படிப்பதில் ஆர்வம் இருந்தாலும், இலக்கியம், கவிதை போன்றவற்றில் எனக்கு அவ்வளவு ஆர்வம் கிடையாது. இலக்கிய கூட்டங்களில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பிறர் மீது குறை சொல்லிக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருப்பதால் இலக்கியவாதிகள் என்றாலே எனக்கு சற்று அலர்ஜி. 27.01.2010 அன்று எழுத்தாளராக இருந்து பத்திரிக்கையாளராக மாறிய நண்பருடன் கோவை கலெக்டர் அலுவலக மரத்தடியில் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தோம். எழுத்தாளர்கள் விருது வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். "மதுரை பக்கத்து 6 ம் வகுப்பு மட்டுமே படித்த மூத்த எழுத்தாளர் அவர். மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எப்படியும் சாகத்ய அகாடமி விருதைவாங்கிவிட வேண்டும் என்று அந்த மூத்த எழுத்தாளருக்கு ஆசை. ஆனால் இதை நேரடியாக கட்சியில் கேட்கவும் அவருக்கு தயக்கம். எப்படி பெருவது என்று மூளையை கசக்கிய அவர், ஒரு திட்டத்தை வகுத்தார். அதன்படி சேலத்தைச் சேர்ந்த அவரது நண்பரும் மூத்த எழுத்தாளருமான ஒருவரை சந்தித்தார். "உங்களைப் போல எழுத்தாளரை பார்க்கவே முடியாது. நியாயப்படி இந்த ஆண்டு உங்களுக்கு சாகத்ய அகாடமி விருது வழங்கப்பட வேண்டும். வாருங்கள் டில்லி சென்று மதுரை எம்பி மோகன் மூலமாக விருதை பெற்றிடுவோம்' என்று கூறி அழைத்தார். அந்த எழுத்தாளரும் ஆர்வத்துடன் கிளம்பினார். இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதால் நேராக கல்கத்தா சென்று அங்கிருந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரை அழைத்துக் கொண்டு மூவரும் டெல்லி சென்றனர். அடுத்த நாள் காலையில் மோகன் எம்பியை சந்திக்க வேண்டும். லாட்ஜ் ஒன்றில் எழுத்தாளர்கள் தங்கியிருந்த போது நமது மூத்த எழுத்தாளர், சேலம் எழுத்தாளரிடம் அவரது எழுத்தைப் பற்றி (தனது திட்டப்படி) பேச ஆரம்பிக்கிறார். "உங்கள் எழுத்து சாதாரணமானதல்ல... உங்கள் எழுத்திற்கு ஞானபீட விருது தான் நியாயப்படி வழங்க வேண்டும். அதனால் மோகன் எம்பியிடம் ஞானபீட விருதுக்கு பரிந்துரை செய்யும்படி கூறுவோம்' என்று கூற, சேலம் எழுத்தாளருக்கோ பெரும் பூரிப்பு. அவர் பூரிப்பு அடைந்த வேளையில் நமது மூத்த எழுத்தாளர், <உங்களுக்கு ஞானபீட விருது கோரும்போது, முடிந்தால் எனக்கு சாகத்ய அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று கூற, அப்போது தான் மூத்த எழுத்தாளரின் திட்டம் சேலத்துக்காரருக்கு புரிந்தது. "எமகாதகனாக இருக்காரே...' என்று தனக்குள் புலம்புவதைத் தவிர அவருக்கு அப்போது வேறு வழியில்லை. மோகன் எம்பியை அடுத்த நாள் சந்திக்கின்றனர். எழுத்தாளர்களின் விருது கோரிக்கையை முழுவதும் கேட்ட அவர், மூத்த எழுத்தாளரின் திட்டத்தை உடனே புரிந்து கொண்டார். "நீங்கள் நேரடியாக வந்து என்னிடம் இப்படி கேட்க கூடாது. கட்சியின் மாநில குழு முடிவு செய்து கூறட்டும். அப்புறம் பார்க்கலாம்..' என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். ஆனாலும் இதிலெல்லாம் மனம்சோர்ந்துவிடவில்லை மூத்த எழுத்தாளர், அடுத்த ஆண்டு விருதை பெற்றுவிட்டு தான் ஓய்ந்தார்...'' என்று முடித்தார் அந்த நண்பர். கொசுறாக இன்னொரு தகவலையும் கூறினார்... "இந்த மூத்த எழுத்தாளர், தான் 6 வது வரை தான் படித்திருக்கிறோம் என்பதையே பல முறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார். தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி பத்திரிக்கை நிறுவன அதிபர்களை சந்தித்து தனது ஏழ்மை நிலையை கூறி அழும் இவர், தொடர்ந்து எழுதும் வாய்ப்பை பெற்று, அதற்கு வழக்கத்தைவிட பல மடங்கு அதிக சன்மானத்தையும் பெற்றுவிடும் திறமைசாலி இவர்'.... எழுத்து மட்டுமல்ல இவர்கள் வாழ்க்கையும் தலை சுற்ற வைக்கிறது.
No comments:
Post a Comment