May 15, 2010

உளவுத் "திணறல்'

கோவை போலீசார் மத்தியில் கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் இது. கல்லூரி மாணவர் ஒருவர் தன் வீட்டு விசேஷத்திற்கு வந்தவர்களுடன் "உற்சாக பானம்' ஏற்ற (நாட்டில் இருப்பவர்கள் அனைவருமே இனி "குடி' மகன்கள் தான் போலும்) பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே அங்கு மது மயக்கத்தில் இருந்த கும்பல் ஒன்றிற்கும் கல்லூரி மாணவர் கும்பலுக்கும் மோதல், இதில் கல்லூரி மாணவருக்கு விரட்டி விரட்டி "மாத்து' விழுந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசார் வழக்கம் போல இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்து 5 தையல்கள் வரை போடப்பட்ட கல்லூரிமாணவரும், அவரை துவைத்து எடுத்தவர்களும் "சமாதான' ஒப்பந்தத்தில் கையெழுத்திட, வழக்கு ஏதும் பதியாமல் தங்கள் கடமையை போலீசார் முடித்துக் கொண்டனர். ஆனால் அடுத்த நாள் பத்திரிக்கைகளை பார்த்த போலீசாருக்கு வியர்த்துவிட்டது. நடந்த சம்பவங்கள் அத்தனையும் நேரடி விளக்கமாக பத்திரிக்கையில் வெளிவந்ததுடன், கொலை வெறி தாக்குதல் நடந்துள்ள போதும் சமாதான உடன்படிக்கைக்கு போலீசார் ஏற்பாடு செய்தது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இதைப்பார்த்த கமிஷனர் சைலேந்திரபாபு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கடுமையாக கண்டித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்பின்னர் தான் உளவுத்துறையினர் களம் இறங்கினர். நடந்தது என்ன என்று விசாரிப்பதற்கு பதில், நடந்த சம்பவம் எப்படி பத்திரிக்கைகளில் செய்தியானது என்பதை கண்டுப்பிடிக்கவே அதிக ஆர்வம் காட்டினர். ஒரு வழியாக கண்டே பிடித்துவிட்டனர். லோகு என்பவர் அந்த நேரத்தில் பாரில் இருந்ததாகவும், அவர் தான் நடந்த சம்பவங்கள் முழுவதையும் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளதாகவும் உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர் பத்திரிக்கையாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பது கூடுதல் தகவல். உடனே போலீசார் பரபரப்பானார்கள். பத்திரிக்கையாளர்களின் போன் விபரங்கள் அடங்கிய "கோவை டைரியை' கையில் எடுத்த உளவு அதிகாரிகள், அதில் பிரபல வார இதழின் சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவரின் பெயர் லோகநாதன் என்றிருப்பதைக் "துப்பறிந்து' கண்டுப்பிடித்தனர். உடனே கமிஷனருக்கு அதுகுறித்து ரிப்போர்ட் போடப்பட்டது. ஏதேச்சையாக இந்த விபரம் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் சம்மந்தப்பட்ட நிருபரின் கவனத்திற்கு வந்தது. "பார்' செல்லும் பழக்கம் இல்லாத அந்த நிருபர் அதிர்ந்து போய் துணைக்கமிஷனர் ஒருவரிடம் நேரடியாகவே உளவுத்துறையின் "துப்பறிதல்' குறித்து அதிருப்தியை தெரிவித்தார். அதன்பின் துணைக்கமிஷனர் விசாரித்ததில் அன்று "பார்' வீடியோ நாயகன் நுகர்வோர் அமைப்பு ஒன்றை சேர்ந்தவர் என்பதும், லோகு என்ற பெயரை பார்த்ததும் கோவை டைரில் உளவுத்துறையினர் துப்பறிந்ததும் தெரியவந்தது. "ஒரு ஆள் பாருக்கு செல்வாரா இல்லையா என்பது கூட சரிபார்க்காமல் என்ன ரிப்போர்ட் கொடுக்கிறீர்கள்?' என்று உளவுத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள கோவை மாநகரில் உளவுத்துறையின் தகுதி இந்த அளவிற்கு தான் உள்ளது... நம்மை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளிப்படையான பேச்சு உள்ளது.

No comments: