January 26, 2010

பிரஸ்காரர்களை பிச்சைக்காரர்களாக்கிய பிஎஸ்என்எல்!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பிஎஸ்என்எல்லின் 3 ஜி தொழில்நுட்பம் துவக்கவிழா 23.01.2010 அன்று கோவையில் நடந்தது. மத்திய அமைச்சர் ராசா கலந்து கொண்டு 3 ஜி தொழில்நுட்பத்தை துவக்கி வைத்தார். எப்போதுமே பிஎஸ்என்எல் பிரஸ்மீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு "அன்பளிப்பு' வழங்குவது வழக்கம் என்பதால், ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். இதனால் பலருக்கு அமரக்கூட இடம் கிடைக்கவில்லை. விழா முடிந்ததும், அன்பளிப்பு வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளர்கள் ஒதுங்கிக் கொள்ள, பல முன்னணி பத்திரிக்கைகளின் நிருபர்கள் உட்பட பல நிருபர்கள் பிஎஸ்என்எல் பிஆர்ஓவை மொய்த்தனர். சூட்கேஸ் அளவிற்கு பேக் செய்யப்பட்டிருந்த அன்பளிப்பு பெட்டியை சந்தோஷமாக வாங்கி சென்றனர். "மத்திய அமைச்சர் மிகவும் பெருந்தன்மையானவர்...நீலகிரி பத்திரிக்கையாளர்களுக்கு 3 ஜி செல்போன் கொடுத்திருக்கிறாராம். நமக்கும் செல்போன் மட்டுமல்லாது வலுவாக ஏதாவது கவனித்திருப்பார்....' என்று பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று யூகங்களை அள்ளிவிட்டுக் கொண்டே சில நிருபர்கள் சென்றனர். அப்போது ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஆர்வமிகுதியால் நிகழ்ச்சி நடந்த அரங்கைவிட்டு வெளியேறியதும் பார்சலை பிரித்து பார்க்க... அன்பளிப்பு வாங்கிய அத்தனை பத்திரிக்கையாளர்களின் முகவும் "பொசுக்' என்று வாடிப்போனது. பார்சலை பிரித்த மூத்த பத்திரிக்கையாளரின் வாயிலிருந்தே சொற்கள் வந்து விழுந்தன..."பிரஸ்காரங்களையே பிஎஸ்என்எல்காரங்க பிச்சைக்காரங்களாக்கீட்டாங்கப்பா.... ஒரு தட்டு...4 டம்ளர்கள கொடுத்து ஏமாத்திட்டாங்களே.....!'

1 comment:

Athisha said...

நல்ல பதிவுங்க! ;-)) செம காமடி