September 18, 2012

மௌனம் மகிழ்ச்சியை தரும்!


   16.09.2012 அன்று நடந்த கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பின் பொதுக்குழு காரசாரமாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு  நடந்த அமைதியான கூட்டம். மாற்று கருத்து கொண்ட நண்பர்களும் கடந்த ஒரு ஆண்டு செயல்பாட்டை பாராட்டினார்கள்.  முகம் மட்டுமே தெரிந்த நண்பர்கள் பலர் என்னிடம் தனியே வந்து, மறுபடியும் ஒரு ஆண்டு பணியை தொடர்ந்திருக்கலாமே  என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். என்னிடம் பாராட்ட மறந்த ஒரு சிலர் கூட நண்பர்களிடம் பாராட்டியதாக  தகவல்கள் கிடைத்தது. 
       பல்வேறு சிந்தனைகள், பல்வேறு குணங்கள், பல எண்ண ஓட்டங்கள் உள்ள நிர்வாக குழுவை ஒரு ங்கிணைத்து செல்லும் பணியை மட்டுமே நான் செய்தேன். மாலைகளும் வேண்டாம், கற்களும் வேண்டாம் என்ற எண்ணமே என்  ஒரு ஆண்டு பணி காலத்தில் இருந்தது. இதற்கு முன்பு இருந்த நிர்வாகிகள் என்னை முழுமையாக செயல்பட அனுமதித்தனர்.  
    ஆனாலும் இந்த ஒரு ஆண்டு பணிக்காலம் மகிழ்ச்சியை மட்டுமல்ல வலியையும் அளித்திருந்தது. எனது பிளாக் கூட ஒரு  ஆண்டு மௌனம் காத்தது.  என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பதிவிட துவங்கியுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு சுவாரஸ்யமான விஷயங்களை தரும் என்று நம்புகிறேன். படியுங்கள்.... கருத்துக்களை பதியுங்கள்.

