October 13, 2010

செய்திக்காக பயிற்சியா.... பயிற்சிக்காக செய்தியா?

காவல்துறையினர் உடலை ஸ்லீம்மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. காவல்துறையில் சேரும் வரை உடலை ஸ்லீம்மாக வைத்துக் கொள்பவர்கள் ஆயுதப்படையில் இருக்கும் போது கூட அதை அப்படியே தொடருகிறார்கள்.
ஆனால் ஸ்டேசன் டியூட்டி எனப்படும் காவல்நிலையப்பணிக்கு வந்த பின்னர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதது, உணவு சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் தொந்தியும், தொப்பையுமாகிவிடுகின்றனர். அதனால் தொப்பை என்றாலே போலீஸ் என்று டிரேட் மார்க் ஆகிவிட்டது.
கோவை மாநகரத்தில் உடல் பருமன் உள்ள போலீசாரின் தொப்பையை குறைக்க கமிஷனர் சைலேந்திரபாபு இரண்டு நாள் உடல் பயிற்சி வகுப்பை ஆரம்பித்திருக்கிறார். சனி, ஞாயிறுகளில் 60 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
6 மாதத்திற்குள் நகரில் உள்ள அனைத்து உடல் பருமன் போலீசாருக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார். உடற்பயிற்சி, இயற்கை உணவு, மருத்துவ பரிசோதனை, யோகா என்று போலீசாரின் நலனுக்காக நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பை நிச்சயம் வரவேற்கலாம். ஆனால் போலீசாரின் வேலைப்பளுவை குறைத்து நேரத்திற்கு சாப்பிட, உறங்க ஏற்பாடு செய்ய முடியாதா என்று கேட்ட போது அதற்கு கமிஷனர் சைலேந்திரபாபு, அது முடியாது என்று கூறி சிரித்தார்.
பின்னர் எப்படி இந்த பயிற்சியால் பலன் கிடைக்கும் என்பது தான் மதிப்பு வாய்ந்த கேள்வி.... எல்லாம் சரி... போலீசாரின் நலனில் அக்கறையுள்ள கமிஷனர், உடல் பருமன் உள்ள போலீசாருக்கு மீடியா முன்பு பயிற்சி அளித்து அவர்களின் தொப்பைகளை பிளாஷ் மழையில் நனைய வைத்ததை தவிர்த்திருக்கலாம் என்பது போலீசாரை நெளிய வைத்தது. இவரது விளம்பர ஆசைக்கு நம்மை பயன்படுத்திக் கொள்கிறாரே என்ற முணுமுணுப்பு சற்று அதிகமாகவே கேட்டது.

No comments: