March 25, 2013

‘த்தூ.... பிழைக்குமா இந்த பிழைப்பு?’

சமீபத்தில் கோவையில் புதிய கட்சி துவக்கவிழா ஒன்று நடந்தது. போதை பழக்கத்திற்கு எதிராக யாகம் நடத்துவோம், டாஸ்மாக் கடைகளில் சிறைபட்டுள்ள இப்பகுதி இளைஞர்களை மீட்போம் என்று தலைவர் மேடையில் முழங்கிக் கொண்டிருக்க... தொண்டர்களோ நடுரோட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து  புகைப்படக்கலைஞர் ஜாக்சன் அதை படம் எடுத்தார். உடனே ஆவேசமடைந்த 12 பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக தாக்கியது. பீர்பாட்டிலால் தலையில் அடிக்க ஜாக்சன் மயங்கினார். அவரிடமிருந்த விலைமதிப்புள்ள கேமரா, செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பறித்துக் கொண்டு ஓடிவிட்டது அந்த கும்பல். ஜாக்சன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர், பத்திரிக்கையாளர் ஆர்ப்பாட்டம் இதெல்லாம் நடப்பது தான். ஆனால் அதிர்ச்சியான ஒரு தகவலை மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.... ஜாக்சன் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை பத்திரிக்கையாளர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் பலர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சக பத்திரிக்கையாளரை தாக்கிய கட்சியினரிடமிருந்து கவரை பெற்றுக் கொண்டு வந்துள்ளனர் என்பது தான் அது. தன்னுடன் பணி புரியும் சக பத்திரிக்கையாளரை தாக்கியவர்கள் என்ற அருவறுப்பு கூட இல்லாமல் நடந்து கொண்ட இவர்களை கண்டால் பாரதியார் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்......‘த்தூ.... பிழைக்குமா இந்த பிழைப்பு?’

No comments: