December 3, 2010

பத்திரிகையாளர்களா? பவர் புரோக்கர்களா

ஆங்கிலம் பேசும் பர்கா தத் போன்ற டில்லி பத்திரிக்கையாளர்களின் "பணவேட்டை' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விவகாரங்களில் சந்தி சிரிக்கின்றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளியிடாமல் இருக்க பல நேஷனல் மீடியாக்கள் "லாபம்' பார்த்த விவகாரமும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. மீடியாக்களில் நடக்கும் கேவலங்களை மீடியாக்கள் தான் வெளியிட வேண்டும் என்பதை உணர்ந்த சில பத்திரிக்கைகள் தற்போது இவற்றை வெளிச்சமிட்டு வருகின்றன. இதையொட்டி தமிழக அரசியல் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அனைவரும் படித்தேயாக வேண்டும்..... இதே உங்கள் பார்வைக்கு...!
பத்திரிகையாளர்களா? பவர் புரோக்கர்களா?
என்.டி.டி.வி என்ற பிரபலமான சேனலின் தலைமைப் பொறுப்பில் உள்ள பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையின் எடிடோரியல் இயக்குனர் வீர் சங்வி உள்ளிட்ட பலர் மீதும் எழுந்துள்ள குற்றச்சாட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாறிப் போய்கிடக்கிறது. தேசிய அரசியலைக் கலங்கடிக்கும் தற்போதைய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் உள்ளுக்குள் போகப்போக நிறைய இடங்களில் மர்ம முடிச்சுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சில மர்ம முடிச்சுக்கள் மீடியா உலகத்தின் ஜாம்பவான்களாக பொதுமக்களிடம் தினந்தோறும் பேச்சாலும் எழுத்தாலும், தங்களை அறிவுஜீவிகளாகவும், யோக்கிய சிகாமணிகளாகவும் காட்டிக் கொண்டே உலவி வரும் ஒருசில கருப்பு ஆடுகளை, இப்போது வெளியுலகத்துக்கு தெரிய வைக்கும் புண்ணியத்தை ஸ்பெக்ட்ரம் செய்துள்ளது. பெயர் நீரா ராடியாவாம். இவர்தான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆல் இந்தியா ரேடியோ. வயது 50 ப்ளஸ். பிரிட்டனை சேர்ந்த என்.ஆர்.ஐ. தொழில் கார்ப்பரேட் லாபிஸ்ட். புரியும்படி சொன்னால், பெரும் பணக்கார தொழில் நிறுவனங்களுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாமே அரசு மற்றும் அதிகார வர்க்கத்திற்குள் ஊடுருவி காரியம் சாதிப்பதற்காக சம்பளம் கொடுத்து ராடியா போன்ற ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வதுண்டு. தாங்கள் விரும்பியதை செய்து முடிக்க எந்த வழிகளையும் மேற்கொள்ளத் தயங்காத தைரியசாலிகள் இவர்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அதிகார வட்டாரங்களில் இவர்களுக்கு இருக்கும் சகட்டுமேனி தொடர்புகளை வைத்து, அரசின் கொள்கைகள், விதிமுறைகளையே கூட மாற்றி காரியம் சாதிப்பார்கள். அரசியல், அரசாங்கம் ஆகியவற்றோடு எப்போதும் ஒட்டிக்கொண்டே நிற்பவர்கள் பத்திரிகையாளர்கள். அதிகார மையங்களுக்குள் எளிதில் நுழைந்து திரும்பும் ஆற்றல் மீடியாக்காரர்களுக்கு உண்டு. எனவே, மீடியாக்காரர்களையும் தங்களது காரியங்களுக்கு இதுபோன்று தரகர்களாக பயன்படுத்திக் கொள்வதுண்டு. இதனாலேயே, டெல்லி பத்திரிகையாளர்களில் பலரும் புரோக்கர் தொழிலையும் சீக்ரெட்டாக செய்து வருகின்றனர் என்பதும் பலரும் அறியாத செய்தி. இதுகூட, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். இத்தனை நாட்கள் இருட்டுக்குள் இருந்தது. இப்போது ராடியா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2009&ம் ஆண்டு மே, ஜூலை மாதங்களில் மட்டும் 104 முறை வருமானவரி இலாகாவால் ராடியாவின் போன் டேப் செய்யப்பட்டுள்ளது. அதில், யார் யாருடன் பேசினார் என்னென்ன பேசினார் என்ற விவரங்களை, ‘ஓப்பன் மேகசின்’ என்ற இணையதள பத்திரிகையும் ‘அவுட்லுக்’ இதழும் வெளியிட்டுள்ளன. ஒரு சிலரைத் தவிர வெகுஜன பத்திரிகைகள் எதுவுமே இதை செய்தியாக்கவில்லை. ராடியாவின் புரோக்கர் வேலைக்கு ஒத்து ஊதியதும் உதவி செய்ததும் முக்கிய பத்திரிகையாளர்கள் என்பதால், தனது சாதியைக் காட்டிக் கொடுக்க விரும்பாததே இதற்கு காரணம். ஆனாலும், இந்த டேப்பை ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆங்கில ஏட்டிலேயே இந்த தகவல் வந்துள்ளது என்று சில அரசியல்வாதிகள் மேற்கோள் காட்டுவதுண்டு. ‘ஆங்கில மீடியா என்றாலே அறிவாளிகளும் உண்மை விளம்பிகளும் மட்டுமே ஜீவிக்கக் கூடிய இடம்’ என்ற குருட்டு நம்பிக்கைகாரர்கள் இந்நாட்டில் நிறைய உண்டு. ஆனால், சரளமான ஆங்கிலத்தில் நாட்டு நடப்புகளை எல்லாம் தொண்டை வலிக்க தினமும் பேசும் பர்கா தத்தும், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மட்டுமே பேனாவை வளைத்து வளைத்து எழுதும் கட்டுரையாளர் வீர் சங்வியும் இந்த புரோக்கர் நீரா ராடியாவிடம் பேசும் பேச்சுக்களை வைத்துப் பார்த்தால் இவர்கள் பத்திரிகையாளர்களா இல்லை பவர் புரோக்கர்களா என்ற கேள்வியே எழுகிறது. உரையாடலை வைத்து பார்க்கையில், சர்வ சாதாரணமாக அதிகார வளையத்திற்குள் ஊடுருவும் வல்லமையைப் பெற்றுள்ளார் இந்த ராடியா. தான் விரும்பும் தகவலை உரிய நபருக்குக் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை பர்கா தத் மூலம் செய்கிறார். அதைவிட மிகப்பெரிய கட்டுரையாளராக கருதப்படும் வீர் சங்விக்கு, அவர் எழுதப்போகும் கட்டுரையில் என்னென்ன பாயின்ட்ஸ் வர வேண்டுமென்று டிக்டேட் செய்கிறார் ராடியா. இன்னும் பல முக்கிய மீடியா உலக ஜாம்பவான்கள் ராடியாவுடன் தொடர்பில் இருந்துள்ளது உரையாடலில் தெரிகிறது. ஏராளமானோர் ராடியாவின் ‘பே ரோலில்’ இருப்பதாகக்கூட ஒரு தகவல் உண்டு. ராடியாவும் பல முக்கிய பத்திரிகையாளர்களும் பேசும் அந்த உரையாடல், யூ டியூப்பில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்துவிட்டது. அந்தளவுக்கு இந்த கும்பலுக்கு செல்வாக்கு. டெலிகாம் இலாகா-விற்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதை, இந்த கார்ப்பரேட் மீடியா கூட்டணி முடிவு செய்கிறது அந்த டெலிபோன் உரை-யாடலில். ராடியாவுக்கு பக்கபலமாக இந்த பத்திரிகையாளர் செய்யும் ‘பவர்’ புரோக்கிங் நிச்சயமாக முகம் சுளிக்க வைக்கும் ரகமே. அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக வர வேண்டுமென்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்று அரசியல் சட்ட தார்மீக நெறி கூறுகிறது. ஆனால், அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக ஆக வேண்டுமென்பது குறித்தும் அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் தரப்பட வேண்டுமென்றும் இந்நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனி தரகர்களும், மீடியா உலகத்தின் முக்கிய பத்திரிகையாளர்களும் சேர்ந்து முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பதே ‘நீரா ராடியா எபிஸோட்’ உணர்த்தும் பாடம். ‘கழகத்தின் சார்பில் யார் யார் அமைச்சரா-வார்கள் என்பதை கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்...’ என்றெல்லாம் இனி வார்த்தைகளைக் கேட்கும் போது ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போலத்தான் இருக்கும் நமக்கு. வழக்கம் போல அதையும் தாங்கிக் கொள்ளவேண்டியதுதான்!
Thanks to Tamilagaarasial

2 comments:

வி.ஆர் said...

பத்திரிக்கைகள் ஆளும் அரசாங்கத்தின் வாய்கால்களாக இருக்கின்றன. ஆளும் மேற்தட்டு சராசரி உழைக்கும் மக்களுக்கு என்ன போதிக்க விரும்புகின்றனவோ அவற்றையே இலாபங்களுக்காக விற்க தொடங்குகின்றன.\

harikumar m said...

சுதந்திரத்திற்கு முன் கிழக்கிந்திய கம்பனியினரால் ஆளப்பட்ட நாம் இப்பொது இந்திய கம்பெனிகளால் ஆளப்பட்டு கொண்டிருக்கிறோம்... பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் செய்வதே தர்மம்...