December 17, 2010

வீட்டுமனை "விதி'ப்படிதானா?

பத்திரிக்கைத்துறை அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஊடகத்துறையால் ஏற்படுகிறது. இதன்காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இந்த வீட்டுமனை சலுகையை பெற கடந்த பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் போராடிவருகின்றனர். சாதாரண பத்திரிக்கையாளரால் கோவை போன்ற நகரங்களில்
மார்க்கெட் விலையில் வீட்டுமனை வாங்குவது என்பது குதிரை கொம்பு என்பதோடு, பத்திரிக்கையாளர் நகரில் வசிப்பது அவசியத் தேவை என்பதால் இந்த கோரிக்கை நியாயமானது என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
கோவை பத்திரிக்கையாளரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எங்கு நிலம் அமையும், யார் யாருக்கெல்லாம் நிலம் கிடைக்கும் என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசும் டாபிக் ஆனது. குறைந்தது 5 ஆண்டு அனுபவம் உள்ள பத்திரிக்கையாளர்கள் தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்றனர்.
முதற்கட்டமாக 130 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் பேச்சு இருந்தது.( எந்த விபரமும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.) முதல்வர் கருணாநிதி 12.12.2010 அன்று கோவை வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் 10.12.2010 அன்று அவசர அவசரமாக குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியலை மக்கள் தொடர்பு அதி காரி காண்பித்தார். அதில் மிகப்பெரிய ஆச்சரியம் தகுதியற்ற பலரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பத்திரிக்கை ஆசிரியர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று 161 பேர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களிலிருந்து 130 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக 11.12.2010 அன்று குலுக்கல்(!) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்ய தகுதியின் அடிப்படையில் பல வாய்ப்புகள் இருக்க, குலுக்கல் முறையில் தேர்வு செய்வது எப்படி சரியாக இருக்கும், அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திட்டமிட்டப்படி குலுக்கல் நடந்து 130 ÷ பர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தகுதியான பலருக்கு அதிர்ஷ்டமில்லை. குலுக்கல் முறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், "20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இடம் கிடைக்கும் நிலை வந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்தால் இடம் கொடுப்பதையே நிறுத்திவிடுவார்கள்' என்று சிலர் கருத்து தெரிவித்ததால் தீவிரம் காட்ட முடியவில்லை.
ஆனாலும் தவறு செய்பவர்களையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் விதிமுறை மீறல்களை அனுமதிக்கலாமா என்ற மனஉளைச்சலும் ஏற்படாமல் இல்லை. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கும் விவகாரத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை....
* பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கும் அரசு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கு என விதிமுறைகள் ஏதும் இல்லையா?
* பயனாளிகள் தேர்வுக்கென அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவை அமைக்காதது ஏன்?
*20 ஆண்டுகளாக கோவையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் குலுக்கல் என்ற முறையால் வெளியில் நிற்க, நேற்று வந்த பத்திரிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வது நியாயமா?
*வீட்டுமனை என்பது பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவா அல்லது சொத்து சேர்க்கவா?
*கோவையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை தகுதியை புறந்தள்ளியது ஏன்?
*ஒரே குடும்பத்தில் பலருக்கு மனை ஒதுக்கீடு நியாயமா? அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கப்போகிறார்களா?
*உண்மையாகவே மக்களிடம் செல்லும் பத்திரிக்கைகள், பெயரளவிற்கு நடக்கும் பத்திரிக்கைகள் என்ற வித்யாசம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாதா?
* பத்திரிக்கை என்று பதிவு செய்திருந்தாலே அவர்களுக்கு வீட்டுமனை என்றால், நூற்றுக்கணக்கான பதிவு பெற்ற பத்திரிக்கைகள் உள்ளனவே... அவற்றிற்கெல்லாம் வீட்டுமனை வழங்க கோவையில் இடம் உள்ளதா?
*அனுபவம் அடிப்படையில் 130 பேரை தேர்வு செய்துவிட்டு அனுபவம் குறைந்தவர்களுக்கு அடுத்த கட்டத்தில் கொடுப்பது தானே நியாயம்?
* உழைக்கும் பத்திரிக்கையாளர் சட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் தானே பத்திரிக்கையாளர்கள்?
*கோவை செய்தியை கவனிக்கிறார்கள் என்பதற்காக பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க முன்வரும் மாவட்ட நிர்வாகம், சென்னையில் செயல்படும் பல நிறுவனங்களுக்கு கோவையில் நிருபர்கள் இல்லாமல் போன் மூலம் தகவல் பெற்று வெளியிடுகிறார்களே அவர்களுக்கெல்லாம் மனை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?
இன்னும் ஏராளமான கேள்விகள் பலரது மனதில் எழுந்துள்ளது. வருத்தங்களும் தான்....சிலர் நீதிமன்ற படியேறவும் தயாராகிவிட்டனர். பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை என்பது விதிமுறைப்படி ஒதுக்க வேண்டுமே தவிர, தலை"விதி'ப்படி ஒதுக்க கூடாது என்பதே என் நிலை.

3 comments:

Anonymous said...

குலுக்கல் நடத்தியது தவறு. இடமே தெரிவுசெய்யாமல் குலுக்கல் நடத்தியது மிகப்பெரிய தவறு.

மாவட்ட வருவாய் மற்றும் கூடுதல் நீதிபதி அதிகாரம் உள்ள ஒரு அதிகாரி முன்பு குலுக்கலுக்கு பத்திரிக்கையளார்கள் கைதட்டி ஆர்ப்பரித்தது உண்மையில் கேவலமாக இருந்தது.

எடிசனே இன்னும் வெளிவராத*************, கோவையில் நிருபராக ஒரு நாள் கூட பணிபுரியாத ****** ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்களே அல்லாத வடிவமைப்பு துறையாளர்கள், பெயருக்கு கூட வெளிவராத பத்திரிக்கையில் பணிபுரிவதாக சொல்வோர். பத்திரிக்கை முதலாளிகள்.

நமது முற்றம் என்பது எப்படி செய்திபத்தரிக்கை வகையில் வந்தது?

இப்படி ஏகப்பட்ட குழறுபடிகள்.
இன்னும் ஏராளம் இருக்கிறது.

அரசு அதிகாரிகளுக்கு டசுமார்க் பார் நண்பர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் என்றால் உண்மையாக உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு என்ன விலைஇருக்கப்போகிறது?

பத்திரிக்கையாளர்களுக்கு சமுதாயம் உச்சகவுரவத்தை தந்துள்ளது. இதை இப்படி கேவலப்படுத்திக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் கோவை பத்திரிக்கையாளர்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டுள்ளேன். வரட்டும் அப்புறம் இருக்கிறது வேடிக்கை.

உங்கள் பகிர்வுக்கு நன்றி.

-தமிழ்மலர்

December 17, 2010 4:48 PM

Anonymous said...

* பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கும் அரசு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கு என விதிமுறைகள் ஏதும் இல்லையா?

பதில் : பத்திரிக்கையாளர்கள் விதிமுறைப்படி என்றுமே நடக்காததால்

* பயனாளிகள் தேர்வுக்கென அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவை அமைக்காதது ஏன்?

பதில் : குழுவில் தகுதியான பத்திரிகையாளர் கோவையில் இல்லை அதனால்

*20 ஆண்டுகளாக கோவையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் குலுக்கல் என்ற முறையால் வெளியில் நிற்க, நேற்று வந்த பத்திரிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வது நியாயமா?

பதில் : 20 வருஷம் ஒரே துறையில் இருப்பவர்கள் சோம்பேறிகள் என்பதால்

*வீட்டுமனை என்பது பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவா அல்லது சொத்து சேர்க்கவா?

பதில் : இதுகூட தெரியாமலா நீங்களும் வாங்கறீங்க

கோவையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை தகுதியை புறந்தள்ளியது ஏன்?

பதில் : அது என்ன சொந்த வீடு கோவையில், மற்ற இடத்தில் உங்களை போல் இருப்பவர்களுக்கு கொடுக்கலாமா?

*ஒரே குடும்பத்தில் பலருக்கு மனை ஒதுக்கீடு நியாயமா? அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கப்போகிறார்களா?

பதில் : அது யாருக்குன்னு சொல்ல தைரியம் இல்லையா இல்ல... உங்கள் செய்திகள் போன்று கற்பனையா

*உண்மையாகவே மக்களிடம் செல்லும் பத்திரிக்கைகள், பெயரளவிற்கு நடக்கும் பத்திரிக்கைகள் என்ற வித்யாசம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாதா?

பதில் : செக்ஸ் புக் கூட அதிகமாக விற்குது (அட உங்க வெள்ளிக்க்கிழமை ஸ்பெஷலை சொல்லலை) அதுக்காக அதிகம், பெயரளவுன்னு சொல்லிட்டு

* பத்திரிக்கை என்று பதிவு செய்திருந்தாலே அவர்களுக்கு வீட்டுமனை என்றால், நூற்றுக்கணக்கான பதிவு பெற்ற பத்திரிக்கைகள் உள்ளனவே... அவற்றிற்கெல்லாம் வீட்டுமனை வழங்க கோவையில் இடம் உள்ளதா?

பதில் : ஆமான்னா, நீங்களும் குடும்பத்தினர் பெயரில் பல பத்திரிக்கைகள் பதிவு செய்வதற்கா...

*அனுபவம் அடிப்படையில் 130 பேரை தேர்வு செய்துவிட்டு அனுபவம் குறைந்தவர்களுக்கு அடுத்த கட்டத்தில் கொடுப்பது தானே நியாயம்?

