர்கள் எதற்கு வாங்கிக் கொடுக்கிறார்கள்? ஆபாச புத்தகங்களை படித்தால் மிகப்பெரிய குற்றம்.... ஆனால் அந்த ஆபாச புத்தகங்களையே செல்போன் வடிவில் வாங்கிக் கொடுத்து ஆபாச வீடியோக்களை பார்க்கும் வசதியை பெற்றோர்களே ஏற்படுத்திக் கொடுக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. கேமரா செல்போன்கள் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது சமூக சீர்கேட்டை தடுக்க உதவும். பிஞ்சுக்குழந்தைகளை கொலைசெய்த பாதகர்கள் இருவரும் ஆபாச படங்களை பார்த்து அதைப்போலவே நடந்து கொண்ட வக்கிரத்தை நினைத்து பார்த்தலே உள்ளம் பதறுகிறது.
* குற்றவாளிகளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும், உடனடியாக என்கவுண்டரில் தீர்த்துக்கட்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று ஆளாளுக்கு உணர்ச்சி வேகத்தில் பேசினாலும், இதை "மயான வைராக்கியமாகத் தான்' கருதுகிறேன். இன்னும் சில நாட்களில் இந்த சம்பவத்தை மக்கள் மறந்து அன்றாட வாழ்க்கையில் ஆழ்ந்து போய்விடுவார்கள். அப்போது மிருகங்களான இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக "மனித உரிமை' ஆர்வலர்கள் களத்தில் இறங்கிவிடுவார்கள். பின்னர், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்கும், விடுதலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து கற்பழிப்பு, கொலை போன்ற படுபாதகங்களை செய்யும் கொடூரர்கள் சட்டத்தின் பிடியில் தப்பித்துக் கொண்டிருக்கும் போது என்கவுண்டர்கள் நிகழுகின்றன. இதை அரசியலாக்கி சம்மந்தப்பட்ட போலீசாரை சிறையில் அடைக்கும் நிலை நாட்டில் தோன்றிவிட்டது. அதனால் இனி என்கவுண்டர் செய்ய எந்த போலீஸ் அதிகாரியும் துணிய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதன் விளைவை பொதுமக்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
*நம் நாட்டில் தன் உயிரை காப்பாற்றிக் கொல்ல இயலாத சிறுவர்களை கொடூரமாக கொலை செய்தாலும் சரி, சமபலத்தில் உள்ள இருவர் ஒருவரை ஒருவர் தாக்கி கொலைசெய்தாலும் சரி, குண்டு வைத்து சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று கொத்துக்கொலைகளை செய்தாலும் சரி... ஒரே இபிகோ 302 தான். அதிகபட்சம் தூக்கு தண்டனை. அதுவும் உடனே நிறைவேற்றப்படாது. கருணை மனு என்று குற்றவாளிக்கு சாதகமானவை நம் நாட்டில் ஏராளம். சட்டங்கள் கடுமையாகி, குற்றங்கள் மக்கள் மனதிலிருந்து மறைவதற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் மீண்டும் அதே குற்றங்கள் நடக்காது.... இது உங்கள் சிந்தனைக்கு!
இதுதவிர சக மாணவர்களின் காதல் கிண்டலால் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது, பொள்ளாச்சியில் மின்வேலியில் சிக்கி 6 ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் போன்றவையும் என் மனதில் ரணத்தை ஏற்படுத்தியது.

No comments: