முதல்வர் கருணாநிதியின் கனவு அவர் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் மாநாட்டிற்கு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். அதனால் தான் தமிழகம் முழுவதலிருந்தும் அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் அதே "பார்முலாவை' பயன்படுத்தி முதல் நாளில் ஆட்களை வரவழைத்தனர்.
ஆனால் தி.மு.க. கட்சிக்கொடிகள் கண்ணில் தென்படாமல், ஊடகங்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மாநாட்டை பற்றி மக்களிடம் கொண்டு சென்ற விழிப்புணர்வு மக்கள் கூட்டத்தை வரவழைத்துவிட்டது. கோவையில் யார் கண்காட்சி நடத்தினாலும் மக்கள் கூட்டம் குவிந்து வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பார்ப்பது வழக்கம். அதிலும் ஊடகங்களில் தொடர்ந்து ஆறு மாதங்களாக வெளிவந்த செய்திகள், அலங்கார ஊர்திகள் குறித்து தினந்தோறும் வெளியிடப்பட்ட எதிர்பார்ப்புகள் மக்களை அலை அலையாக வரச்செய்தன. ஆனால் இவர்களது கவனம் முழுவதும் கண்காட்சி, உணவு அரங்கு, அலங்கார ஊர்தி ஆகியவற்றை சுற்றியே இருந்தது. மாநாட்டு பந்தலுக்குள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மட்டுமே தென்பட்டனர். 5 நாட்களில் குறைந்தது 10 லட்சம் பேர்
கண்டு களித்திருப்பார்கள்.
மாநாட்டு நிகழ்ச்சிகளில் அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே முதல்வர் கருணாநிதியின் புகழ் பாடிய நிகழ்ச்சிகள் தான் ஏராளம். பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளார் முதல் திரைப்பட கவிஞர்கள் வரை அனைவருமே கருணாநிதியின் புகழ் பாடினார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சிறப்பு கருத்தரங்கில் குட்டி குட்டி கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்ததால் அவர்கள் அடித்த ஜால்ரா சத்தத்தை முதல்வராலேயே தாங்க முடியாத அளவிற்கு போனது. ஆனாலும் சத்தம் குறையவில்லை. மாநாடு முழுவதுமே இதை காணமுடிந்ததால் கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை காது கொடுத்து கேட்க முடியவில்லை. ஆய்வரங்கம் நிகழ்ச்சிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பங்கேற்பாளர்கள் வரவில்லை என்பது உண்மை.
தமிழ் தெரியாத பலரையும் தமிழறிஞர்களாக புகழப்பட்டதும் நடந்தது. இணைய கருத்தரங்கில் பெரும்பாலும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஒன்றிரண்டு கருத்தரங்குகள் நல்ல கருத்துக்களை கொண்டிருந்தாலும் கேட்கத் தான் ஆளில்லை.
போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது நல்ல பலனை தந்தது. ஆனாலும் சில அதிகாரிகள் டுபாக்கூர் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என்று தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கியிருந்தது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
20 ரூபாய் பெருமானமுள்ள உணவை 60 ரூபாய்க்குவாங்கி அதை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தது, வளர்ச்சிப்பணிகள் தரமில்லாமல் அவசர கதியில் முடிக்கப்பட்டது, மாநாட்டு அரங்கங்களில் டன் கணக்கில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது, அலங்கார ஊர்திகள் முதல் அனைத்து ஏற்பாட்டிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் "அள்ளியது'... என்ற குறைகளையெல்லாம் விட்டுவிட்டு பார்த்தால் மாநாடு வெற்றி தான்.
உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு அரசியல் நோக்கோடு நடத்தப்பட்டதல்லை, அது தமிழ் மொழிக்கான அரசியல் சார்பற்ற மாநாடு என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்ததை மக்கள் அப்படியே தான் ஏற்றுக் கொண்டு மாநாட்டிற்கு வந்தனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். ஆனால் இது தங்கள் கட்சிக்காக, ஆட்சிக்காக கூடிய கூட்டம் என்று கருதப்படுமானால் அது ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதே உண்மை.
சூட்கேஸ்க்குள் என்ன இருக்கு?
மாநாட்டின் மிகப்பெரிய வெற்றிக்கு பத்திரிக்கையாளர்களும் ஒரு காரணம். அதனால் பத்திரிக்கையாளர்களை கவனிக்காமல் இருப்பார்களா? சென்னையிலிருந்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு ( அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தவிர) ஒரு சூட்கேஸ், துண்டு, 2 ஜிபி மெமரி கார்டு ஆகியவற்றை அன்பளிப்பாக இறுதிநாளன்றே செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் விநியோகித்தனர். சூட்கேஸ்க்குள் "கனமாக' இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "காற்று' தான் காத்திருந்ததாக கேள்வி. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று இரவு முதல் விநியோகம் நடக்கிறது. சூட்கேஸ், துண்டு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்திலிருந்து பகிரங்கமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாங்கிக் கொள்ளாத நிருபர்களின் பங்கை என்ன செய்வது என்ற குழப்பமும் செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது. இதற்கிடையே சென்னையிலிருந்து கோவை பத்திரிக்கையாளர்களுக்கு போன் வந்தவண்ணம் உள்ளது. அதில் பல குரல்களும் கேட்கும் ஒரே கேள்வி, "உங்களுக்கு சூட்கேஸ்க்குள் லேப்டாப் வைத்து கொடுத்தார்களாமே உண்மையா?' என்பது தான் அது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை சொல்லக்கூட எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் வேண்டும் போல இருக்கிறது.

No comments:
Post a Comment