       கோயம்புத்தூர் பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளராக 18.09.2011 அன்று 93 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றேன்.  பாரம்பரியமிக்க கோயம்புத்தூர் பிரஸ்கிளப் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்களால் அலங்கரிக்கப்பட்ட பொறுப்பு இது. ஆனா லும் அவர்கள் பொறுப்பில் இருந்த போது இருந்த எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கைகள், அதிக ஊடக பிரதிநிதிகள்  உறுப்பினர்களாக இருக்கும் போது பொறுப்பேற்றேன். கடந்த கால நிர்வாகிகள் செய்த சாதனைகள், சந்தித்த பிரச்சனைகள்....  இது தான் நான் செல்ல வேண்டிய பாதைக்கு விளக்கு வெளிச்சமாக இருந்தது. பொறுப்பேற்ற உடனேயே உள்ளாட்சி தேர்தல்  வந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள சக நிர்வாகிகள் வாய்ப்பளித்தனர். 
     இந்திய தொழில்வர்த்தக சபை(கோவை)  யுடன் சேர்ந்து ‘செழுமையான கோவை, செம்மையான மேயர்’என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அதற்காக அப்போதைய  இந்திய தொழில்வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. கிருஷ்ணனை நிர்வாகிகளோடு  சந்தித்தேன். தெளிவான மனிதர். எடுத்தவுடன் பாஸிட்டிவாக பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.  அனைத்து வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றுவது உங்கள் பொறுப்பு என்று கூறி ஊக்கமளித்தார். 
     ஒரே மேடையில் பதிவு  செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் ஏற்ற வேண்டும். வடமாநிலங்களில் பல கட்சித் தலைவர்களும் ஒரே  மேடையில் ஏறுவது என்பது சகஜம். ஆனால் தமிழகத்தில் அந்நிலை இல்லை. ஆனாலும் திமுக, பாஜ, காங்கிரஸ், மதிமுக  உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உடனே சம்மதித்துவிட்டனர். அதிமுக வேட்பாளர் செ.ம.வேலுச்சாமியை அணுகிய போது,  ‘நான் எந்த மேடையிலும் ஏறி எனது வாதத்தை வலுவாக எடுத்து வைக்கத்தயார். ஆனால் அதிமுகவில் கட்சித் தலைமையின்  அனுமதியில்லாமல் முடிவெடுக்க முடியாது...’ என்றார். 
            வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளர்களில் அவர் முக்கியமானவர். அவர்  கலந்து கொள்ளாவிட்டால் நிகழ்ச்சி வெற்றியடையாது. எப்படியாவது அவரை கட்சித் தலைமையின் அனுமதிபெற்று கலந்து  கொள்ள செய்ய வேண்டும் என்று என்னோடு இருந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு துடிப்பு இருந்தது. முயற்சிகளும் நடந் தது.  நிகழ்ச்சி நடந்த 7.10.2011 அன்று காலை வரை அவர் கலந்து கொள்வது உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும்  அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, முதல்வரின் அலுவலக செயலர்கள் என்று பலரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில்  செ.ம.வேலுச்சாமி கலந்து கொள்ள அனுமதியை பெற்ற போது மணி மதியம் 2.00. 
          அரசியல்கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே  கலந்து கொள்ள அனுமதி என்ற போது, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட விஜய் ஆனந்த் தான் லோக்சக்தா என்ற கட்சியை  சேர்ந்த வேட்பாளர் என்றும், தன்னை மட்டும் அனுமதிக்காதது ஜனநாயகமாகாது என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் இருந்த  என்னிடம் தொடர்ந்து போனில் போராடினார். தினமணி புகைப்படக்கலைஞரும், செயற்குழு உறுப்பினருமான ஆனந்த், அவர்  அரசியல்கட்சி வேட்பாளராக இருந்தாரேயானால், நாம் அனுமதி மறுப்பது நிகழ்ச்சிக்கு கரும்புள்ளி ஆகிவிடும் என்று என்னிடம்  கருத்து தெரிவித்தார். என்ன செய்வது..... அந்த கணத்தில் சட்டென எனக்கு ஒரு யோசனை தோன்றியது, அனைத்து கட்சி  வேட்பாளர்களிடமே இதற்கான முடிவை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தேன்... அவர்கள் மறுக்க முடியாது என்று நம்பியதால்.  விஜய்ஆனந்த் என்பவர் தான் அரசியல்கட்சி வேட்பாளர் என்றும் தனக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோருகிறார்...  அனுமதிக்கலாமா என்று கேட்டேன்.... அனைத்து வேட்பாளர்களும் பெருந்தன்மையோடு அனுமதிக்க விஜய்ஆனந்த் 5 நிமிடம்  பேசினார்... நிகழ்ச்சி முடிந்தவுடன் வேட்பாளர் பட்டியலை வாங்கி பார்த்தபோது அவர் லோக்சத்தா கட்சியை சேர்ந்தவர் என்றாலும்  சுயேச்சை வேட்பாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது தனிக்கதை. 
          ஆனாலும் செழுமையான கோவை, செம்மையான மேயர்  நிகழ்ச்சி கோவையில் பதிப்பாகும் அனைத்து நாளிதழ்களிலும் பெரிய அளவில் பிரசுரமாகியிருந்தது. எனக்கு தெரிந்து முதல்  முறையாக கோயம்புத்தூர் பிரஸ்கிளப்பின் நிகழ்ச்சியின் விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதும், அனைத்து   பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானதும் இதுவே முதல்முறை என்று கருதுகிறேன்....வெற்றிகரமாக பார்க்கப்பட்ட இந்த  நிகழ்ச்சியிலும் ‘வலி’ இருந்தது.  பொதுவாகவே தன்னை முன்னிருத்திக் கொள்ளாமல் நிகழ்ச்சியை முன்னிருத்த வேண்டியது  பத்திரிக்கையாளர் கடமை. எனது இயல்பும் அதுவே. 
           ஆனால் ஒரு சிலருக்கு இருக்கும் விளம்பர ஆசையால் ஏற்பட்ட ‘வலி’  அது... ஒரு படகை நகர்த்த துடுப்பு போடும் போது தோள்கள் வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் படகு வெற்றிகரமாக ஆற்றில்  நகர்ந்து வேகமெடுக்கும் போது வலிகள் மறைந்து மகிழ்ச்சி நிறையும். இதைவிட வலி ஏற்படும் போது மௌனமாக இருப்பது   நம்முடன் பயணிப்பவர்களின் மகிழ்ச்சியை காக்கும். இதையே நானும் செய்தேன்.... படகு வேகமெடுத்தது.... 
அனுபவங்களை அடுத்த பதிவில் தொடருவேன்....

3 comments:

தமிழ்மலர் said...

நன்று, உங்களைப்போன்ற திறமையானவர்கள்/நேர்மையானவர்கள் தான் கோவை பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு முன் உதாரணம்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இணைய தளம் அமைத்ததும் மிகவும் பாராட்டுக்குறியது.

தமிழ்மலர் said...

நன்று, உங்களைப்போன்ற திறமையானவர்கள்/நேர்மையானவர்கள் தான் கோவை பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு முன் உதாரணம்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இணைய தளம் அமைத்ததும் மிகவும் பாராட்டுக்குறியது.

தமிழ்மலர் said...

நன்று, உங்களைப்போன்ற திறமையானவர்கள்/நேர்மையானவர்கள் தான் கோவை பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு முன் உதாரணம்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இணைய தளம் அமைத்ததும் மிகவும் பாராட்டுக்குறியது.