பதில் : வாங்கறது பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தில் அல்ல, இதில் முதல் என்ன அடுத்த கட்டம் என்ன

* உழைக்கும் பத்திரிக்கையாளர் சட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் தானே பத்திரிக்கையாளர்கள்?

பதில் : அப்ப மிஷன் மேன், ஆபீஸ் பாய், டிரைவர் போன்ற அடிமட்ட வேலையாட்களுக்குதான் கொடுக்க வேண்டும்

கோவை செய்தியை கவனிக்கிறார்கள் என்பதற்காக பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க முன்வரும் மாவட்ட நிர்வாகம், சென்னையில் செயல்படும் பல நிறுவனங்களுக்கு கோவையில் நிருபர்கள் இல்லாமல் போன் மூலம் தகவல் பெற்று வெளியிடுகிறார்களே அவர்களுக்கெல்லாம் மனை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

பதில் : இதுக்குதான் நம் ஊருல்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சும்மா மாடு கொடுத்தா அதை மடியை பிடிச்சு பார்ப்பாங்களாம்.

இறுதியாக ஒன்று பத்திரிக்கையாளர்கள் என்பவர் செய்தியை உள்ளதை உள்ளப்படி கொடுக்க வேண்டுமே தவிர,ஊரே ஒன்று சொல்ல அதற்கு மாற்றாக நாம் பேசினால் அறிவாளி, நல்லவன் என்பது எடுப்படாது.

கோவை சூரியன்

Unknown said...

முகத்தை மறைத்துக் கொண்டு கருத்தை பதிவு செய்து ஆறுதல் அடைந்துள்ள அன்பு நண்பரே...!
நமது கருத்தை இவன் பதிவு செய்திருக்கமாட்டான் என்று நம்பி, ஆனாலும் பார்க்கலாம் என்ற நப்பாசையில் மீண்டும் எனது பிளாக்கிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள். நான் என்னை அடையாளப்படுத்திக் கொண்டு எனது பெயரிலேயே கருத்துக்களை பதிவு செய்யும்போது எனக்கு எதிர்கருத்துக்களும் வரும் என்பது எனக்குத்தெரியும். அதை வரவேற்கிறேன். எனது பதிவுகளில் தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதோ, நான் பணிபுரியும் நிறுவனத்தின் பின் ஒளிந்துகொள்வதையோ நீங்கள் பார்த்திருக்க முடியாது. தனிப்பட்ட நபர்களின் சில செயல்களால் ஏற்படும் சங்கடங்களையே நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அவர்களை காயப்படுத்தும் எண்ணம் ஏதும் இல்லாமல்....எனது பதிவுக்கு முழுக்க முழுக்க நான் தான் பொறுப்பே தவிர நான் பணிபுரியும் நிறுவனமோ மற்றவர்களோ இல்லை. நீங்களும், <உங்களது பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவே எனது கருத்தை விமர்சிக்கலாம்... இதில் நீங்கள் சங்கடப்படவேண்டியதில்லை. நான் பத்திரிக்கை துறையில் பணியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை நேர்மையாகவே நடந்து வந்திருக்கிறேன். இதற்கு பின்னாளிலும் அப்படியேத் தான் இருப்பேன். அப்படி இருக்க முடியவில்லை என்றால், இந்த வேலையை விட்டு போய்விடுவேனே தவிர எனது எழுத்தை விற்க என்றும் நான் தயாரில்லை. அதே நேரத்தில் சில பத்திரிக்கையாளர்கள் அன்பளிப்பை வாங்கினால் அவர்களை நான் எதிரியாக கருதுவதுமில்லை. அதனால் எல்லா பத்திரிக்கையாளர்களையும் நான் வேண்டப்பட்டவர்களாகவே கருதுகிறேன். அரசு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கும் சட்டப்படியான சலுகைகள் பெற எனக்கு தகுதி இருப்பின் அதை நான் பெறுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அதே நேரத்தில் முறைகேடாக சிறு குண்டுமணி அளவு பொருளைக்கூட நான் பெற்றதுமில்லை... பெற விரும்பியதுமில்லை. நான் நல்லவனா, கெட்டவனா என்பது எனக்கு எதிரே இருப்பவர்களின் மனநிலையை பொறுத்தது. என் மனசாட்சியை பொறுத்து எனக்கு நல்லது என்று படுவதை நான் செய்து வருகிறேன். வீட்டுமனை விவகாரத்தில், ஏழை பத்திரிக்கையாளர் அல்லது சீனியாரிட்டி என்று ஏதாவது ஒரு அளவுகோளை வையுங்கள் என்று அது தொடர்பான அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தினேன். என் கருத்து எடுபடாததால் எனது பிளாக்கில் அதை பதிவு செய்தேன். நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டு விவாதித்தால் எனது கருத்தை எடுத்துச் சொல்லவும், அது தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராகவே எப்போதும் இருக்கிறேன் நண்பரே....!