3 இட்லி 300 ரூபாய்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சக பத்திரிக்கை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் கடைநிலை ஊழியர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். இயல்பாகவே நகைச்சுவை ததும்ப பேசும் அந்த ஊழியர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவு செய்கிறார். தனது மாவட்ட ஆட்சியர் அலுவலக பணி அனுபவங்கள் சில வற்றை பகிர்ந்து கொண்டார். அவற்றில் இரண்டு: "பத்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை கலெக்டராக இருந்தவர் இரவு டிபனுக்காக தனக்கு 3 இட்லி வாங்கி வேண்டும் என்று தனது தனி எழுத்தரிடம் கேட்டார். அவரோ 3 இட்லி வாங்கி வருமாறு அலுவலக உதவியாளரிடம் தெரிவித்தார். அலுவலக உதவியாளர் நேராக தாசில்தார் ஒருவரை சந்தித்தார். கலெக்டருக்கு இட்லி வாங்க வேண்டும் என்று கூற, அந்த தாசில்தார் 100 ரூபாயை அளித்துள்ளார். அதிலும் உதவியாளர் திருப்தியடையவில்லை. மேலும் இரண்டு தாசில்தார்களை சந்தித்து இட்லிக்காக மேலும் 200 ரூபாய் நிதி திரட்டிய அவர் நேராக சென்று 10 ரூபாய்க்கு இட்லி வாங்கி வந்து கொடுத்துவிட்டு வீடு திரும்பிவிட்டார். பணம் கொடுத்த தாசில்தார்கள் சும்மா இருக்கவில்லை, ஒவ்வொருவரும் தனித்தனியாக போன் போட்டு கலெக்டர் பிசியிடம் இட்லி வந்துவிட்டதா... நூறு ரூபாய் கொடுத்தோமே என்று விசாரித்தனர். அப்புறம் என்ன அடுத்த நாள் வேலைக்கு வந்த அலுவலக உதவியாளரிடம் விசாரணை நடந்தது. அவரும் 3 இட்லிக்கு 300 ரூபாய் நிதி வசூலித்ததை ஒப்புக் கொண்டார்.... இப்படியெல்லாம் பல கூத்து நடக்குது சார்' என்று கூறி சிரித்தார் அவர். "நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது மதிய உணவை கூட வீட்டிலிருந்து டிபனில் எடுத்து வந்துவிடுகிறார். இப்படி ஒன்று அல்லது இருவரைத் தான் பார்க்க முடிகிறது. 3 இட்லி கேட்ட கலெக்டருக்கு தன் பாக்கெட்டிலிருந்து 10 ரூபாய் கூட தனது இரவு உணவுக்காக செலவளிக்க முடியவில்லை என்பது லஞ்சம் நம் நாட்டில் எந்தளவு புரையோடிக்கிடக்கிறது என்பதை காட்டுகிறது' என்று தனது வருத்தத்தையும் சக பத்திரிக்கையாளர் பகிர்ந்து கொண்டார்.
அனுபவம் இரண்டு:
என் தம்பி திருமணத்திற்கு அதிகாரி போட்ட வசூல்!
ஊழியர் மேலும் தொடர்ந்தார்.... "சார் என் தம்பிக்கு கல்யாணம்... அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்தவரை சந்தித்து இரண்டாயிரம் பணம் கேட்டேன். உடனே வழங்கல் தாசில்தாரை தொடர்புகொண்ட அவர் ".....' வருவார். இரண்டாயிரம் கொடுத்தனுப்புங்கள் என்றார். அதன்படி நான் சென்ற போது அந்ததாசில்தார் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார். அதை வாங்கி øவ்ததுக் கொண்ட நேர்முக உதவியாளர் மேலும் 4 பேரிடம் அனுப்பி தலா 2 ஆயிரம் வாங்கி வரச்செய்தார். திடீரென அவரது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வந்தது. உடனே என்னையும் அழைத்துக் கொண்டு குழந்தையை பார்க்க சென்றார். செல்வதற்கு முன்பாக 3 பவுன் தங்க நகை வாங்கினார்(நான் வசூல் செய்து கொடுத்த பணத்தில் தான்) குழந்தை பார்ப்பதற்கு என்னையும் அழைத்து சென்றார். திரும்பி வந்தப்பின்னரும் பணம் தரவில்லை. மறுநாள் சென்று நாளை தம்பியின் திருமணம் என்றேன். அப்படியா... என்று சிறிது இழுத்தவர் இன்னொரு தாசில்தாரிடம் அனுப்பினார். அவர் இரண்டாயிரம் கொடுத்தார். அதை எனக்கு கொடுத்தனுப்பினார். சில மாதங்களில் அந்த அதிகாரி பணி ஓய்வு பெற்றார். நானும் ஒரு மரியாதைக்காக அவரை பார்க்கச் சென்றேன். அப்போது என்னைப்பார்த்து "அன்று தம்பி திருமணத்திற்கு என்று இரண்டாயிரம் பணம் வாங்கினாயே... எப்போது திருப்பித்தருவாய்?' என்று கேட்டு அதிர்ச்சியடையச் செய்தார்."சார்... என் தம்பி திருமணத்திற்கு பணம் தருவதாக நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வசூல்செய்தீர்கள்....' என்று நான் கூற... "சரி...சரி... பணத்தை வைத்துக் கொள்!' என்று அரைகுறை மனதுடன் கூறினார் சார்....' என்று முடித்தார் அந்த ஊழியர். ம்ம்ம்... இப்படியும் மனிதர்கள்
No comments:
Post a Comment